திராவிடம் – தமிழ் ஒன்றா? நானும் திராவிடன் என பிராமணர்கள் சொல்வதன் காரணம் என்ன? திராவிடம் வேறு! தமிழ் வேறா? ஓர் ஆய்வுக் கட்டுரை

திரமிளம் திரமிடம் திராவிடம் என்ற வார்த்தைகள் அன்றைய தமிழகத்தையும் (தமிழ்நாடு & கேரளா), பண்டைய தமிழர்களையும் மட்டுமே குறிக்க பண்டைய நூல்களில் குறிக்கப்பட்டது வரலாறு ஆகும்… ஆம்… தமிழ் தான் திராவிடம்… தமிழ் மட்டுமே திராவிடம்…

ஆனால் மகாபாரதத்தில், கேரள சோழ பாண்டியர்களை தனியாகவும் திராவிடர்களை தனியாகவும் குறித்து சில இடங்களில் வருகிறது என்றும், ஆக மூவேந்தர் ஆண்ட பகுதி திராவிடம் அல்ல என்றும், திராவிடர் என்பது பிராமணரை மட்டுமே குறித்தது என்றும், அரைகுறையாக படித்த தமிழ்தேசியவாதிகள் புது கோட்பாட்டை உருவாக்க முயல்கிறார்கள்… தவறு… அதே மகாபாரதம், 9 ஆம் நூற்றாண்டிய பாகவத புராணம், பாண்டியனின் 9 ஆம் நூற்றாண்டிய தளவாய்புர செப்பேடு, 10 ஆம் நூற்றாண்டிய பல்லவனின் உதயேந்திரம் செப்பேடு, 8 ஆம் நூற்றாண்டிய ராஷ்ட்டிரகூடன் மூன்றாம் கோவிந்தனின் சஞ்சன் செப்பேடு, எட்டாம் நூற்றாண்டிய திவாகர நிகண்டு, 8 ஆம் நூற்றாண்டிய குமாரில பட்டர் இயற்றிய தந்திர வார்த்திகா, 2000 ஆண்டுகளுக்கு முன்பு பரதமுனி இயற்றிய நாட்டிய சாஸ்திரம் ஆகியவை தமிழ்தான் திராவிடம், தமிழ் மட்டுமே திராவிடம் என்று கூறுவதையும் பார்ப்போம்… பிறகு மகாபாரதத்தில் ஏன் திராவிடர் மூவேந்தரோடு அல்லாமல் தனியாக வந்தது எனவும் பார்ப்போம்…

முதலாவதாக மகாபாரதத்தில் திராவிடம் என்பது தேசமாக எங்கெங்கு வருகிறது என்று பார்க்கலாம்…
~ ~ ~

1) KMG version மகாபாரதத்தில் 6.9 இலும், BORI critical edition இல் 2364 ஆம் பக்கத்திலும் (chapter 61 – Jambukhanda-Vinirmana Parva – chapter 870(10) ) இல் பாரதத்தின் தெற்கே உள்ள தேசங்களை பற்றி விவரிக்கின்றது… அதிலே தெற்கே திராவிடர் முதலாக Dravida, Kerala, Prachya, Bhushika, Vanavasina, Unnatyaka,Mahishaka, Vikalpa, Bhushaka, Karnika, Kuntika, Soudrida, Nalakalaka,Koukuttaka, Chola, Konkana, Malavana, Samanga, Kopana, Kukura,Angadamarisha, Dhvajini, Utsava, Sanketa, Trigarta, Sarvaseni, Tryanga,Kekaraka, Proshtha, Parasancharaka, Vindhya, Pulaka, Pulinda, Kalkala,Malaka, Mallaka, Paravartaka, Kulinda, Kulika, Karantha, Kuraka,Mushaka, Stanavala, Satiya, Pattipanjaka, Adidaya, Sirala, Stuvaka,Stanapa, Hrishividharbha, Kantika, Tangana and Paratangana என தென் பாரதத்தில் உள்ள அனைத்து தேசங்களும் விவரிக்கப்பட்டுள்ளன… ஆனால் இதில் கேரள சோழ தேசங்கள் உண்டே தவிர பாண்டிய தேசம் வரவே இல்லை… இராமாயணத்தில் கூட பாண்டிய தேசமும் பாண்டியனும் விவரிக்கப்பட்டுள்ளபோது மகாபாரதத்தில், அதுவும் தெற்கே உள்ள தேசங்கள் பட்டியலில் பாண்டிய தேசம் எப்படி விடுபட்டு போகும்… ஆக முதலாவதாக குறிப்பிடப்பட்ட திராவிட தேசம் என்பது பாண்டிய தேசமே என்று தெரிய வருகிறது… ஆனால் இதை உறுதிப்படுத்த மேலும் சம கால ஆவணங்கள் வேண்டுமல்லவா… அவையும் உள்ளன…
~ ~ ~

2) மகாபாரதத்திலேயே திராவிட தேசம்…

மகாபாரதம் KMG version இல் 3.118 இலும், BORI critical edition இல் section 33 – Tirtha yatra parva – chapter 415(118), page 1371 இலும் அர்ஜுனன் வடக்கிருந்து தெற்கே கோதாவரிக்கு வந்து புனித நீராடினான் என்றும், அதன் பிறகு திராவிட தேசத்திற்குள் புகுந்தான் என்றும் உள்ளது… பிறகு அகஸ்திய தீர்த்தம் & நரி தீர்த்தம் ஆகியவற்றுக்கு சென்றான் எனவும் உள்ளது… ஆக தெளிவாக கோதாவரியை அது பாயும் தெலுங்கானா ஆந்திராவை திராவிடம் என குறிப்பிடவில்லை என்பதால் மகாபாரதம் குறிப்பிடும் திராவிடம் தமிழகமே என்பது மேலும் உறுதியாகிறது‌… தமிழகம் வந்த பிறகு கர்நட பதாமியிலுள்ள அகஸ்திய தீர்த்தத்திற்கு சென்றுள்ளான் என தெரிகிறது… அதாவது clockwise direction இல் கோதாவரி தமிழகம் கர்நாடகம் என …
~ ~ ~

3) பாண்டியனின் ஒன்பதாம் நூற்றாண்டிய தளவாய்புர செப்பேடு… இந்த செப்பேட்டில், சமஸ்கிருத பகுதியில் இந்த செப்பேட்டுக்கு பாடல்களை இயற்றியது “பாண்டி த்ரமிளாபரணன்” என்றும், அதே செப்பேட்டின் தமிழ் பகுதியில் “பாண்டிய தமிழாபரணன்” தான் செப்பேட்டுக்கு தமிழ் பா தொடுத்தான் என்றும் வருகிறது… ஆக தமிழ் தான் த்ரமிளம் என தெளிவாக உறுதி ஆகிறது… மேலும் இதே செப்பேட்டில் சமஸ்கிருத பகுதியில், “பாண்டிய த்ரமிடர்கள்” என்று பாண்டியர்களையும், இதே செப்பேட்டின் தமிழ் பகுதியில் பாண்டிய மன்னனை “தமிழ் பாண்டியன்” என்றும் வருகிறது… ஆக இங்கே தமிழ் தான் த்ரமிடம் என்றும் மேலும் உறுதியாகிறது… பார்க்க – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “பாண்டியர் செப்பேடு பத்து” நூல் – தளவாய்புர செப்பேடு…
~ ~ ~

சரி… தமிழ் தான் த்ரமிடம்… தமிழ் தான் த்ரிமிளம்… ஆனால் இந்த த்ரமிள / த்ரவிட பகுதியில் தான் பாண்டிய கேரள தேசங்கள் இருந்ததற்கு நேரடி சான்று உண்டா என்றால் அதுவும் உண்டு ஆம்… அவற்றை கீழே பார்க்கலாம்…

4) 9 ஆம் நூற்றாண்டிய பாகவத புராணம் என்ற ஸ்ரீமத் பாகவதம் i) 8.4.7 இல் கஜேந்திரன் என்பவன் திராவிடத்தில் இருந்த பாண்டிய தேசத்திற்கு அரசனானான் என வருகிறது… உரையில் தென்னிந்தியா என எழுதியிருந்தாலும் சங்ககால தமிழகமான கேரளா & தமிழ்நாடு மட்டுமே என்பது தெளிவு… ii) பாகவதம் 4.28.30 இல் மலையத்துவசன் என்பவன் கரிய கண்ணுடை பெண்ணை ஈன்றான் எனவும், அவளுக்கு 7 சகோதரர்கள் என்றும், அவர்கள் திராவிடத்தின் ஏழு அரசர்கள் ஆனார்கள் என்றும் வருகிறது… தமிழகத்தில் இது மலையத்துவச பாண்டியன் மற்றும் அவன் மகள் மதுரை மீனாட்சி அம்மன் கதை எனவும், பாகவதம் குறிப்பிட்ட திராவிடம் பாண்டிய நாடே எனவும் தெளிவாக விளங்கும்… இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் பாகவதம் 4.28.29 இல் மலையத்துவசன் பாண்டிய நாட்டான் என்றே வருகிறது… ஆக திராவிடம் என்ற தமிழகத்தில்தான் பாண்டிய தேசம் இருந்தது தெளிவு… iii) பாகவதம் 11.5.38-40 இல் திராவிட தேசத்தில் உள்ள தாமிரபரணி , கிருதமாலா, பயசுவினி, காவிரி ஆகிய நதிகள் என வருகிறது… ஆக தாமிரபரணி கிருதமாலா இரண்டும் பாண்டிய நாட்டிலும், பயசுவினி கேரளத்திலும், காவிரி சோழ தேசத்திலும் இருப்பதால் திராவிடம் அன்றைய தமிழகம் (இன்றைய தமிழ்நாடு & கேரளா) பகுதியைத்தான் குறித்தது என்பது தெளிவு…~ ~ ~

 

5) 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த நந்திவர்ம பல்லவனின் முதலாம் உதயேந்திரம் செப்பேடு நந்திவர்மனை நந்திபுரத்திலே (கும்பகோணம் அருகே உள்ள நாதன் கோவில் என்ற ஊர்) த்ரமிள இளவரசர்கள் சேர்ந்து சூழ்ந்து போரிட்டனர் என வருகிறது… நந்திவர்மனை காத்து மீட்டவன் உதயேந்திரசிம்மன் என்ற உதயச்சந்திரன் ஆவான்… அவன் வீழ்த்தியது பாண்டியனை, சாளுக்கியனை & சித்திரமாய பல்லலனை (நந்திவர்ம பல்லவனின் பங்காளி) என்றும் கூறுகிறது அதே செப்பேடு… ஆக பாண்டியனையும் பல்லலனையும் நாதன் கோவில் என்ற நந்திபுர விண்ணகரத்திலே வென்றதால் இங்கே த்ரமிளர் என செப்பேடு கூறியிருப்பதை தெளிவாக உணர முடியும்… த்ரமிள என்பது இங்கே தமிழ் தான் என்றும் உரையில் உடைக்கப்பட்டுள்ளது… பார்க்க பல்லவர் செப்பேடு முப்பது நூல் – உதயேந்திரம் செப்பேடு 1 பகுதி… இதன் உரை பகுதியிலேயும் த்ரமிள = தமிழ் என்றே international institute of Tamil studies வெளியிட்ட அந்த நூலில் உதயேந்திரம் செப்பேடு 1 பகுதியில் உண்டு…
~ ~ ~

6) 8 ஆம் நூற்றாண்டிய இராஷ்டிரகூட பேரரசன் மூன்றாம் கோவிந்தன் வெளியிட்ட சஞ்சன் பட்டயம் தான் வெற்றிகொண்ட “திராவில” அரசர்கள் பெயர் பட்டியலில் சேர சோழ பாண்டிய மற்றும் பல்லவர்களை கூறுகிறது… இது Epigraphia Indica vol. 18 இல் பக்கம் 241 இல் விளக்கப்பட்டுள்ளது… ஆக கர்நட அரசனே தான் திராவிலரை வெற்றி கொண்டான் என கூறுவதால், அன்றைய தமிழகமான கேரளா தமிழ்நாடு பகுதிகள் மட்டுமே திராவிடம் என தெளிவாக மீண்டும் உறுதியாகிறது…
~ ~ ~

7) கிபி. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த திவாகர முனிவர் எழுதிய திவாகர நிகண்டு என்ற தமிழ் அகராதியில் 12 ஆம் பகுதியான பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியில் பதினெண் பாடை ( 18 பாஷைகள்) பட்டியலில் துளுவம் திரவிடம் ஆகிய இரண்டையும் குறிக்கிறார்… துளு கன்னடம் சார்ந்த பாஷையே ஆனாலும் அதையும் திரவிடத்தையும் பிரித்து கூறுவதால் இங்கே குறிப்பிடப்பட்ட திராவிட பாஷை என்பது கன்னடம் தெலுங்கு ஆகியவற்றை குறிக்காது எனவும், மலையளாம் பிறக்காத அன்றைய காலகட்டத்தில் இருந்த தமிழே திராவிடம் எனவுள் உள்ளங்கை நெல்லிக்கனி போல உறுதியாகிறது…
~ ~ ~

8) எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வடவரான குமாரில பட்டர் தனது தந்திர வார்த்திகா எனும் நூலில் “द्राविडादिभाषायामेव” என குறித்துள்ளார்… இது முறையே “தமிழும் பிற மொழிகளும்” என்ற பொருள் ஆகும் என்பதை உரையாசிரியர்கள் தெளிவாக உரைக்கிறார்கள்…

மேலும் இதே தந்திர வார்த்திகா நூலில், முதலாம் அத்தியாயத்தில், மூன்றாம் பாதத்தில், ஆறாம் அதிகரணத்தின் பூர்வபக்ஷ பகுதியில், திராவிட பாஷையில் வழங்கும் சொற்கள் என சோறு, அதர் (வழி), வயிறு, பாம்பு ஆகியவற்றை சொல்கிறார் குமாரில பட்டர்…

தெலுங்கு கன்னட மொழிகளில் சோறு என்ற வார்த்தையோ, வயிறு என்ற வார்த்தையோ, அதர் என்ற வார்த்தையோ இல்லை… குறிப்பாக அதர் என்பது புறநானூற்று 204, திருக்குறள் 594 ஆகியவற்றில் வழங்கிவந்த சங்கத்தமிழ் வார்த்தை… ஆக குமாரில பட்டர் குறிப்பிடும் திராவிட பாஷை தமிழ் மட்டுமே என்பது தெளிந்த உண்மை…
~ ~ ~

9) 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பரதமுனி இயற்றிய நாட்டிய சாஸ்திரத்தில், 18.44 இல் ஆந்திரர் மற்றும் த்ரமிடர் ஆகிய இருவர் பேசும் மொழிகளை குறிக்கிறார்… ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னரேயே ஆந்திரர் பேசிய தெலுங்கும், தமிழர் பேசிய தமிழும் என பதிவு செய்யப்பட்டுள்ளது… மேலும் 18.48 இல் த்ரமிடர் பேசும் விபாஷை என்று த்ரமிடத்தை (தமிழை) குறிக்கிறார்…
~ ~ ~

10) பஞ்ச திராவிட தேசங்கள்…

காஷ்மீர தேசத்தில் கல்ஹானர் / கல்கணர் என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் தனது ராஜதரங்கிணி எனும் நூலில், விந்திய மலைக்கு தெற்கே வசிக்கும் ஐந்து பிராமண பிரிவுகளை பற்றி கூறுகிறார்… அவை முறையே த்ராவிடா, கர்நாடகா, தைலிங்கா, மகாராஷ்ட்ரகா & கூர்ச்சரா ஆகியவை ஆகும்… இவை முறையே தமிழகம் (கேரளா & தமிழ்நாடு), கர்நாடகம், தெலுங்கம் என்ற ஆந்திரம், மகாராட்டிரம் & குஜராத் ஆகியவை ஆகும்… இந்த பஞ்ச திராவிட பிராமணர்கள் இன்றும் உள்ளனர்… இந்த ஐந்தில் ஒன்றாக உள்ள திராவிட பிரிவு என்பது திராவிட நிலமான தமிழ்நாடு கேரளா பகுதியை சேர்ந்த பிராமணர்கள் என்று பொருள்படுவதாக வருகிறது தெளிவு…
~ ~ ~

11) ஆதி காலம் தொட்டே வழக்கில் இருந்தும், கி.பி எட்டாம் நூற்றாண்டில் தமிழ் கிரந்தத்தில் எழுதப்பட்ட “காமிகாகமம்” என்ற முதன்மை சைவ ஆகமத்தில், பூர்வ பகுதியில், அர்ச்சனா விதி படலத்தில், 437-440 ஆம் ஸ்லோகங்களில், திராவிட பாஷையில் இயற்றப்பட்ட ஸ்லோகங்களை பாட ஒரு விதி சொல்கிறது.‌.. அதே போல் காமிகாகமத்தின் உத்தர பகுதியில் பக்ஷிமதுவார விதி படலத்தில் 66-69 ஆம் ஸ்லோகங்களில் தூபம் போட்ட பிறகு த்ராவிட பாஷையில் இயற்றப்பட்ட ஸ்லோகங்களை பாட வேண்டும் என்று ஒரு விதி கூறுகிறது… இங்கே இரண்டு இடத்திலுமே கூறப்பட்ட திராவிட பாஷை தமிழே ஆகும்…
~ ~ ~

12) கிபி 3 ஆம் நூற்றாண்டிய பௌத்த நூலான லலித விஸ்தார சூத்திரத்தில், chapter 10, 125.21 இல் திராவிட எழுத்துருவை திராவிட லிபி என குறிக்கப்பட்டுள்ளது… இதுவும் தமிழே…
~ ~ ~

13) கி.பி 6 ஆம் நூற்றாண்டிய வராகிமிஹிரர் தனது பிரஹத் சம்ஹிதையில் 4.23 இல் அரசர்களை குறிக்க திராவிட தீபம் என்று குறிக்கிறார்… இந்த திராவிட அரசர்கள் என்பது தமிழ் அரசர்களை குறித்தது ஆகும்…

அதே வாராகிமிஹிரர் பிருகத் சம்கிதையில் 16.9 – 16.15 இல்,

உத்தரபாண்ட்ய, மஹேந்த்ராதி விந்த்ய மலயோபகா: சோலா: ||
த்ரவிட, விதேஹ, ஆந்த்ர, அச்மக, பாஸாபர கௌங்கண ஸமந்த்ரிஷிகா: |
குந்தல, கேரல, தண்டக, காந்திபுர ம்லேச்சஸங்கரிண: ||

என்கிறார்…

ஆக கேரள சோழ த்ரவிட ஆந்திர கொங்கன குந்தல ஆகிய தேசங்களை கூறுகிறார்… இங்கே குந்தலம் என்பது ராஷ்ட்கூடம் ஆன கர்நாடகம்… இங்கே திராவிடம் என்றது மூவேந்தர் அன்று ஆளாத தமிழ் பகுதியான தொண்டை நாட்டை குறித்தது…
~ ~ ~

14) கி.பி.7 ஆம் நூற்றாண்டிய பட்டபாணான் எழுதிய காதம்பரி என்னும் உரைநடை காவியத்தில் ஒரு பெண் காளிகோவிலில் ஒரு தமிழ் துறவியைச் சந்தித்ததை, “ஜரத் த்ரவிட தார் மிகஸ்ய” என்று வருகிறது…
~ ~ ~

15) பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த நாதமுனிகள் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிக்கு தனியன் இயற்றியுள்ளார்…

அது,

பக்தாம்ருதம்‌ விச்வஜநாநு மோதனம்‌
ஸர்வார்த்ததம்‌ ஸ்ரீ உடஉகோபவாங்மயம்‌
ஸஹஸ்ர சாகோபதநிஷத்‌ ஸமாகமம்‌
நமாம்யகம்‌ “த்ராவிட வேத” ஸாகரம்‌…

ஆக தமிழ் மொழியில் பாடப்பட்ட திருவாய்மொழிக்கு திராவிட வேதம் என்று பெயர் ஆவதால் தமிழே திராவிடம் என்பது தெளிவு…
~ ~ ~

16) கி.பி.10 ஆம் நூற்றாண்டு சமண ஆகம நூலான சுருதாவதாரம் என்ற நூலில் அதன் ஆசிரியர், பூதபலி என்பவரைக் குறிப்பிடும்போது “தஸ்தௌ பூதபலிரபி மதுராயாம் த்ராவிட தேஸான்”, அதாவது, திராவிட தேசமான மதுராவிலேயே (மதுரை) பூதபலி தங்கி இந்நூலை இயற்றினான் என்கிறார்… மதுரையை த்ராவிட தேசம் என்று நூல் தெளிவாகக் கூறுகிறது…
~ ~ ~

17) கி.பி.14.ஆம் நூற்றாண்டில் கங்காதேவி எழுதியது ‘மதுரா விஜயம்’ என்னும் சமஸ்கிருத நூலில் பல்லவ வம்சத்து சம்புவராயர்களை “த்ரமிட ராஜா” என குறிப்பிடப்பட்டுள்ளது… ஆக சம்புவராயர்களை தமிழ் அரசன் என நேரடியாக கங்காதேவி கூறுகிறார்… மேலும் , கம்பணர் அரண்மனை வாயிலில் கேரள, த்ரமிள, மாகத, சிங்கள ராஜாக்கள் சபையில் கம்பணரை பார்க்க நிற்பார்கள் என்று வருகிறது… ஆக இங்கே த்ரமிளம் என்று குறிக்கப்பட்டது தமிழ்நாடே ஆகும்…
~~~

18) 18 ஆம் நூற்றாண்டிய தாயுமானவர் தனது சித்தர்கணம் பாடல் தொகுதி 1 ல், ஒரு பாடலில், “வடிமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” என்கிறார்… இதன் பொருள் – “வடமொழியிலே வல்லவனான ஒருத்தன் வந்தால் தமிழிலே சிறப்பனைத்தும் முன்னமே வந்துவிட்டது என்று விவரமாக சொல்லுவேன்” என்பது…
~ ~ ~

19) 14 ஆம் நூற்றாண்டிய வேதாந்த தேசிகர் அருளிய இரு நூல்கள் – 1) த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளி & 2) த்ரமிடோபநிஷத் ஸாரம்… நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி என்பது ரிக் யஜுர் சாம வேதங்கள் மூன்றும் அடங்கியது மட்டுமன்றி அவற்றுக்கான உபநிஷத்துக்களும் திருவாய்மொழியிலேயே உள்ளது என நிறுவ “திரமிடோபநிஷத் சாரம்” என்று தமிழ் திருவாய்மொழியின் சாரத்தை விளக்குகிறார்… திமிழ் திருவாய்மொழியை வேதாந்த தேசிகர் என்ற ஸ்வாமி தேசிகன் த்ரமிடோபநிஷத் என கூறியது மட்டுமல்லாமல் “சம்ஹிதை” என்றும் “திரமிட நிகமம்” கூறுகிறார்… மேலும் தனது த்ரமிடோபநிஷத் சாரம் நூலில் சடகோபன் என்ற நம்மாழ்வார் வேதம் நாலையும் அகத்தியனின் மொழியில் செய்தான் என்றும் கூறுகிறார்… இதுவும் தமிழ் மொழியே… ஆக இங்கே தமிழ் தான் சமஸ்கிருதத்தில் திரமிடம் என்பது நிறுவப்பட்டுள்ளது…

~ ~ ~

சரி… த்ரவிடம் த்ரமிடம் த்ரமிளம் ஆகியவை தமிழை குறிக்க பயன்படுத்தப்பட்டவையே என்று தெளிவாக புரிகிறது… ஆனால் மகாபாரதத்தில் ஏன் கேரள சோழ பாண்டியர்களை தனியாகவும் திராவிடர்களை தனியாகவும் குறித்து வருகிறது சில இடங்களில் என சந்தேகம் வரும்… வரணும்… இதற்கான பதிலையும் காணலாம்… மேலே திராவிடம் என்பது பாஷையாகவும் நிலப்பரப்பாகவும் அன்றைய தமிழகமான கேரளா தமிழ்நாடு தான் என தெளிவாக மேலே கண்டோம்… ஆனால் சங்க காலத்திலேயே கூட மூவேந்தர் மட்டும் தான் அரசாண்டார்களா என்றால் அதுதான் இல்லை… வேளிர்களும் வேந்தர்க்கு அடங்காது சுயாட்சி நடத்தியிருக்கிறார்கள்… வேந்தர்க்கு அடங்கிய வேளிரும் உண்டு, அடங்கா வேளிரும் உண்டு… ஆக மகாபாரதம் எழுதிய காலத்தில் நிச்சயமாக மூவேந்தர் போக சுயாட்சி நடத்திய தமிழர்களும் இருந்திருப்பார்கள் அல்லவா அவர்களை குறிக்கவே திராவிடர் திரமிடர் திரமிளர் ஆகியவை மக்களை குறிக்கும்போது மட்டும் கேரள (சேர) சோழ பாண்டியர்களோடு சேர்ந்து பிற தமிழ் மன்னர்களான வேளிர்களையும் / வேளிர் போல இருந்தவர்களையும் சேர்த்தி வருகிறது என உணர வேண்டும்…

இதற்கு மூன்று உதாரணம்…

1) மகாபாரதம் KMG version 8.12 இலும், BORI critical edition இல் section 73, karna vadha parva, chapter 1158(8) இல், திராவிட படைகளும், கேரள சோழ பாண்டியர்கள் படைகளும் குறிக்கப்படுகின்றன… இவற்றை முறையாக மூவேந்தர் படைகளும், மூவேந்தருக்கடங்காத சுயாட்சி வேளிர்களின் / வேளிர் போல இருந்தவர்களின் தமிழ் படைகளும் என உணர்ந்து படிக்க வேண்டும்…
~ ~ ~

2) மகாபாரதத்திற்கு முன்னதாக இணைக்கப்பட்ட நூலான ஹரிவம்சத்தில் இரண்டாம் பாகமான விஷ்ணு பர்வத்தில் chapter 100 இலும் (BORI critical edition page 371), பாண்டியர் சோழர்களோடு திராவிடர் குறிக்கப்படுகிறார்கள்… இதனையும் இரு பெரும் தமிழ் வேந்தர் & தமிழ் வேளிர் நிலையினர் என்று தான் பார்க்க வேண்டும்.‌‌..

3) கிபி ஏழாம் நூற்றாண்டிய மேலை சாளுக்கிய மன்னனான மங்கலேஸ்வரனின் மகாகூட தூண் கல்வெட்டு இந்த அரசன் கங்க பாண்டிய கேரள சோழிய மூஷக த்ரமிள அரசர்களை வீழ்த்தி வெற்றி கொண்டான் என உள்ளது… பார்க்க (John F Fleet (1890). “Sanskrit and Old-Canarese Inscriptions No. 185 – Mahakuta Pillar Inscription of Mangalesa”. Indian Antiquary. 19: 7–20)… ஆக இங்கேயும் மூவேந்தர் பகுதி த்ரமிளம் அல்ல என்று அரைவேக்காட்டுத்தனமாக பார்க்க கூடாது… மாறாக மூவேந்தர் போக தமிழகத்தின் பல சிறு பகுதிகளை ஆண்ட வேளிர்கள் என்றே பார்க்க வேண்டும்…
~ ~ ~

இப்படியாக,

1) த்ரமிளம் என்பது தமிழ் மொழி மட்டுமே…

2) த்ரமிளம் என்பது பண்டைய தமிழகமான கேரளா தமிழ்நாடு மட்டுமே…

3) த்ரமிளம் என்பது பண்டைய தமிழ் இனம் மட்டுமே…

என்றும் மேலே பகிர்ந்த பத்தொன்பது சான்றுகளும் பிழையின்றி சொல்லும்…

சிறந்த linguist ஆன Dr. Grierson 1907 இல் தனது நூலான Linguistic Survey of India, Vol. IV, p.298 இல் “தமிழம் என்பது தான் தமிள – தமிட – தவிள – தவிட என்று பிராகிருதத்தில் திரிந்தபின்பு, தமிள, தமிட, தவிட என்னும் வடிவங்கள் முறையே த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாக பதிவு செய்துள்ளார்…

ஆக,

தமிழே –> தமிள –> த்ரமிள
தமிழே –> தமிட –> த்ரமிட
தமிழே –> தவிட –> த்ரவிட

என பிராகிருத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் திரிந்துள்ளது தெளிவு…

பாண்டியனின் தளவாய்புர செப்பேடு த்ரமிள த்ரமிட இரண்டும் தமிழே என கூறுவதையும் மேலே பார்த்தோம்… த்ரமிள த்ரமிட த்ரவிட மூன்றும் ஒரே இனத்தை குறித்த சொல்லே என மகாபாரதமும் சொல்லும்… இவர்கள் பரசுராமனால் ஒளிந்து வாழ்ந்து, பிராமணர் தொடர்பு அற்றுப் போய் வ்ருஷாலர் ஆனார்கள் என மகாபாரதம் மூன்று இடங்களில் பதிவு செய்கிறது… வ்ருஷாலர் என்றால் உழுதுண்ணும் விவசாயி என தெளிவாக பத்தாம் நூற்றாண்டைய சமஸ்கிருத சிவபுராணம் (1.13.6) சொல்கிறது… அது ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல… இது துவாரபதி வேளிர் வருவதற்கு முன்பிருந்த வேளிர்கள் வீழ்ந்து உழுதுண்ணும் வேளாளர் ஆன வரலாறே… அதையும் எழுதினால் பதிவு பெரிதாகிக்கொண்டே போகும் என்பதால் இதோடு நிற்போம்…

பிற்காலத்தில் கால்டுவெல் முதலான அரைகுறை ஆய்வாளர்களாலும், அதன் பின்னரான அரசியல் காரணங்களுக்காகவும் திராவிடர் என்ற தமிழர் பெயரையும், திராவிடம் என்ற தமிழக கேரள பிரதேச பெயர்களையும் ஆந்திர கர்நாடக மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டு விட்டது வரலாற்றில் நடந்த பெரிய தவறு… இதை படிப்பவர்கள் அதை நாம் உணர வேண்டும்…

தமிழ் மட்டுமே திராவிடம் என்ற பேருண்மையை உலகறியச் செய்வோம்…

 

—–>> எழுத்தாளர் கொங்கு வேளாளர் முத்தூர் மணியன் கூட்ட ஜெய்வந்த் செல்வக்குமார் கவுண்டர் 

 

மேலும் தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன் . கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *