தமிழ் வேந்தர்கள் க்ஷத்திரியரா? சூத்திரரா? / தென்புலத்து அரசகுல வரலாறு!

தமிழ் வேந்தர்கள் “க்ஷத்திரியரா சூத்திரரா?” | தென்புலத்து அரசகுல வரலாறு…!

  தென்புல அரச மரபுகள் சேர, சோழ, பாண்டிய, களப்பிர, பல்லவ, சாளுக்கிய, ஒய்சாள, ஏயர் மற்றும் இதர வேளிர் மன்னர்கள் ஆவர்.
இவ்வரசர்கள், பல முறை எழுந்தும் வீழ்ந்தும், ஒருவரையொருவர் சிறைபடுத்தியும் மணவுறவு கொண்டும், போர் செய்தும் உள்ளனர். ஆயினும் இவர்களுடைய ஆட்சியின் பொதுச்சட்டமானது ‘மனுதர்மம்’ ஆகும். மனு எனும் க்ஷத்ரியர் (அரசர்) இயற்றிய இச்சூத்திரங்களின் தொகுப்பே ‘மனுஸ்மிருதி’ ஆகும். 
இந்நூல் பொ.ஆ.மு.1900யில் முதன்முதலில் இயற்றப்பட்டும் பின்னர் பிற்காலங்களில் பலமுறை சட்டங்களில் மாற்றங்களும் ஏற்பட்டிருக்கலாம். ஆயினும், தற்காலத்தில் கிடைக்கும்  பதிப்பினில் த்ரவிடர் (த்ராவிடர்என்றே எடுத்தாளப்படுகிறது. தென்புல அரசர்களைக்குறிக்கும் பதம்) பற்றிய குறிப்பானது காணப்படுகிறது.
“ஷநகைஸ்து கிரியாலோபாதிமா: க்ஷத்ரிய ஜாதய: |
வ்ருஷலத்வம் கதா லோகே ப்ராஹ்மணா அதர்ஷநேந ச || 
பௌண்ட்ரகாஷ் சௌட்ர த்ரவிடா:காம்போஜாயவநா: ஷகா: | 
பாரதா: பஹ்ளவாஷ் சீநா: கிராதா தரதா: கஷா: ||”
(மனுஸ்மிருதி 10:32,33)
அதாவது, க்ஷத்ரியர்கள் சிலர் த்விஜர்களுக்குரிய (இருபிறப்பாளர்க்குரிய) பூநூல் சடங்கு மற்றும் ப்ராஹ்மணர்களை குருக்களாக வைத்து, வேள்விகள் பற்றி தெரிந்துகொள்ளாததாலும், செய்யாததாலும் ‘வ்ருஷலத்வ’ நிலையை அடைந்தனர் என்றும், அப்படியான வ்ருஷலத்வக்ஷத்ரியர்களுள் த்ராவிடர்களும்அடங்குவதாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளனர். 
இதேபோல், த்ராவிடர்கள் வ்ருஷலத்வநிலையை அடைந்தனர் என ‘மகாபாரதத்திலும்’குறிப்பிடப்பட்டுள்ளனர்.
“தேஷாம் ஸவ்விஹிதம் கர்ம தத்பயான் நாநுதிஷ்டாம்
      ப்ரஜா வ்ருஷாலதாம் ப்ராப்தா ப்ராஹ்மணாம் அதர்ஷனாத்
த எதே த்ரமிடா: காஷா: புண்ட்ராஸ் ச ஸப்ரை: ஸக
      வ்ருஷலத்வம் ப்ரிகதா வ்யுத்தாநாத் க்ஷத்ரதர்மேத:”
(அனுகீத பர்வம் (அஸ்வமேத பர்வம்), மகாபாரதம்)
  இதனையே, ‘அனுகீதையும்’ க்ஷத்ரியர்கள்தம் வேதக்கிரியைகைளை செய்யத் தவறியதால் வ்ருஷலத்வ நிலை அடைந்தனர் என்று குறிப்பிடுகிறது. 
இந்த ‘வ்ருஷலத்வ’ நிலையை அடைந்த க்ஷத்ரியர்களை சூத்ரர் என்று மேற்கண்ட அனைத்து நூல் உரையாசிரியர்களும் உரைகண்டுள்ளனர். 
 இது ஒரு புறமிருக்க, ஸ்ரீமத்பாகவதம், பாரதம் உள்ளிட்ட புராணங்களில் பரசுராமன் (ப்ராஹ்மணன்) க்ஷத்ரியர்களின்இருபத்தொரு தலைமுறையை அழித்ததாக குறிப்புகள் காணப்படுகிறது. அதிலும், இராவணனை வீழ்த்தி அவனை சிறைவைத்த கார்த்தவீர்ய அர்ஜுனன் எனும் ஏயர்குல (ஹைஹய) மன்னரது சிரமானது பரசுராமன் எனும் ப்ராஹ்மணரால்துண்டிக்கப்பட்டது என்பதையும் இவைகளில் நாம் காணமுடிகிறது. 
மேலும், மணிமேகலையில் பரசுராமனுக்கு அஞ்சி சோழ மன்னன் ஒழிந்துகொண்ட தகவலானது கீழ்க்காணும் வரிகளால் தெரிய வருகிறது.
“மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்
தன் முன் தோன்றல் தகாது ஒழி நீ…” 
“…அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின்
பரசுராமன் நின்பால் வந்து அணுகான்…”
(மணிமேகலை, 22:30-40)
எப்படியோ, ‘ப்ராஹ்மணர் – க்ஷத்ரியர்’ ஆகியோர்க்கிடையான எதிர்ப்புகளால் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அது நேரடி போரா இல்லை வேறெதுமா என்பதைவிட 
அது தென்புல அரசகுலத்தவர்களின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவு. 
அப்படியானால், மூவேந்தர் உட்பட பிற தென்புல அரசர் யாவரும் ப்ராஹ்மணருடன் பகை கொண்டவர்களா, த்ராவிடர் யாவரும் வேதங்களை புறக்கணித்தனரா, என்றால், சட்டங்களை மீறிய க்ஷத்ரியர்கள் சட்டத்தின்படி வருணத்தில் வீழ்ந்தனர். பௌத்த, சமண சமயங்கள் க்ஷத்ரியர்களால் தோற்றுவிக்கப்பட்டு அதனை பாரதத்தின் பல்வேறு அரசமரபுகள் பின்பற்றியுனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமண சமயத்தை பாண்டியர், பல்லவர் உள்ளிட்ட பல த்ராவிட அரசகுலத்தோரும் பின்பற்றினர் என்பதை நாம் அறிவோம், இவைகளில் ப்ராஹ்மணர்களே குரு அல்லர். வேதங்களை த்ராவிடர் மறுத்தனரா என்றால் அக்குறிப்பு எங்கும் இல்லை. மாறாக, வேதத்தையும், புராணங்களையும் தமிழ் செய்து பாசுரம் பாடிய அரசர்களுமே தென்புலத்தில் இருந்துள்ளனர்.
ப்ராஹ்மணர்களை குருவாக கொள்தலை விடுத்தும், அவர்களை தண்டிக்ககூடாதெனும் மரபும் தென்னகத்தில் இன்றி, ப்ராஹ்மணர்களுக்கே த்ராவிட மரபினர் குருவாயும் ப்ராஹ்மணர்களை தண்டிக்க தனிப்படையும்‌ அமைத்துள்ளனர்‌ என்பதும் குறிப்பிடத்தக்கது.
ப்ராஹ்மணர்களை குருவாக கொண்டு வைதிக அனுஷ்டானங்களை செய்யாத த்ராவிட அரசகுலத்தோர் சூத்ரர்  நிலை அடைந்தனர் எனும்போது, அவர்கள் அரசரானது எங்கனம் எனில், ஹிரண்யகர்ப்பம் உள்ளிட்ட சடங்குகளை செய்து வ்ருஷலத்வம் அடைந்த தன் உறவினர்களிடமிருந்து தன்னை தனித்து அடையாளப்படுத்தி அரசாட்சி புரிந்தனர் என்பதை த்ராவிட அரசர்களது சாஸனங்கள் மூலமாகவே அறியலாம். 
ஆக, த்ராவிட அரசகுலமானது சூத்ர குலத்திலிருந்து உருவாகியதா என்றால், சூத்ரர் என்று ஆர்யவர்த்தத்தில் சொல்லப்பட்ட மரபாக அன்றி ப்ராஹ்மணர்களை கொண்டு அநுஷ்டானங்களை செய்யாததாலேயே அவ்வாறு சொல்லப்பட்டதால் இச்சூத்ரர்கள் வடபுல அல்லது ஆர்யவர்த்த அல்லது பிற பிரதேச சூத்ரருடன் ஒப்பிடத்தகுந்தோர் அல்லர். ‘சூத்திர குலம்’ எனும் பதம் முதலாவதாக கையாளப்படுள்ள இலக்கியம் பெரியபுராணமேயாகும். அதில், இளையான்குடி மாற நாயனாரின் குலத்தை ‘சூத்திர நற்குலம்’ என்றும் வாயிலார் நாயனாரின் குலத்தை ‘சூத்திர தொல்குலம்’என்றும் சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட இவர்களை, பிற்காலத்தே உமாபதி சிவாசாரியார் தம் ‘சேக்கிழார் புராணத்துள்’ வேளாளராக அடையாளப்படுத்துகிறார். ஆக, ‘சூத்திர’ எனும் சொல்லாடல் தமிழிலக்கியங்களில் வேளாளரை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு. மேற்கண்டோர், சைவ சமயிகளாகையால், வேதத்தைக்காட்டிலும் ஆகமவழியே நிற்கும் மரபுடையோர் சைவராகியமையாலும் ஆகமத்தின்வழியே இவற்றை அனுகவேண்டியது அவசியமாகும்.
சிவாகமங்களில் ‘சூத்ரா சுத்த குலோ தீபவா’என்று சூத்திர மரபினர், தூய்மையும் (நற்குலம்), உயர்வும் (தொல்குலம்) உடையவர் என்கிறது. இதனையே பெரியபுராணத்தில் சேக்கிழார் சுவாமிகள் எடுத்தாண்டுள்ளார். ஆகமம் த்ராவிட நாட்டிற்கே உரித்தானது, தமிழக சூத்திரர்கள் சிறப்பினையும் தொன்மையையும் பெற்றிருந்தகாரணத்தாலேயே ஆகமம் இவ்வாறு சுட்டுகிறது.
மேலும், தமிழ் நிகண்டுகளின் அடிப்படையில் சூத்திரர் என்பது ‘சூத்திரம் இயக்கும் இலக்கணக் கயிறு’ என்றும் ‘உயிர்களை இயக்கும் தொழில் புரிபவர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, சூத்திரம் அறிந்தோர் சூத்திரர் எனும் வகையிலும் இங்கு  குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக சூத்திரர் யாவர் என தமிழ்நிகண்டுகளைக்காட்டிலும் எதனையும் சாலச்சிறந்த சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது. 
தென்புலத்தில் சூத்ரர் எனும் பதத்திற்கும், நாலாவது வர்ணத்துக்கு நிகராகவும் தொல்காப்பியத்தில் சொல்லப்படுவது வேளாண் குலமேயாகும். தமிழ் நிகண்டுகளும் இலக்கியங்களும் சூத்திரர் என அடையாளப்படுத்தும் குலமும் வேளாண்மாந்தர் எனும் பதத்தின் நீட்சியான வேளாளரே ஆகும். மேலும் தொல்காப்பியர் அந்தணர், அரசர், வைசிகர், வேளாண்மாந்தர் என குலமக்களை சொல்லும்போது நாலாவது வருணத்தாரை சூத்ரர் (அ) சூத்திரர் எனும் பதத்தால் கையாளவில்லை என்பதன் மூலம், வேளாண்மாந்தர் அரசராதற்கு உரியராகையாலும் வடபுல சூத்ரரிடமிருந்து அவரை வேறுபடுத்துங்காலுமே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பது தெளிவு. ‘வேளாண்’எனும் பதத்தில் அவ்வளவு சிறப்பு என்னையெனில், வேளாண் எனும் பதத்தை பெருநெறி எனும் வகையில் ‘வேளாண் பெருநெறி வேண்டியவிடத்தும்’ என்று பொருளதிகாரம் களவியல் 23வது சூத்திரத்தில் குறிப்பிடுகிறார், காப்பியப்பெருந்தகை. 
மேலும், ஆயர், வேட்டுவர் என திணைமக்களையோ அல்லது அடியோர், வினைவலர் என ஏனையோரையும் கூட அவர் சூத்ர வர்ணத்துள் கொண்டுவராது அவர்ணராக அடையாளப்படுத்துங்கால் த்ராவிட சூத்ரரின் தனித்துவம் அறியப்படுகிறது. இவர்களின் சிறப்பை தொல்காப்பிய சூத்திரங்களை அடிப்படையாக கொண்டு மேலும் அறியலாம்.
குலம்     இயல்பு சூத்திரம்
வேளாண்
மாந்தர்
படை, கண்ணி, வில், 
வேல், கழல், தார், 
மாலை (பொன், மணி, 
முத்து),தேர், உழவு
பொருள்.
மரபு. 80, 81, 83
வைசிகர் படை, கண்ணி, வில், 
வேல், கழல், தார், 
மாலை  (பொன், மணி, 
முத்து), தேர், உழவு 
(எட்டு வகை உணவு 
பொருட்கள்), 
பொருள்.
மரபு. 79, 80,83
அரசர் படை, கொடி, கொற்றக்குடை, 
முரசு, குதிரை, யானை, 
தேர், மாலை, முடி, 
செங்கோல்
பொருள்.
மரபு. 72
இச்சிறப்புகள் இவர்களுக்கு மட்டுமா இல்லை, ஏனைய குடியினரும் இதற்குரியரா என்றால், ‘அன்னராயினும் இழிந்தோர்க்கில்லை’ என திணைக்குடியினரை, வர்ணக்குடியினரிடமிருந்து மரபியல் 84வது சூத்திரத்தில் காப்பியப்பெருந்தகை வேறுபடுத்திக் காட்டுகிறார்‌. 
மேற்கண்ட பட்டியலில், இருமூன்று மரபினராக புறத்திணையியலில் தொல்காப்பியரால் சொல்லப்பட்ட வேளாண்மாந்தருக்கும், வைசிகருக்கும் போர்க்குடி இயல்புகளும் உடன் உழவும், அவர்களிலிருந்து உயர்ந்த அரசருக்கு போர்க்குடி இயல்புகளும் சுட்டப்பட்டுள்ளது. ஆயினும், அரசர்கள் ‘பொன்னேர் மரபினர்’என்பதை நாம் சில தரவுகளால் அறியவியலும். இதிலிருந்து, ‘ஏர்கலப்பைக்கு உரியோரே அரசமரபினர்’ என்பது தெளிவு.
ஆக, த்ராவிட அரசர்கள் மனுதர்மப்படிசூத்ரராயினும் குல உயர்வு பெற்று ஆட்சிபுரிந்தனர், அதாவது தென்புல அரசகுலங்களானது வேளாண்குலத்திலிருந்தே எழுச்சிபெற்றது என்பது தெளிவு. வீழ்வதும் எழுவதுமே அரசகுலம் என்பது நாம் அறிந்த ஒன்றே. 
இதனையே, முடிவேந்தர்கள் சமகாலத்து உரையாசிரியர் நச்சினார்க்கினியர், ‘ஒளியராவர் மற்றை மண்டலத்திற்கு அரசராதற்குரிய வேளாளர்’ என கலித்தொகை உரையில் வேளாளரே அரசராக தகுதிபடைத்தோர் என்கிறார். 
இவ்வேளாளர்கள் நான்காம் வருணத்தோரேயாயினும் தூய்மையானவர்கள் என்பதாலும் வடபுல சூத்ரர் ஆகாமையாலும் ‘கஙகைகுலத்தார்’ என தம்மை பொதுவாக அடையாளப்படுத்திக்கொண்டனர். 
இதேபோல், இவர்கள் ‘பூமிபுத்திரர்’  எனவும் அழைக்கப்பட்டார்கள்.
தமிழகத்தில் தனக்கென மெய்க்கீர்த்தியுடன் தனியதிகாரமும் உடையோர் எனும்‌ பெருமையுடைய, இவர்களது சித்திரமேழி பெரிய நாட்டார் சபையின் மெய்க்கீர்த்தியானது ‘ஸ்ரீமத் பூதேவிபுத்ராணாம்’ என்றே தொடங்குகிறது. இதனையே சூடாமணி, பிங்கலந்தை போன்ற தமிழ் நிகண்டுகளானது வேளாளரை மண்மகள் புதல்வர் (பூதேவி புத்திரர்) என்கிறது. அரசர்கள் பொதுவாக, விஷ்ணுவின் அம்சமாக பூதேவி புருஷனாக சொல்லப்படுவார்கள், பூதேவிபுத்திரர் என்போரை மன்னரின் பிள்ளையான இளவரசர் என்பது பொருந்தும். 
ஆக, தமிழகத்தில் மன்னருக்கு பின்னவரான வைசிகர், வேளாண் மாந்தர் அரசராய்/ அரசகுலத்தில் இருந்து வீழ்ந்தோரே என்பது தெளிவு. தென்புலத்தில் க்ஷத்திரியர்,வ்ருஷாலத்வம் அடைந்தும் இதர மனுதர்மகாரணத்தாலுமே அதற்கு பிந்தைய இரு வர்ணமும் உருவாகியுள்ளதால் இவர்கள் ‘ஒத்த குலத்தினரே’ என்பது தெளிவு. இதற்கு சான்று என்னையெனின், முடிவேந்தர் சமகாலத்தைய தமிழகராதியான சூடாமணி நிகண்டில் வேளாளர்: பூபாலராகவும், இளங்கோவாகவும், பூவைசியராகவும், சதுர்த்தராகவும் மூன்று வர்ணத்திலும் குறிக்கப்படுகிறார்கள். 
‘சந்திரகுல’ அரசரான ஜனக மஹாராஜா(ஸ்ரீராமனின் மாமனார்) உழவோட்டும் போதே ஸீதாதேவி பூமியிலிருந்து தோன்றினாள். ஆம், அவள் (பூமிபுத்திர) ‘பூதேவியின் மகளே’.  
“ரகூணாம் குலதீபம் ச நிமீநாம் குலதீபிகாம் 
ஸூர்யவம்ஸஸமுத்பூதம் ஸோமவம்ஸஸமுத்பதாம்”
(ஆஞ்சநேய க்ருத ஸீதாராம ஸ்தோத்திரம்) 
மேலும், ‘யதுகுல’ வழித்தோன்றலான பலராமன் தன் கையில் எப்போதும் ஏர்கலப்பையுடன் காட்சி தருவதும், இங்கு குறிப்பிடத்தக்கது. இதுவே, அரசகுலத்தினருக்கும் ஏர்கலப்பை அல்லது உழவோட்டும் மரபினருக்கும் உண்டான தொடர்பை எடுத்தியம்புகிறது.
‘வ்ருஷாலம்’ என்றால் காளை என்ற பொருளும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. காளையினைக் கட்டி உழும் உழவின் தொன்மையை பண்டைய வேந்தர்களின் ‘பொன்னேர் பூட்டும் வைபவம்’ மூலமே நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. இத்தகைய தொன்மைமிக்க உழும் மரபினர் வேளாண்மாந்தரே (வேளாளர்) என்பதை ‘வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்’ எனும் காப்பியப்பெருந்தகையின் வாக்காலேயே அறியவியலுகிறது.
ஆனால், மனுஸ்மிருதியில், உழவு செய்வதை உயர்ந்த தொழில் என்று நல்லோர் ஏற்கவில்லை என்றும், கலப்பை, மண்வெட்டி போன்றவற்றால் பூமியை வெட்டுவதாலும் பூமியிலுள்ள உயிரினங்களை வெட்டுவதாலும் இது உயர்ந்த தொழிலல்ல என்றும் சொல்லப்பட்டுள்ளது.
“க்ருஷிம் ஸாத்விதி மந்யந்தே ஸா வ்ருத்தி: ஸத் விகர்ஹிதா | 
பூமிம் பூமி ஷயாம்ஷ் சைவ ஹந்தி காஷ்டமயோ முகம் ||”
(மனுஸ்மிருதி 10:73)
இதன்காரணத்தாலும், வேளாளர்கள் ப்ராஹ்மணர்களை குருவாக கொள்வதையும் வைதிக சடங்குகளையும் புறக்கணித்து வ்ருஷலத்வம் அடைந்திருக்கலாம். வேந்தர்கள் உழவோட்டும் மரபுடையோர் ஆயினும், மனுஸ்மிருதிசட்டத்தில் அது சொல்லப்பட்ட விதத்தால் பொன்கலப்பையை கொண்டும், இதே காரணத்தால், உழுவித்துண்ணும், உழுதுண்ணும் மரபினர் பிரிந்திருக்கவும்கூடும் என்பதும் வெளிப்படை.
ஆக, மேற்கண்ட காரணத்தாலேயே முடியரசர் வீழ்ந்தபோது வீழ்குடியாகவும் (வேளாளர்), எழும்போது முடியரசாகவும் (அரசகுலமாகவும்) இலக்கியங்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்குச்சான்று என்னையெனின், 
✧ ஏயர்குல (ஹைஹய) அரசமரபானது, மிகவும் சிறப்பும் தொன்மையும் வாய்ந்ததாகும். யதுகுல மரபினராகிய இவ்வரசகுடி மரபினரே காலச்சூரி அரசையும் தோற்றுவித்தனர். பூர்வத்தில் இராவணனையே சிறைபிடித்தும், செங்கோல் புரிந்தும் அரசாட்சி புரிந்த ஹைஹய மரபில் தோன்றியவரே கலிக்காம நாயனார். ஆயினும், ஒருகட்டத்தில் இவர்கள் சோழர்களுக்கு படைத்தலைமை செய்பவர்களாயினர் (வேளாண்மாந்தருக்கு – படையும் கண்ணியும் – தொல். பொருள். மரபு 81). மேலும், பூருவ முடியாட்சி மரபினரான ஹைஹயர் கோன் கலிக்காமரை சேக்கிழார் தம் பெரியபுராணத்தில், ‘…ஏயர் கோக் குடிதான் மன்னிய நீடிய வளவர் சேனாபதிக் குடியாம்…தாள் ஆண்மைஉழவுத்தொழில் தன்மை வளம் தலைசிறந்த வேளாளர்…’என்பதன் மூலம் வீழ்குடியாகிய காலத்தே தொன்மை நீடிய இவ்வரசமரபினர் வேளாளர் என குறிப்பிடப்பட்டிருப்பது தெரிகிறது.
✧ பல்லவர் மரபினர் தமிழகத்தில் சிறப்புற ஆட்சிபுரிந்த அரசமரபினராவர். பிரம்மக்ஷத்ரியராக அறியப்படும் இவர்களே நுளம்பர் அரசை தோற்றுவித்தவர்களும் ஆவர். இம்மரபில் தோன்றியவரே கருணாகரத்தொண்டைமான். இவரை, செயங்கொண்டார், கலிங்கத்துப்பரணியில் ‘மறைமொழிந்தபதி வழிமரபு’ என்று பிரம்மக்ஷத்ரியராகவும் ‘பல்லவர் தோன்றல்’ என்று பல்லவ மரபினராகவும் அடையாளப்படுத்துகிறார். அக்காலகட்டத்தில், பல்லவ அரசமரபு வீழ்ச்சியடைந்தது நாம் அறிந்ததே. அவர்களே, சோழர்களுக்கு வேளாளர்க்குரிய இயல்போடு படைத்தலைமையும், முதலமைச்சராயும் விளங்கியுள்ளனர். அவ்வகையில் கலிங்கப்போரில் பெரும்பாங்காற்றிய ‘பல்லவர்குல’ கருணாகரத்தொண்டைமான் குலோத்துங்கச்சோழனுக்கு படைத்தலைவராகவும், மந்திரியாகவும் இருந்த சிறப்பிற்குரியவர். இதனையே, செயங்கொண்டார், ‘தொண்டைமான் முதன்மந்திரி’ என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு, பல்லவகுலம் வீழ்ந்து வேளாண்குலமாகியதை கல்வெட்டில் ‘வேளான் கருணாகரன் தொண்டைமானார்’ (No. 121 A. R. No. 31 of 1948-49) என்பதன் மூலமும் அறிவியலும். இங்குள்ள ‘வேளான்’ வேளாளரா எனின், கம்பநாட்டாழ்வார், வேளாளரின் புகழையும் பெருந்தன்மையையும் எடுத்தியம்பும் நோக்கோடு அக்குலத்தில் தோன்றிய  சான்றோர்களை திருக்கைவழக்கத்தில் பட்டியலிடுகையில், ‘வேளான்வீரனின் வெற்றிக்கை
கருணாகரத்தொண்டைமான்
அட்ட திக்கும் எண்கீர்த்தி ஆயிரத் தெட்டாணைதனை
வெட்டி பரணிகொண்ட வீரக்கை’ என்பதன் மூலம், கருணாகரத்தொண்டைமான் வேளாளர் எனப்புலப்படுவது இயல்பே.
‘பல்லவர் மரபு’ வேளாளர் ஆனதற்கு இன்னமும் சான்று வேண்டுமெனின், மூவேந்தராட்சி வீழ்ந்து பின் விஜயநகரபேரரசின் ராஜ்ய காலத்தில் கி.பி.17 ஆம் நூற்றாண்டுவாக்கில், கானாடு (பாண்டியநாடு) – கோனாடு (சோழநாடு) நிலத்தரசுகளான வேளாளர்கள் இடையே நிகழ்நத  போரில் கோனாட்டு வெள்ளாளர் சார்பில் போரிட்டு வெற்றிகண்ட சிவந்தெழுந்த பல்லவராயன், பல்லவர் குலத்தோன்றலென சிவந்தெழுந்த பல்லவராயன் உலா மற்றும் புதுக்கோட்டை மாநில கையேடு தொகுதி 2 , பகுதி 1 மூலமாக அறிவியலும். அரசகுலத்தினருக்கே உள்ள சிறப்பான கோவில் திருப்பணிகளை மேற்கொண்ட பல்லவர்களின் பெருமையை மல்லை சிற்றம்பலகவிராயர்,  ‘சிவந்தெழுந்தான் பல்லவர் கோன் காராளன் சித்தமுறை செய்த திருப்பணியே ஆதியாய்’ என சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவில் அவரை காராளர் (வேளாளர்) என குறிப்பிடுகிறார். இவரை, ‘சோழ நிதியாக தன்மப்பிரபுவாய் ராச்சியபாரம் பண்ணுகையில்’ என குளத்தூர் தாலுகா குடுமியான்மலை கல்வெட்டானது குறிப்பிடுவதன் மூலம் சோழ பிரதிநிதாயக இவர் இருந்தது திண்ணம். இவரை, காடவர்கோன் கழற்சிஙகநாயனார், பெருமாள் நம்பி பல்லவராயர்,  கருணாகர தொண்டைமான் ஆகியோர் வழிவந்தவராக உலாவானது குறிப்பிடுவதில் இவர் பல்லவர் மரபினர் என்பதும், வேளாளர் என்பது மறுக்கவியலா சான்றாகிறது.
✧ மூவேந்தரையும் வெற்றிகொண்டு தமிழகம் முழுக்க ராஜ்யபரிபாலனம் செய்த களப்பிரர் மரபினர், ‘மூவேந்தரை சிறைவைத்தனர்’ என்றும் ‘கங்காகுல வங்கிசத்தினர்’ என்றும் அவர்களோடு தொடர்புடைய வேளாளர் பிரிவுகளையும்அரித்துவாரமங்கல செப்பேடானது குறிப்பிடுவதன் மூலமும் அப்பேரரச மரபினர் வேளாளராயினர் என்பது தெளிவு.
✧ வாணர் குல அரசமரபினர் ‘மாவலி சக்கரவர்த்தியின்’ வழியில் தோன்றி ஆட்சிபுரிந்ததாக கருதப்படுபவர்கள் ஆவர். இவர்களைப் பற்றிய தரவுகளானது,‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ புராணங்களிலும் இடைக்காலப் பாண்டியர் முதல் நாயக்கர் காலம் வரை கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது. சோழரையும் பாண்டியரையும் கூட இவர்கள் அவ்வப்போது வீழத்திய செய்திகளும் உண்டு. இவர்கள் ‘பாண்டியகுலாந்தகன்’ என குறிக்கப்படுவதன் மூலம், பாண்டியர் வீழ்ச்சிக்கு இவர்களும் காரணமாய் இருந்திருக்கலாம். அவ்வகையில் பாண்டியர் வீழ்ச்சிக்குப்பின், மதுரை அழகர்மலையை தலைநகராகக்கொண்டு இவர்கள் ஆட்சிபுரிந்துவந்தனர். அவற்றில் குறிப்பிடத்தக்கவனே ‘சுந்தரத்தோளுடையான் மாவலி வாணாதிராயன்’. கி.பி. 15 ஆம் நூற்றாண்டைய மானாமதுரைச் செப்பேட்டில் ‘வேதியர் காவலன், பூபாலகோபாலன், கெங்காகுலோத்துப்பன்’ என்றும் புதுக்கோட்டை கல்வெட்டில் ‘மூவராயர் கண்டன், பூபாலகோபாலன்’எனக்குறிப்பிடுவதிலும் குடுமியான்மலை கல்வெட்டில், சேர, சோழ, பாண்டியரின் கொடிகளை விட இவனது கருடக்கொடியே சிறந்ததென குறிப்பிட்டிருப்பதன் மூலமும், மூவேந்தருக்கு நிகராய் வாணர்களது வலிமை இருந்ததை அறியமுடிகிறது. மேலே புதுக்கோட்டையில் நிகழ்ந்ததாக சொல்லப்பட்ட ‘கானாடு – கோனாடு’ வேளாளர் போரில் கானாட்டின் அரசரே வாணாதிராயர் ஆவார். புதுக்கோட்டை அருகிலான தேக்காட்டூரில் இன்றளவும் இவ்வாணாதிராயர் மரபினர் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்களை ‘கார்காத்த வேளாளர் வசிஷ்ட கோத்திரம்’ என அடையாளப்படுத்துகின்றனர். மேலே, புதுக்கோட்டை கல்வெட்டுகளில் காணப்பட்ட‌ ‘சுந்தரத்தோளுடையான் வாணதிராயரின்’ மரபினராகவே இவர்கள் இருக்க வேண்டும். 
இதற்கு மேலும் சாட்சியாக, தமிழக தொல்லியல் கழகம் பதிப்பித்த, ‘புதுக்கோட்டை சமஸ்தான காகித ஆவணத்தில் (ஆவணம் 28, 2017 பக்-188)’, அதாவது புதுக்கோட்டையானது கள்ளர் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது கள்ளர் சமஸ்தானத்தில் முன்னர் வாணாதிராயர்களால் நிலக்கொடை பெற்றுக்கொண்ட அம்பலக்காரன் பட்டமுடைய கள்ளர்கள் வெளியிட்ட ஆவணத்தல், ‘இந்த சமஸ்தானத்தில்…பூர்வீகத்ததில் அரசாக்ஷி செய்து வந்த வெள்ளாழ அரசர்களால் மனுதார்களின் முன்னோர்களை (அம்பலக்காரர்களை) இந்நாட்டில் துடிகளாக நிலைநிருதி பாதுகாத்து வந்தார்கள்…..மனுதார்களின் முன்னோர்கள் மேற்படி வெள்ளாழ ராஜாக்களுள் ஒருவராகிய வாணாதிராயர் என்ற ஒருவருக்கு ராணுவத்தலைவர்களாக வேலை பார்த்து வந்தார்கள்…கானாடு என்ற ராஜாங்கத்துக்கு தலைவராகிய வாணாதிராயருக்கும் கோனாட்டு வேளாழர்களுக்கும் எருக்கொம்பு மலையில் நடந்த சண்டையில்…’
என வேளாளர் குல வாணாதிராயரின் வரலாற்றை எடுத்தியம்பும்கிறது.
(இங்கு, வேளாளர்குல சிவந்தெழுந்த பல்லவராயர் மற்றும் சுந்தரத்தோளுடைய வாணாதிராயர் ஆகிய இருவருக்குமே குடுமியான்மலையில் கல்வெட்டும் புதுக்கோட்டையில் ஆளுகையும் இருந்துள்ளதன் மூலம் கள்ளர்களின் ஆட்சிக்குமுன் அங்கு ‘வேளாளர்களின் செங்கோலாட்சி’ நடந்துள்ளது தெளிவு) 
✧ சாளுக்கிய மரபினர்கள் த்ராவிட அரசமரபுகளில் தனிச்சிறப்பு பெற்று விளங்குபவர்கள் ஆவர். பிற்காலத்தில் சோழ மரபில் மணவுறவு கொண்டவர்களுமாவர். தெலுங்கர் என இவர்களை குறிப்பிட்டு தமிழர் வரலாற்றை மறைக்க சிலர் முயன்றாலும் அவர்கள் தொன்மைமிகு தமிழ்மரபினர் என்பதை மறுக்கவியலாது. ஹரிதமகரிஷியின் யாகத்தில் (சளுகம்) தோன்றியதால் ‘ஹரிதிபுத்திரர்’ என்றும் சளுக்கியர் என்றும் பெயர் பெற்றதாக சில தரவுகள் உண்டு. இவர்களை, ‘வேள்புலத்தரசர் சளுக்கு வேந்தர்’ என்று திவாகரம், பிங்கல நிகண்டிலும் ‘வேள்குலச் சாளுக்கியர்’ என்று இரஜாதிராஜனின் மெய்க்கீர்த்தியிலும் குறிப்பிடுவதன் மூலம் இவர்கள் ‘வேளிர் குலத்தவரே’ என்பது புலப்படுகிறது. இவர்கள் பண்டைய குந்தல நாட்டை ஆண்டமையால் குந்தலர் என்றும் அறியப்படுகிறார்கள். சாளுக்கியர்களோடு கடம்பர்களும் ‘ஹரிதிபுத்திர மணவியாஸ கோத்திரத்தை’ சேர்ந்தவர்கள் என்று அவர்களுடைய ஆவணங்கள் குறிப்பிடுவதன்மூலம் இவர்கள் ஒத்த மரபினரே என்பது தெளிவு.
இச்சாளுக்கியர்களுக்கு ஆந்திரர் என்ற பெயரும் உண்டு. இவர்களை தமிழகத்தை ஆண்ட வேளிர் மன்னன் ஆய் ஆண்டிரனின் ‘ஆய்வேளிர்’ உடன் தொடர்புபடுத்துவாரும் உண்டு. இவர்கள் ஒத்தகுலத்தினர் என்பதைவிட இவர்கள் கிளைமரபினர் என்பதே பொருத்தமுடையதாகும். சாளுக்கியர் யாகத்தில் தோன்றியோர் ஆனால் ஆய்வேளிர் கிருஷ்ணனின் நேரடி மரபினர் என ஆய்மன்னர்கள் செப்பேடு குறிப்பிடுகிறது. ஆய்வேளிரின் ‘ஆய்’ எனும் பதத்திற்கும் வேளாளர் மரபினர்க்கும் தொடர்பும், நேரடிச்சான்று என்னையெனின்,
பாண்டியன் விக்ராமதித்ய வரகுணனின் செப்பேட்டில் ‘தெங்கநாடு கிழவன் மகள் ஆய்குலமாதேவியாயின முருகஞ்சேத்தி’ என்று ஆய்வேளிர் குல அரசியின் பெயரானது காணப்படுகிறது. இச்சமகால சாசனமான ஆய்வேளிர் குல மன்னன் கோகருநந்தடக்கனின் ஐந்தாவது செப்பேட்டில், ‘தெங்கநாட்டு வெண்ணீர் வெள்ளாளன்’ என ஆய்குல மாதேவியின் (அரசி) தந்தை தெங்கநாட்டு கிழவனை குறிப்பிடுகிறது. இதனூடே, Travancore Archaeological Series, வேளிர் வரலாறு, The Origin Of the Tamil Vellalas ஆகியவற்றில் ஆய்வேளிர் வேளாளர் என்பதற்கு இன்னுமதிக ஆவணங்கள் சுட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆய்வேளிர் ‘வ்ருஷ்ணி’ கோத்திரத்தார் என்றும் ‘யது’ குலத்தார் என்றும் சாசனங்கள் குறிப்பிடுகிறது. வேளாளரில் யதுகுல வ்ருஷ்ணி கோத்திரத்தார்உண்டென்று தமிழ் இலக்கியங்களில் சான்றுண்டா எனின், 
‘நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி,
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை,
உவரா ஈகை, துவரை ஆண்டு,
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே!’ என புறநானூறு 201வது பாடலில் இருங்கோவேள் எனும் வேளிர் மன்னனை துவாரகையினின்று வந்த மன்னனாக கபிலர் எனும் அந்தணப்பெருந்தகை குறிப்பிடுகின்றார். துவாரகை யதுகுல வ்ருஷ்ணி கோத்திரத்தார்ஆண்ட பகுதியென்பது நாமறிந்ததே. மேலும், கிருஷ்ணன் எனும் சமஸ்கிருத சொல்லுக்கு இருள்கோ எனும் தமிழ்பதம் ஆகப்பொருந்தும். வேளாளர் குலத்தினன் ஆதலால், இருங்கோவேள் ஆயினான். இருங்கோவேள் வேளாளர் என்பதற்கு மேலும் சான்று என்னையெனின்,
இருங்கோவேள் மரபினர் தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியில் 1932 வரையில் பட்டாபிஷேகம் செய்து கொண்டவர்கள் என்பதும் அவர்கள் ‘நற்குடி வேளாளர் குலதிலகர்’ என்றதனில் சுட்டப்பட்டிருப்பதுமே போதுமான சான்றாகயிருக்கும். இவ்விருங்கோவேளுக்கு ‘புலிகடிமால்’ எனும் பெயரும் புறநானூற்றில் வழங்கப்பட்டுள்ளது.
ஒய்சாளர் எனும் பதத்திற்கும் ‘புலிகடிமால்’ எனும் பெயருக்கும் யாகம் செய்துகொண்டிருந்த தன் குருவின் ஆனையால் புலியை கொன்ற (ஹொய்)சளனுக்கு (சளன்) ஹொய்சாளன் என்றும் புலியிடமிருந்து காத்தமையால் புலிகடிமால் என பெயர் வழங்கப்பெற்றதாக சொல்லப்படும் ஆவணங்கள் மூலம் ஒற்றுமையை அறியலாம். ஒய்சாளரும்’யதுகுல’ தோன்றல்களே என்பது அவர்கள் சாசனங்கள் மூலம் தெளிவு. தமிழில் ‘வ/வெ/வே’ என்று தொடங்கும் சொற்களே கன்னடத்தில் ‘ப/பெ/பே’ என்று திரிகிறது. ஹொய்சாள மரபினர் கன்னடத்தில் பேளாளர்என்று அறியப்படுகிறார்கள். இது தமிழகத்தின் வேளாளர் என்பதன் திரிபே என்பதை ஆராய்ச்சியாளர்களும் நிறுவியுள்ளனர்.
மேலே, யதுகுல தோன்றல்களான ஏயர், காலச்சுரி, ஒய்சாளரும் யாகத்தில் தோன்றிய சாளுக்கியர், இருங்கோவேள் மற்றும் ஒத்த கோத்திர மரபினரான குந்தலர், ஆந்திரர் என இவர்கள் வேளாளர் என்பது மட்டுமன்றி அவர்கள் ஒத்த குலத்தில் தோன்றிய பல்வேறு அரசமரபினர் என்பதும் சான்றுரைக்கப்பட்டது.
           
மேலே த்ராவிடமரபினர் ப்ராஹ்மணர்களுக்கும் குருவாய் இருந்தனர் என மேலே சொல்லப்பட்டதற்கு சான்றென்ன, அது எவ்வகையில் பொருந்துமெனின், அதனை சைவ, வைணவ சமயத்தின் வழிநின்று விளங்கிக்கொள்ளவியலும்.
வேதம் என்பது அறுவகை சமயத்தினர்க்கும் பொதுவானதேயாகும். அதனை, ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைஸ்யரே கற்றுணரவும் ஓதவும் தகுதி பூண்டவர் என்பது மனு ஸ்மிருதி. ஆயினும், த்ராவிடர்/ தமிழக சூத்திரர் பற்றி மேலே உரைக்கப்பட்டது இத்தகைய சிறப்புகளைக்கொண்ட வேளாளர் குலத்தில் ‘திருமாலின்’ அம்சமாக தோன்றிய நம்மாழ்வார் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதத்தை தமிழில் செய்தார். அவரை ‘கங்கையார் நன்மரபில்’ பிறந்தவர் என நம்மாழ்வார் திருத்தாலாட்டும் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என வேளாளர் புகழ்மாடும் ‘திருக்கை வழக்கத்தில்’ கம்பரும் போற்றுகிறார்.
இவரையே அந்தணர்குல மதுரகவியாழ்வாருக்கு குருவாக ஏற்றுக்கொண்டார் என்பது ஸ்ரீவைஷ்ண சமயிகள் அனைவரும் அறிந்ததே.
திருஞானசம்பந்தர் எனும் ப்ராஹ்மணரால் அப்பர் என போற்றப்பட்ட திருநாவுக்கரசு சுவாமிகள், பல்லவ மன்னனின் படைத்தளபதி கலிப்பகையாரின் மைத்துனராவார். இக்கலிப்பகையாரின் பெருமையை, ‘போரில் வலிய ஆண் சிங்கத்தை போன்றவர்’ என சேக்கழார்  சுவாமிகள் குறிப்பிடுகிறார். அவருடைய மைத்துனரான திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சமயத்தில் எத்தகைய சிறப்பினையுடைவர் என்பதை எவ்வளவு சொன்னாலும் அது நிகராகாது. அவர் அப்பூதியடிகளார் எனும் அந்தணரின் மகனை நச்சுப் பாம்பு தீண்டியதற்கு பதிகம் பாடி பெருமானின் அருள் பெற்று அவ்விஷத்தை  நீக்கினார். அப்மொழுதே அப்பூதியடிகள் எனும் ப்ராஹ்மணர்  அப்பர் எனும் வேளாளரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். இறைவனின் அருள்பெற்ற நிறைகுலம் வேளாளர் குலமே என்பதும் இதனால் தெளிவுறுகிறது.
இத்தகைய சிறப்பினையும் பெருமையினையும் உடையோர் தமிழர்கள். ஆயினும், மூவேந்தர் யாவர் என்பதையும் நாம் விளங்கிக்கொள்தல் இன்றியமையாததே. மேலே, சில தெளிவுகளை பெற்ற பின்னர் அதனை உணர்தலே சரிவருமாதலால் தற்பொழுது விளங்கிக்கொள்ளலாம்.
✧ பாண்டிய மரபினர் மெக்கன்சி சேமிப்பு ஆவணமான ‘தமிழ் மும்மண்டல பண்டைய மன்னர் வரலாறு (D.3088)’ல் ‘வடதேசத்திலிருந்து வந்த பாண்டியனாகிற வெள்ளாளன்’ என்றும், இடங்கை வலங்கையர் புராணத்தில், ‘பாண்டியர் வங்கிஷத்து வெள்ளாளர்’ என்பதும் பாண்டிய மரபினர் வேளாளர் என்பதற்கு நேரடிச்சான்றுகளாகும். ஆயினும், இதற்கு கல்வெட்டு சான்று‌ உண்டோயெனின், 
ஜடாவர்மன் வீரபாண்டியனின் கி.பி.13 ஆம் நூற்றாண்டைய கல்வெட்டில் (No. 353 A. R. No. 75 /1903) அவன் தன்னை ‘பூமிபுத்திரன்’ என்று குறிப்பிடுவதன் மூலமும், பாண்டியர்கள் வெள்ளாளரில் சந்திரகுலத்தவர் என்பதை அறியமுடிகிறது.
✧ சோழ மரபினர் சோழராசாவின் பூறுவ விற்தி (D.3088) எனும் ஆவணத்தில் ‘யுத்திராதியிலிருந்த தாய்மான் நள்ளி யென்கிற சோழனாகிற வெள்ளாளன்’ என்று குறிப்பிடப்படுவது சோழ மரபினர் வேளாளரே என்பதற்கு நேரடிச்சான்றுகளாகும். இதற்கும் கல்வெட்டு சான்று‌ உண்டோயெனின்,
தொல்லியல் துறையின் கல்வெட்டு எண். 217 A. R. No. 205 /1909,  ‘வெள்ளாள சொழரில் தேவன் இராசராசனென்’ என்பதன் மூலம் சோழர்கள் வெள்ளாளரே என்பதறகு இதற்கு மேல் சான்றுகாட்ட தேவையில்லை.
✧ சேர மரபினர் ‘வெள்ளாள மகாராசாவாகிய சேரராசா’ என்று நீலம்பூர் காணிச்செப்பேட்டின் மூலம் அறியப்படுகின்றனர். இவர்கள் அக்னி குலத்தினர் என்றும், சந்திராதித்த (சூரியசந்திர) குலத்தார் என்றும் யதுகுலத்தினர் என்றும் சில ஆவணங்கள் மூலம் அறியப்படுகிறார்கள். இவற்றுள், சந்திரகுல பாண்டியரும், சூரியகுல சோழரும் வேளாளரென மேலே சுட்டப்பட்டது. இதன் மூலமே ‘சந்திராதித்தகுலத்தோர்’ யாவர் என்பதை விளங்கிக்கொள்ளலாம். மேலும், அக்கினியில் தோன்றிய‌ வேளாளர் குல அரசமரபுகள் குறித்தும் சான்றுகளோடு விளக்கிக்காட்டியமைக்கு மேலேயும் அக்கினிகுல சேரர் வேளாளரே என்பதற்கு சான்று தேவையில்லையாகும்.
மேற்கண்ட, அரசகுல சாஸனங்கள் வழியாக “வெள்ளாளரே அரசாட்சி புரிதற்குரிய மரபினர் (அ) அரசாட்சி புரிந்த மரபினரே வெள்ளாளர்” என்பதை தெளிவாக அறியமுடிகிறது. ஆக, தமிழகத்தின் வேளாளர் மரபினர் எதேனும் ஒரு அரசகுலத்தின் வழிவந்தோர் என்பதே மேற்கண்ட பொதுத்தேற்றத்தால் அறியப்படும் உண்மையாகும்.
இக்காரணங்களாலேயே, 
“The Chera, Chola Pandyan kings and most of the petty chiefs of Tamilakam belonged to the tribe of Vellalas” என்று The Tamils Eighteen Hundred Years Ago எனும் நூலில் ஆசிரியர் V. கனகசபை அவர்கள் குறிப்பிட்டார். 
வேளாளர் குலத்தாரே அரசமரபினர்‌ ஆகையால், அவர்களை ராஜபுத்திரர்என்பதும் நன்கு பொருந்தும். இவர்கள் க்ஷத்திரியரா என்றால், இவர்களே க்ஷத்திரியர் ஆதற்குரியர் என்பதே பெறப்படும்.
  1. இதனையே, தென்னிந்திய வரலாற்றை ஆராய்ந்த உலகப்புகழ் ஜப்பானிய வரலாற்றாசிரியர் பத்மஸ்ரீ நோபரு கரிஷ்மாஅவர்கள் சுருக்கமாக, “Though no communities properly called Kshatriyas have existed in south India, we are able to regard the Vellalas, Who were the dominant caste, as having played the role of Kshatriya in ancient and medieval Tamil country.” என (Ancient to Medieval South Indian Society in Transition, 2009 – Noboru Karashima) தம்நூலில் எடுத்தியம்பினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *