களவு,கற்பு,பொய்,வழுவு என்றால் என்ன? தொல்காப்பியத்தின் கற்பியல் சூத்திரம் சொல்வது என்ன? வேளாண் மாந்தருக்கு கரணம் உண்டா? கிடையாதா?

வேளாளர்களின் கற்பொழுக்கம் எவ்வளவு சிறந்தது என்பதை கி.பி. 900 களில் வாழ்ந்த இளம்பூரணரும், கி.பி. 1275-1325 இல் வாழ்ந்த நச்சினார்க்கினியரும் விரித்து உரைக்கிறார்கள் தொல்காப்பிய சூத்திரத்திற்கு… இதனை பார்த்து சகிக்க இயலாத காழ்ப்புணர்ச்சிவாதிகள் சிலர் தொல்காப்பியர் கூறிய சூத்திரத்தின் பொருளையே திரிக்க பார்க்கிறார்கள்… கரணம் என்றால் வதுவைச் சடங்கு என இளம்பூரணரும், வேள்விச் சடங்கு என நச்சினார்க்கினியரும் கற்பியல் முதலாம் சூத்திரத்திற்கு உரை எழுதியுள்ளார்கள்… இந்த வேள்விச் சடங்கு வேளாண் மாந்தர்களுக்கு ஆகி வந்ததை உரைப்பதே தொல்காப்பியம் தான்…

அரச வைசிய சூத்திர வர்ணங்களால் ஆன வேளாளர்களில், நாலாம் வருணத்து வேளாண் மாந்தரின் திருமண முறையில் உள்ள கரணத்தை (வேள்விச் சடங்கை) பற்றி கூறும் தொல்காப்பிய சூத்திரங்கள் இரண்டு உள்ளன… ஆக, முதலில் இந்த சூத்திரங்களை பார்ப்போம்… பிறகு அதற்கு வேந்தர் கால உரையாசிரியர்கள் ஆன நச்சினார்க்கினியர் இளம்பூரணர் ஆகியோர் உரைகளை பார்ப்போம்… பிறகு இருவர் உரையையும் சேர்த்து கிடைக்கும் உறுதியான பொருளையும் பார்ப்போம்… பிறகு உரையாசிரியர்களின் உரையை தாண்டி அந்த சூத்திரங்கள் சொல்லும் வெளிப்படையான விஷயத்தையும் பார்ப்போம்…
~ ~ ~

தொல்காப்பிய மூல சூத்திரங்கள்:

தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல் மூன்றாம் & நாலாம் சூத்திரம்,

3) “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே”

4) “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

என்று சூத்திரம் வரைகிறார் தொல்காப்பியர்…
~ ~ ~

நச்சினார்க்கினியர் உரை விக ஆழமாக உள்ளதால் அதனை முதலில் இந்த 3 & 4 ஆம் கற்பியல் சூத்திரத்திற்கு என்னவென்று பார்ப்போம்…
~

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே

என்ற கற்பியல் 3 ஆம் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் உரை:

வேத நூல் சொல்லும் அந்தணர் அரசர் வணிகர் ஆகிய மேல் மூன்று வருணத்தாருக்கும் உரியதாக கூறிய கரணம் (சடங்குகள்) ஆனவை அந்தணர் முதலான (- அரசர்) குலங்கள் வரைக்கும் மகட்கொடைக்கு (கன்யா தானம் / திருமணம்) உரிய வேளாண் மாந்தர்க்கும் தந்திர மந்திர வகையால் (ஆன கரணத்திற்கு) உரித்தாகிய காலமும் உள்ளது என்றவாறு…

எனவே, முற்காலத்தில் கரணம் (என்ற தந்திர மந்திர வகை சடங்குகள்) நால் வருணத்தாருக்கும் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதும், இரண்டாம் ஊழி / இடைச்சங்கம் தொடங்கி வேளாளர்க்கு மட்டும் அவை தவிர்ந்தது என்பதும், முதல் சங்கத்தார்களும் முதல் நூலாசிரியர் (ஆன அகத்தியர்) கூறிய முறையாலேயே (நால் வருணத்தாருக்கும்) கரணம் ஒன்றாகவே சொய்தார் என்றும் கூறியவாறு ஆயிற்று… (மேலே ஆசிரியர் தொல்காப்பியர் காட்டிய) உதாரணம் இக்காலத்தது அன்று…

~ ~ ~

 

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப

என்ற கற்பியல் 4 ஆம் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் உரை:

இது வேத்தில் உள்ள கரணம் அல்லாமல் (சென்ற சூத்திரத்தில் சொல்லப்பட்டது வேதத்தில் உள்ள கரணம்), (இந்த சூத்திரத்தில்) ஆரிடம் (ஆர்ஷம்) ஆகிய கரணம் தோன்றிய வரலாற்று காரணம் கூறுகிறது…

ஆதி ஊழி (முதற்சங்கம்) கழிந்த பிறகு அக்காலத்தில் இருந்து இரண்டாம் ஊழி (இடைச்சங்கம்) முதலாக பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ரிஷிகளானவர்கள் மேல் மூன்று வர்ணத்திற்கு ஒரு வகை கரணமும், கீழ் வர்ணத்திற்கு வேறு வகையான கரணமும் கட்டினர் (உண்டு பண்ணினர்)…

இதிலே கூறப்பட்டது (கரணம் கூட்ட செய்தது) முதல் நூலாசிரியரை அல்ல, வடநூலோரைத்தான்… பொய் என்பது செய்த (களவு / திருமணத்திற்கு முன்னரான இயற்கையான உடலுறவு) ஒன்றை செய்யவில்லை என்று கூறுவது… வழுவுதல் என்பது (தனக்கான பெண்ணிடம் கல்யாணம் முடிப்பேன் – கற்பில் முடிப்பேன்) என கூறி, பின்னர் அதனை (திருமணத்தை) செய்யாது இருப்பது… இது அரசர் & வணிகர்க்கு எப்படி என்றால் முதலில் உடலால் புணர்ந்து விட்டு (களவு ஒழுக்கம்), பின்னர் செய்யத் தகுந்தவையை (கற்பொழுக்கத்தை – அந்த பெண்ணை மணமுடித்தல்) செய்யாமல், சடங்கு ஒப்புமை கருதி அந்தணர் போல அரசர் – வாணிகரும் தாங்கள் கடைபிடிக்க வேண்டிய (வர்ண ஆசிரம) ஒழுக்கத்தை மட்டுமே கடைபிடிப்பதும், ஆனால் களவொழுக்கத்தில் (திருமணத்திற்கு முன்னரான இயற்கையான உடலுறவு நடந்தபிறகு) வழுவுதலும், அதாவது களவிற் கூடிய பெண்ணை கல்யாணம் செய்யாமல் விடுவதும் அல்லது வேறு மணம் புரிவதும் அவர்களுக்கு இழுக்கு ஆம்… அதே போல மீதம் இருக்கும் வேளாளரும் இயற்கைப் புணர்ச்சி (களவொழுக்கமாம் திருமணத்திற்கு முன்னரான இயற்கையான உடலுறவு) நிகழ்ந்த பிறகு, பொய்யும் வழுவும் வந்து அந்த பெண்ணை திருமணம் செய்யாது (கற்பொழுக்கத்தில் முடிக்காமல்) இருப்பது வேளாளர்க்கு இழுக்கு ஆம்… இவற்றைக் கண்டு இருடிகள் (ரிஷிகள்) ஆனவர்கள் மேலோர் மூவர் ஆன அந்தணர் அரசர் வணிகர் என்பாருக்கு வேறு வேறு சடங்கினை (கரணத்தை) கட்டியும், கீழோர் ஆன வேளாண் மாந்தர்க்கும் களவு (திருமணத்திற்கு முன்னரான இயற்கையான உடலுறவு) இல்லாமலும் கற்பு (திருமணம்) நிகழும் எனவும் வேறு சடங்கினை (இந்த களவின்றி கற்பு எனும் சடங்கு மேல் மூவர்க்கு இல்லை) கட்டினார்களாம்… ரிஷிகள் நால் வர்ணத்தாருக்கு கரணம் கட்டுவதற்கு (உண்டு பண்ணுவதற்கு) முன்னர் தானாக தோன்றிய கரணமும் வேத நூலிலேயே உண்டென்மது தெளிவாக பெறப்படும் (சொல்கிறார் நச்சினார்க்கினியர்)…

காந்தர்வ வழக்கப்படி களவு நிகழாமல் கற்பு நிகழும் சிறப்பு விதி உண்டோ என்றால் அதுவும் உண்டு என்பதாம்… அது என்னவென்றால்,

தலைவனும் தலைவியும் எதிர்படும் காலத்தே, இருமுது குரவர்கள் ஆன இருவரது (தலைவன் & தலைவியின்) தந்தைகளும் தலைவன் & தலைவி இருவரையும் பார்த்து, இவளை மணமுடிக்க உனக்கு விருப்பமா என்று தலைவியின் தந்தை தலைவனை கேட்டலும், இவனை மணமுடிக்க உனக்கு விருப்பமா என தலைவனின் தந்தை தலைவியை கேட்டலும் என, இருவருக்கும் (தலைவன் & தலைவிக்கு) விருப்பம் என்றால், தாங்கள் இருவரும் காதல் வயப்பட்டு மெய்யுறு புணர்ச்சி (உடலுறவு) நிகழாமல் உள்ளப் புணர்ச்சி மட்டுமே நடந்து பிறகு கரணத்தோடு (சீர் சடங்குகளோடு) கற்பு (திருமணம்) நிகழ பின் புணர்வதே அதுவாம்… அதாவது களவு என்பது இங்கே மெய்யுறு புணர்ச்சி (உடலுறவு)… ஆனால் அது அப்படி (மெய்யுறு புணர்ச்சி) நடக்காது (அதற்குப் பதிலாக) உள்ளப் புணர்ச்சி மட்டுமே நடந்து பிறகு கரணத்தோடு திருமணம் நடப்பது அவ்விதியாம்…

இந்த நூல் ஆசிரியர் (தொல்காப்பியர்) முதல் ஊழியின் (முதற்சங்கம்) அந்தத்தில் (முடிவில்) வாழ்ந்தவர் என்பதால், அந்த ஊழியின் முடிவில் மக்களிடையே தோன்றிய பொய்யும் வழுவும், பிறகு அதற்கு எதிர்வினையாக அதனை சமாளிக்க இருடிகள் (ரிஷிகள்) ஆனவர்கள், மேல் மூவர்க்கும் & வேளாண் மாந்தர்க்கும் வேறு வேறு வகையான கரணமும் கட்டினர்… இது (ஆசிரியர் தொல்காப்பியர் சொன்ன கரணம் என்பது) களவு நடந்து பிறகு கற்பு நிகழும் வகை (மட்டுமே)… (ஆனால் களவு என்ற திருமணத்திற்கு முன்னரான இயற்கையான உடலுறவு நிகழாமல், இருவீட்டார் சம்மதத்துடன் கற்பு என்ற திருமணம் முதலில் நிகழும் வகையான கரணம் என்பது வேளாண் மாந்தர்க்கு மட்டுமே உண்டு, இரண்டாம் ஊழி / யுகம் முதலாக)…

~ ~ ~

சரி…

அடுத்து கற்பியல் 3 & 4 ஆம் சூத்திரங்களுக்கு இளம்பூரணர் உரைகளை பார்ப்போம்…
~

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே

என்ற கற்பியல் 3 ஆம் சூத்திரத்திற்கு இளம்பூரணர் உரை:

மேற்குலத்தாராகிய அந்தணர் அரசர் வணிகர் ஆகியோருக்கு புணர்த்த (உருவாக்கிய) கரணம் கீழோராகிய வேளாண் மாந்தர்க்கும் உரித்தாகிய காலமும் உண்டு என்றவாறு…

இதனால் சொல்லியது என்னவென்றால் முற்காலத்தில் கரணம் (சடங்குகள்), (நால் வருணத்தாருக்கும்) பொதுப்பட நிகழ்ந்தது என்றால் எல்லோருக்கும் (நால் வருணத்தாருக்கும்) ஆம் என்பதும், பிற்காலத்தில் வேளாண் மாந்தர்க்கு தவிர்ந்தது என்றும் கூறியவாறு போலும்… அஃது என்னவென்று தர்ம சாஸ்திரம் வல்லாரை கொண்டு உணர்க…
~ ~ ~

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்ற கற்பியல் 4 ஆம் சூத்திரத்திற்கு இளம்பூரணர் உரை:

இந்த சூத்திரம் கரணம் ஆகியவற்றை எதற்கு என உணர்த்துதல் சம்பந்தமாக…

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் முனைஞர் என்போர் கரணத்தை (சடங்குகளை) கட்டினர் (உண்டு பண்ணினர்) என்று சொல்வார்கள்…

(பொய் வழு என இந்த) இரண்டும் தோன்றுவது இரண்டாம் ஊழி / யுகம் காலத்தில் தான் என்பதால் முதல் ஊழியில் / முதற் சங்க காலத்தில் கரணம் (சடங்குகள்) இல்லாமலேயே இல்வாழ்க்கை (திருமணம்) நடந்தது என்றும், இவை (பொய் & வழு) தோன்றிய பின்னர் தான் கரணம் தோன்றியது என்பதும் கூறியவாறு ஆயிற்று… பொய் என்பது (களவு – திருமணத்திற்கு முன்னரான இயற்கையான உடலுறவு) செய்ததனை மறைத்தல்… வழு என்பது செய்ததை (களவியதை) அது முடிய நில்லாமல் (கற்பில் / திருமணத்தில் போய் நிற்காமல்) செய்யவே இல்லை என்று சொல்லி தப்பி ஒழுகுதல்… கரணத்தோடு முடிந்த காலையின் (கரணத்தோடு முடிந்த நாள்முதலாக – இரண்டாம் ஊழி / இடைச் சங்க காலத்தில் இருந்து) இவை இரண்டும் (பொய் & வழு) நிகழாமல் இருக்க வேண்டி கரணம் வேண்டுவதாயிற்று…
~ ~ ~

இருவர் உரையாலும் பெற்ற உறுதியான பொருள்:

இளம்பூரணர் சொல்வதையே தான் நச்சினார்க்கினியரும் சொல்கிறார் ஒன்றை தவிர…

இளம்பூரணர் மூன்றாம் சூத்திர உரையிலே‌ முதல் ஊழியில் / முதற் சங்க காலத்தில் நால்வர்ணத்திற்கும் ஒன்றாகவே கரணம் / சடங்குகள் நிகழ்ந்தன என்கிறார்… ஆனால் அவரே நாலாம் சூத்திர உரையிலே‌ முதலாம் ஊழியில் (நால் வருணத்தாருக்கும்) கரணம் இன்றியே இல்வாழ்க்கை/ திருமண வாழ்க்கை நடந்தது என்றும் கூறுகிறார்… இளம்பூரணர் ஏன் இப்படி மாற்றி மாற்றி முரண்பட்டு உரைக்கிறார் என்பது நச்சினார்க்கினியரின் உரையினாலே தெளியும்… நச்சினார்க்கினியர் மூன்றாம் சூத்திர உரையிலே‌ மகட்கொடைக்கு உரிய வேளாண் மாந்தர்க்கு தந்திர மந்திர வகையால் (ஆன கரணத்திற்கு) ஆன காலமும் உண்டு என்று உரைக்கிறார்… ஆக இதைவைத்து இளம்பூரணர் என்ன சொன்னார் என தெளியலாம்… அதாவது முதல் சங்க காலத்திலே / முதல் ஊழியிலே நால் வர்ணத்திற்கும் பொதுவாக கரணம் – சடங்குகள் நடந்தன… ஆனால் அவை தந்திர மந்திர வகையால் (வேள்வியோடு) ஆன கரணமாக இருக்கவில்லை… ஆனாலும் அது தானாக உருவான கரணம், அதுவும் வேதத்தில் சொல்லப்பட்ட கரணமே என்கிறார் நச்சினார்க்கினியர்… இதைத்தான் இளம்பூரணர் வேள்விச் சடங்கான கரணம் இல்லாமலேயே இல்வாழ்க்கை நடந்தது என்கிறார்… ஆக, முதற் சங்க காலத்தில் கரணம் இல்லாமல் இல்லை… ஆனால் அது தானாக தோன்றிய கரணமே… வேதத்தில் உள்ள கரணமே… பின்னர் இரண்டாம் ஊழி / இடைச் சங்க காலத்தின் தொடக்கத்தில் பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ரிஷிகளானவர்கள் மேல் மூன்று வர்ணத்திற்கு மந்திர தந்திர வகையால் ஆன (வேள்வியோடு) வேத முறையால் ஆன திருமணத்தையும், வேளாண் மாந்தர்க்கும் மேல் மூவர்க்கும் உருவாக்கியது போலவே மந்திர தந்திர வகையால் ஆன சடங்குகளோடு, ஆனால் வேதத்தில் சொல்லப்பட்ட ஒருவகையான களவின்றி கற்பொழுக்கமே முதலிலே வாய்க்கப்படும் வகையான திருமணத்திற்கு உரிய கரணத்தை (வேள்விச் சடங்கினை) உண்டு பண்ணினர் என்றும் பெறப்படுகிறது… நச்சினார்க்கினியர் முதலாம் ஊழியின் அந்தத்திலேயே தொல்காப்பியர் வாழ்ந்தார் என்றும், அன்றே பொய்யும் வழுவும் தோன்றி, பிறகு ரிஷிகள் கரணம் வகுத்தனர் என்கிறார்… ஆனால் அதே உரையின் ஆரம்பத்தில் இரண்டாம் ஊழியின் தொடக்கத்தில் தான் இது நடந்தது என்றும் கூறுகிறார்… ஆக இது நடந்தது முதற் சங்க காலத்தின் இறுதியும், இரண்டாம் சங்க காலத்தின் தொடக்கதையும் ஒட்டிய சில ஆண்டுகளுக்குள்ளே தான் என தெளியலாம்… இதைத்தான் இந்த காலத்தில் “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே” என்று சூத்திரம் சொல்கிறது என நச்சினார்க்கினியர் இளம்பூரணர் ஆகியோர் உரைக்கிறார்கள்…
~

ஆக இருவர் உரையையும் வைத்து தெளிந்த விஷயங்களை கீழே புள்ளி விபரங்களோடு பார்ப்போம்…

1) முதற் சங்க காலத்தில் / முதல் ஊழி காலத்தில் நால் வர்ணத்தாருக்கும் வேள்விச் சடங்கு ஆன கரணத்தோடு இல்வாழ்க்கை நடைபெறவில்லை… ஆனால் இது வேதத்தில் சொல்லப்பட்ட வேறு வகையான வதுவைச் சடங்கோடு திருமணங்கள் நடந்தன…

2) முதற் சங்க காலத்தின் இறுதியாண்டுகளுக்கும் இடைச் சங்க காலத்தின் தொடக்க ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட சில ஆண்டுகளில் தான் பொய்யும் வழுவும் தோன்றின… இந்த காலத்தில் தான் தொல்காப்பியர் வாழ்ந்தார்… இந்த காலத்தில் தான் வேளாண் மாந்தர்களுக்கு பொய்யும் வழுவும் தோன்றிய காரணத்தால் இயற்கையாக வேதம் சொல்லிய வேள்விச் சடங்கு அல்லாத வேறு வகையான வதுவைச் சடங்கு ஆன அந்த வகை கரணம் தடைபட்டு போகிறது…

3) பிறகு இந்த காலத்தில் தான் பொய்யும் வழுவும் வந்துவிட்டதே என ரிஷிகள் வந்து மேல் மூன்று வர்ணத்திற்கும் வேள்விச் சடங்கு ஆன கரணத்தை உண்டு பண்ணி அருளுகிறார்கள்… அதைப்போன்றே வேளாண் மாந்தர்களுக்கும் வேள்விச் சடங்கினை உண்டு பண்ணி அருளுகிறார்கள் ஆனால் இன்னமும் சிறப்பானது இது… இதில் களவு நடக்காமலேயே , இருவீட்டாரும் இயைந்து தலைவன் தலைவியை விருப்பம் கேட்டு, களவு நடக்கும் முன்னரேயே கற்பு வாழ்வு (திருமணம்) நடத்தி வைக்கும் ஏற்பாடான, அதற்குண்டான வேள்விச் சடங்கினை / கரணத்தை உண்டு பண்ணி அருளுகிறார்கள்… இதே காலத்தில் வாழ்ந்த தொல்காப்பியர் இதைத்தான் “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே” என குறித்துள்ளார் தொல்காப்பியத்தில்… அதாவது மேல் மூவர்க்கும் உருவாக்கிய கரணம் கீழோர்க்கும் உருவாக்கப்பட்ட காலமும் உண்டே என…
~ ~ ~

உரையாசிரியர்களை தாண்டிய உண்மை:

ஒரு பேச்சுக்காக இளம்பூரணர் உரை & நச்சினார்க்கினியர் உரை ஆகியவற்றை கடந்து, அவை இருப்பதையே மறந்து தொல்காப்பிய சூத்திரத்தை பார்ப்போம்…

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே…

சூத்திரர்க்கு வேட்டல் / வேள்வி சடங்கு கிடையாது…

ஆக, வேட்டல் உள்ள குடி யாவும் மேல் மூவருணக்குடியாகவோ அல்லது நாலாம் வருணமாய் இருந்து வருணம் ஏறிய குடியாகவோ தான் இருக்க முடியும்… அல்லது மூவர்ணக்குடியாக இருந்து உழவை விரும்பி கீழ் இறங்கியதன் காரணமாக தொடர்ந்து வந்த வேள்விச் சடங்காகவே தான் இருக்க முடியும்… அரசர்கள் வேளாளர் ஆனதும், வேளாளர்கள் அரசர் ஆனதும் என இரண்டு வகை வரலாறுகள் பல தமிழகத்தில் உள்ளதும் வழக்குதானே! அதனையும் நச்சினார்க்கினியர் இளம்பூரணர் அடியார்க்கு நல்லார் ஆகியோர் உரைத்தது தானே! ஆக தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரேயே வேளாளர் சூத்திரர் நிலையினர் மட்டுமே என்பதையும் தாண்டி, தர்க்க ரீதியாக இரு முனைகளை ஆராய்ந்தாலும், மேல் மூவர்ணத்திலும் வேளாளர்கள் இருந்துள்ளனர் என்பதற்கு இந்த தொல்காப்பிய சூத்திரமே சாட்சி…
~ ~ ~

சரி… இனி சுருக்கமாக மூன்று சங்க காலத்தின் காலத்தினை பார்ப்போம்…

8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இறையனார் அகப்பொருள் நூலுக்கு அதே காலத்தில் வாழ்ந்த நக்கீரனார் உரையில் முச்சங்க கால வரலாறு இடம் பெற்றுள்ளன… அதன்படி,

முதல் சங்க காலம் = 4440 ஆண்டுகள்…

இரண்டாம் சங்க காலம் = 3700 ஆண்டுகள்…

மூன்றாம் சங்க காலம் = 1850 ஆண்டுகள்…

மூன்றாம் சங்க காலம் கி.பி. 200 முடிந்ததால் அதன் காலம் = கி.மு. 1650 – கி‌.பி. 200 …

இரண்டாம் சங்க காலம் = கி.மு 5350 – கி.மு 1650…

முதல் சங்க காலம் = கி.மு. 9790 – கி.மு 5350…

ஆக இன்றைய தேதியில் கணக்கிட்டால் 12000 ஆண்டுகள் முன்னரேயே சிறந்த நாகரிகம், அரசு, நிறைவடைந்த மொழியோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்…

இளம்பூரணர் & நச்சினார்க்கினியர் ஆகியோர் உரையின் படி, தொல்காப்பியர் காலம் என்பது கி.மு. 5350 ஆகும்…
~ ~ ~

தொல்காப்பியர் காலத்தை 2000 ஆண்டுகள் மட்டுமே காலத்தில் முந்தையவர் என எடுத்துக்கொண்டாலுமே, உரையாசிரியர்களின் உரையை புறந்தள்ளிவிட்டு பார்த்தாலுமே, மனு தர்மத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் மேல் மூவர்க்கு உருவாக்கப்பட்ட வேள்விச் சடங்கு எதற்கு வேளாண் மாந்தர்களுக்கும் ஏன் ஆகி வந்தது என்ற கேள்வி வரும்… சூத்திரர்களுக்கு வேள்வி சடங்கு கிடையாது என்றபோது அது ஏன் வேளாண் மாந்தர்களுக்கு ஆகி வந்ததாக தொல்காப்பியரே கூறுகிறார் என்று கேள்வி வரும்… வரணும்…

~ ~ ~

தொல்காப்பிய சூத்திரங்களும் உரைகளும் – மூலம் 

——>>> எழுத்தாளர் முத்தூர் மணியன் கூட்ட ஜெய்வந்த் செல்வக்குமார் கவுண்டர் 

 

மேலும் தொடர்புக்கு : 

ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை  9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *