சைவம் Vs சங்கரர் மதம் தொடரும் கருத்து முரண்கள்! சைவத்தில் சங்கரர் மத திணிப்பு நடக்கிறது,கொந்தளிக்கும் சைவர்கள்

சைவம் vs சங்கரர் மதம்

நான் பள்ளிக் கூடம் படித்த காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் இந்திய மதங்கள் என்ற பகுதியில் தத்துவப் பகுதியில் ஆதிசங்கரர், ராமானுஜர் மற்றும் மத்வாச்சார்யர் பற்றி தான் படித்துள்ளேன். தவிர பக்தி இயக்க காலத்தில் சைவம் என்கிற இடத்தில் அப்பர் முதலான நால்வர் பெயர் வரும்.

சைவ சித்தாந்தம் போற்றும் திருக்கயிலாய மரபைப் பற்றியோ, மெய்கண்ட சாஸ்திரங்கள் பற்றியோ குறிப்புகளை பார்ப்பதே அரிது. வேதம் வேதாந்தம் பற்றி வரும் செய்திகளைக் காட்டிலும் ஆகமம் சித்தாந்தம் பற்றி ஒன்றும் இருக்காது. ஸ்ரீகண்ட சிவாச்சார்யர் பற்றிய குறிப்புகள் சுத்தம்.

இதில் ட்விஸ்ட் என்னவென்றால் நான் சைவத்தை ஸ்தாபித்தது சங்கரர் என்று தான் நம்பிக் கொண்டு வந்தேன். ஆனால் ஆகமம், சித்தாந்தம், திருமுறை, மெய்கண்ட சாஸ்திரம் என நுழைய ஆரம்பித்த போது தான் தெளிவுகள் உண்டானது.

என் பாட்டமார் அப்பார் அப்பச்சி கால திண்ணைப் பள்ளிக் கூடங்களில் கூட ஆறுமுக நாவலரின் பால பாடமே நூலாக வழங்கப்பட்டு வந்துள்ளது என்று தெரியவந்தது.

தமிழ் எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்த காலத்தில் உரைநடையில் படித்த போது விவேகானந்தர், இராமகிருஷ்ண பரமஹம்சர், வேதாந்தம், சங்கரர், பகவத் கீதை இப்படித் தான் எனக்கு சமய நூல்கள் தத்துவம் பற்றி அறிமுகம் ஏற்பட்டது.

ஆனால் கொஞ்சம் பின்னோக்கிய இலக்கியங்களை, செய்யுள்களை, வரலாறுகளை படிக்க ஆரம்பித்த பின் அவ்வளவு கொட்டிக் கிடந்தன சைவ சித்தாந்த இலக்கியங்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை ஒரு புரிதல் வேண்டும் – “சைவம் என்பது சமயம்; சைவ சித்தாந்தம் என்பது அதன் கொள்கை” என்ற புரிதல்!

பாரம்பரியமான எந்த சிவாச்சார்யாரும் சைவ ஆதீனமும் சைவம் வேறு சைவ சித்தாந்தம் வேறு என்று சொல்வதில்லை. அவர்கள் அதனை கற்கும் விதம் மட்டுமே மாறுபடுகிறது.

சிவாச்சார்யர்கள் ஸ்ரீகண்டர் மரபில் சமஸ்கிருத ஆகம வாயிலாகவும்..
ஏனைய வர்ணத்தார் மெய்கண்டார் மரபில் தமிழ் மெய்கண்ட சாஸ்திரங்களில் வழியிலும் கற்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சித்தாந்தம் என்கிற ஞான விசாரணையில் சிவாச்சார்யர்களும் மெய்கண்ட சாஸ்திரங்களை தொடர் இழையாக ஏற்று கற்றுப் பரவி வருகிறார்கள்.

அப்படி என்றால் ஆதிசைவர்களைத் தாண்டி மற்ற அந்தணர்கள் தமிழகத்தில் இருந்ததில்லையா என்பது கேள்வி. இருந்திருக்கிறார்கள். ஆனால் அத்தனை பேரும் சங்கரரை பின்பற்றியவர்களா, அல்லது ஆகமம் சொல்லும் மகா சைவர்களா அல்லது சங்கரருக்கும் பழமையான மடங்களை பின்பற்றி அவை வழக்கொழிந்து பிற்பாடு கற்றல்-கற்பித்தல் காரணங்களுக்காக அல்லது காலநிலையில் குருத்துவம் மாறியவர்களாக என்பது என்னைப் பொறுத்தவரையில் என்னளவில் ஆய்விற்குரியது என்பேன்.

சைவம் என்பது சிவப் பரம்பொருளிற்கு இணை வைப்பதை ஏற்றுக் கொள்ளாது. அப்படியிருக்க ஆகம வழி சைவ தீக்ஷை எடுத்துக் கொண்டோர் பேசும் அத்வைதமும் ஆதிசங்கரர் பேசிய அத்வைதமும் ஒன்று என்பது போல உருவாக்கப்பட்டிருக்கும் பிம்பமே இன்று பல குழப்பங்களுக்கு காரணம்.

சிவாத்வைதம் என்றும்
சிவ விசிஷ்டாத்வைதம் என்றும்
சுத்தாத்வைதம் என்றும் சைவத்தின் அத்வைதம் விதந்தோதப்படுகிறது. இந்த நுண்ணிய ஒப்புமை வேற்றுமைகள் இன்று பலருக்கும் கற்பிக்கப்படுவதில்லை.

அதே போல சைவ தீக்ஷை பெறாத சைவர்கள் ஸ்மார்த்தர்கள்(ஸ்மிருதிகளை பின்பற்றுவதால்) என்றும் அதனால் அவர்கள் ஸ்மார்த்த சங்கர மடத்துக்கு கீழ்பட்டவர்கள் என்றும் கூட ஒரு இணைய கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. சைவம் தீக்ஷை பெறாதவரை சைவரை சைவர் இல்லை என்கிறதா?
அல்லது ஸ்மிருதிகளை பின்பற்றுவதால் (ஸ்மார்த்தர் என்ற பெயர் வழங்குவதால்) சங்கரரின் அத்வைதத்தை பின்பற்ற வேண்டும் என்கிறதா? இதெல்லாம் என்ன வகை உருட்டு என்று தெரியவில்லை.

சரி இதெல்லாம் பொது மக்களுக்கு தேவை இல்லை. ஞான மார்க்க தேடல் உடையோருக்கே இதுபற்றிய கவலை எல்லாம் வேண்டும் என்றால்… ஞானத்திற்கு இட்டுச் செல்லும் சரியை, கிரியை, யோக மார்க்கங்களை முன்னிட்டு வழங்கப்பெறும் கோயில் வழிபாட்டு விதிமுறைகளில் பங்கு பெறும் பக்தர்கள் உள்ளத்தில் அதன் மரபைப் பற்றிய குழப்பத்தை விதைக்கலாமா? அந்த இடத்தில் அதன் நீட்சி சங்கர மடம் என்று திணிப்பது மரபு மீறல் அல்லவா!?

தற்கால திராவிட தனித்தமிழ் வழிபாட்டுக் கும்பல்களின் சைவ சித்தாந்த முன்னெடுப்பு மற்றும் ஆரிய வந்தேறி என்று கூறும் சமஸ்கிருத வேத நிந்தனை காரணமாகவும்…
இந்துத்துவம் என்கிற பெயரில் இந்து ஒற்றுமை என்ற பெயரில் சம்பிரதாயங்களை குழப்பியடிக்கும் போக்கும்…
பிராமண வர்ணம் என்கிற ரீதியில் ஆதிசைவரும் சங்கரர் வழியினரும் குழம்புவதும்…
மேலும் ஒரு முனையில் உண்டான எசக்கு பிசக்கான ஸ்மார்த்த பிராமணர் x சைவ வேளாளர் அதிகாரப் போட்டியும்…
இந்த நிலை ஏற்படக் காரணமாக இருக்கிறது.

எங்கள் கொங்கு நாட்டில் கூட எனது ஆய்வு வட்டத்தில் இது மாதிரி குழப்பங்கள் உள்ளது.
காஞ்சியை முற்றிலுமாக மறுதலிக்கும் போக்கும்…சிருங்கேரி மடத்துக்கும் குறைவுடையவர்கள் சிவாச்சார்ய குருக்கள் என்கிற போக்கும்…பாசுபதமே கொங்கர் சமயம் என்கிற போக்கும்…இடையில் ஸ்மார்த்த பாசுபத சைவம் என்கிற குழப்பியடி உருவாக்கலும், இப்போது அகச் சமயம் என்கிற புதிய உருவாக்கமும் நிலவி வருகிறது. அவற்றின் முழுத்தெளிவில்லை.

அவர்களிடமும் நான் முன் வைக்கும் கேள்விகள் இவை தான்.

1) நமது குலகுருக்களில் ஏகதேசம் யார்? – சிவாச்சாரியர்கள்.

2) சேரமான் பெருமாள் யார் வழியினரிடம் சேர கொங்க தேச ஆட்சியை ஒப்படைத்து கயிலாயம் செல்கிறார்? – சுந்தரர் என்னும் ஆதி சைவர் வழியினரிடம்.

3) மண்டல சதகங்களில் சைவம் பற்றிய சிவாச்சார்யர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளது ஏன் சங்கரர் பற்றிய குறிப்புகள் இல்லை? அவற்றில் சில சமணப் புலவர் உருவாக்கம் ஆயினும் சைவப் பாரம்பர்யத்தை சுட்டியவர்கள் ஏன் சங்கரர் பாரம்பரியத்தை சுட்டவில்லை?

4) மெய்கண்ட சாஸ்திரங்களில் வராத பிற சைவ இலக்கியங்களை பொதுவெனக் கொண்டாலும் ஏன் சங்கரர் பற்றிய குறிப்புகள் எதிலும் இல்லை? பெரிய புராணமோ, கோயில் தல புராணங்களிலோ உண்டா? (தேடிக் கொண்டிருக்கிறேன்).

இப்பதிவின் நோக்கம் ஆதிசங்கரர் மீதோ அவர்களைப் பின்பற்றுவோர் மீதான வெறுப்பு அல்ல; இன்று எங்கு பார்த்தாலும் முளைத்துக் கொண்டிருக்கும் சங்கர மட திணிப்பு ஆதிக்கத்தைப் பற்றிய பின்னணி பற்றியதாகும்.

சொல்லப் போனால் என்னுடைய மிகச்சிறந்த நண்பர்களில் சங்கர மதத்தவர்கள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் சைவம் சங்கர மத்தை மாயாவாதம் என்று கூறும் முறைமைகளின் நுணுக்கத்தை இருவர் நோக்கிலும் ஆய்ந்தறிந்து உண்மை என்ன என்று தெளிவுகொள்ள முயன்று கொண்டுள்ளேன்.

பொய்மை வந்து புரை தீர்த்து நன்மை பயக்க வேண்டிய அளவு சைவம் மங்கிப் போகவில்லை. ஆதலால் வரலாற்றை வரலாறாக உண்மை உருவில் ஏற்க வேண்டும் என்கிற தேடலில் தெளிவுகளை தேடி இப்பதிவு.

கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் : 

கொங்கு வேளாளர் 

அந்துவன் கூட்ட தனேஷ் கவுண்டர் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து எடுத்தாளப்பட்டது 

மேலும் தொடர்புக்கு : 

ஒட்டப்பிடாரம்

சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 

9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *