இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தில் திருநெல்வேலி சைவ வேளாளரின் பங்கு

*இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தூத்துக்குடியின் பங்கு!*

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டு 2024 ஆம் ஆண்டு இன்று நவ.26 கொண்டாடப்படுகிறது. அரசிலமைப்பு சட்டத்தில் தூத்துக்குடி மண்ணின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சி.வீரபாகுபிள்ளை தமிழில் கையெழுத்திட்டவர் என்பது பெருமைக்குரிய‌து.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இன்று 26.11.2024 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், மாண்பமை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விடுதலை இந்தியாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட மு.சி.வீரபாகுபிள்ளை தூத்துக்குடி மண்ணின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் அரசிலமைப்பு சட்டத்தில் தமிழில் கையெழுத்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்தி, நேரு, ராஜேந்திர பிரசாத், காமராஜர், சத்தியமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வந்து சென்ற, தங்கியிருந்து செயல்பட்ட இடம் தூத்துக்குடியிலுள்ள சிதம்பர விலாஸ். விடுதலைப் போராட்டத்தின் உறைவிடமாகத் திகழ்ந்த அந்த சிதம்பர விலாஸ் எம்.சி.வி. என்று கட்சித் தலைவர்களாலும், எம்.சி.வீரபாகு பிள்ளை என்று தொண்டர்களாலும் அழைக்கப்பட்டு வந்தார்.

1934இல் நெல்லை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உயர்ந்தார். விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்ற மு.சி.வீரபாகுபிள்ளை, திருச்சி, வேலூரில் சிறைத் தண்டனையை அனுபவித்தார். நேதாஜியின் ஆதரவாளராகவும், சோசலிஸ்டு பார்ட்டி நிர்வாகியாகவும் இருந்தவர், தூத்துக்குடி மில் யூனியன், துறைமுகத் தொழிலாளர் யூனியன் தலைவராகவும் பணியாற்றினார்.
1938 தேர்தலில் மு.சி.வீரபாகுபிள்ளை நெல்லை ஜில்லாப் போர்டு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். திருநெல்வேலி, தூத்துக்குடி நகரங்களை இணைக்கும் வல்லநாடு ஆற்றுப்பாலம் கட்டினார்.

இந்திய விடுதலையின்போது, இந்திய அரசியல் சாசன நிர்ணயசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அரசியல் சட்ட வடிவத்தை இறுதி செய்தபோது, அந்த சட்டப் புத்தகத்தில் தமிழில் கையெழுத்திட்ட ஒரே உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார் மு.சி.வீரபாகுபிள்ளை. விடுதலை இந்தியாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட மு.சி.வீரபாகுபிள்ளை தூத்துக்குடி மண்ணின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்று சிறப்பிற்குரியவராவார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *