“ஆதீனங்களில் ஏன் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே பீடாதிபதி ஆகிறார்கள் ? ஓதுவார்களுக்கும் ஏன் ஜாதி பார்த்து தான் ஆதீனத்து திருமுறை வித்யாலயங்களில் பயிற்சி கொடுக்கிறார்கள் ? ஐயஹோ சைவ சித்தாந்தமே ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள் அடங்கிப் போயிற்றே ! “
இவ்வாறு சில பும்பல்கள்.. இவர்கள் இதில் தாக்குவது வேளாளர்களை ! அடுத்து ,
படத்தில் தருமப்புர ஆதீனம்
“எங்கள் “நாட்டார்” கோயில்களை எல்லாம் ஆகமக் கோயிலாக உருமாற்றுகிறார்கள் ! ஆகம பூசை எல்லாம் பண்ணி எங்கள் தனித்துவத்தையே அழிக்கிறார்கள் ! “
என்று அடுத்தப் புலம்பல்..இதில் தாக்கப்படுபவர்கள் ஆதிசைவர்கள்.
அடுத்து,
“ஆதீனங்கள் சைவ சித்தாந்தம் பின்பற்றுபவர்கள் ; சைவ சித்தாந்தத்தில் சிறுதெய்வ வழிபாடு கண்டிக்கப்படுகிறது ; பிறகு ஏன் சிறுதெய்வ வழிபாட்டு தளங்களை எல்லாம் நிர்வாகம் பண்ணுகிறார்கள் ? “
என்றொரு புலம்பல்.. இது ஆதீனங்களை நேரடியாகத் தாக்குகிறது ; ஆனால் மறைமுகமாக வேளாளர்களையும் ஆதி சைவர்களையும் தாக்குகிறது..
ஆதி சைவர்களையும் தாக்குகிறது..
இதற்கெல்லம் நீண்டதோர் விளக்கம் கொடுக்க இயலும் ; ஆனால் அது தேவை இல்லாத வேலை.. முகநூலில் வேளாளர்கள் மீதும் ஏனைய சைவ குலங்கள் மீதும் பொறாமை கொண்ட சில பேர் ஒன்று சேர்ந்துக்கொண்டு கூச்சல் இடுவதை எல்லாம் அங்கீகரித்து விளக்கப்பதிவுகள் போடுவது பிரயோஜனம் இல்லாத செயல் என்பதால்.
சுருக்கமாகச் சில வரிகளில் சொல்ல வேண்டுமெனில்,சைவ சித்தாந்த ஆசாரியர்கள் சர்வாதிகாரிகள் ; அதாவது ஏனைய சமயங்களைப் பரிபாலனம் பண்ணும் உரிமையும் அவர்களுக்கு உண்டு; இன்னும் சொல்லப் போனால் வீரதந்த்ரம் முதலான சித்தாந்த ஆகமங்களில் , பாசுபதம்,காபாலிகம் முதலான அகப் புறச் சமயிகளுக்கே அவர்கள் சமய அடிப்படையில் ஒரு சைவ சித்தாந்த ஆசாரியன் தீக்ஷை வழங்கலாம் ; ஆனால் அகப் புறச் சமயத்து ஆசாரியன் ஒரு சைவ சித்தாந்திக்கு சித்தாந்த தீக்ஷை வழங்கலாகாது ; ஏனெனில் சைவ சித்தாந்தம் 363 சமயங்களையும் கடந்து சமயாதீதம் என்பதால்..ராஜாங்க சமயம்.இதையும் சர்ச்சைக்குறியதாக்குவார்கள் இவர்கள் ; ஆனால் சைவ சித்தாந்தம் ராஜாங்க சமயம் தான் சமய ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் என்பது உலக பிரசித்தம் தானே !? இதுக்கே இவர்கள் இவ்வாறு கதறுகிறார்கள் எனில் காமிகாகமத்தில் அரசாங்க நிர்வாகம் பற்றிய வசனத்தைப் பார்த்தார்கள் என்றால் கொதித்துப் போய் விடுவார்கள் !
படத்தில் திருவாவடுதுறை ஆதீனம்
மேலும் சில ஆகமங்களில்(சந்தானாகமம்), சைவ சித்தாந்த ஆசாரியன் பூர்வபக்ஷ நூல்களான சோம சித்தாந்தம்,பாஞ்சராத்திராகமம் முதலானவற்றில் பாண்டித்யம் உள்ளவனாக இருக்க வேண்டும் எனப்படுகிறது. பூர்வபக்ஷத்தை கண்டிப்பதற்கும் அவற்றில் பாண்டித்யம் தேவைப்படும் என்பது ப்ரதான காரணம்.. அவரவர் சமயத்தில் அவரவருக்கு வழிகாட்டுவதால் துணை காரணமுமாம்..
சரி இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.சைவ சித்தாந்தம் வேளாளரின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது என்பதே இவர்கள் வைக்கும் முக்கிய வாதங்களில் ஒன்று.இதை நாம் வெறும் உணர்ச்சி ரீதியாக அணுகாமல் ; வரலாற்று ரீதியாக அணுக வேண்டும்.பாரதத்தில் ஒவ்வொரு சம்பிரதாயமும் ஒரு சில குறிப்பிட்ட சமூகங்களால் தான் வாழையடி வாழையாக வளர்க்கப்பட்டு ; பரமாமரிக்கப்பட்டு வந்திருக்கிறது.
அந்த வகையில் சைவ சித்தாந்தத்தை சாத்திர ரீதியாக கட்டமைத்த ஆசாரியர்கள், மூன்று குலங்களில் அவதரித்தவர்களே : ஆதிசைவர்,மஹாசைவர்,அவாந்தர சைவர்(வேளாளர்) .இந்த மூன்று குலங்களிலும் இரண்டு குலங்களே மிக அதிகமாய் சாத்திரங்கள் இயற்றியது: ஆதிசைவர்,வேளாளர்.இந்த இரண்டு குலங்களிலும் க்ரியா நூல்கள் அதிகளவு இயற்றியவர்கள் ஆதிசைவர் ; ஞான நூல் அதிகளவு இயற்றியவர்கள் வேளாளர்.இந்தக் குலங்கள் தான் பல நூற்றாண்டுகளாக சைவ சித்தாந்தத்துக்கு அதிகளவு பங்களிப்பு கொடுத்ததும். அதனால் இயல்பாகவே பல நூற்றாண்டுளாய் இவர்கள் ஆதிக்கம் சைவ சித்தாந்தத்தில் இருந்ததில் ; இன்றும் இருப்பதில் வியப்பேது ? ஏனைய குலங்கள் சைவ சித்தாந்தத்துக்குப் பங்களிப்பு கொடுக்கக் கூடாது என்று இவர்கள் ஏதும் தடுத்தார்களா ?
வீடியோவில் வைதீக சுத்த சைவ ஆதீனங்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோல் வழங்கிய நிகழ்வு
உண்மை யாதெனில் சைவ சித்தாந்தத்தை கட்டமைத்த இந்த இரண்டு குலங்களும் தங்களுக்கு என ஒரு அறிவுசார் கட்டமைப்பை (Institutionalized Educational Framework) நிறுவிக்கொண்டனர்.இதில் நாம் கவனிக்கத்தக்கது ,அந்தணர் (ஆதிசைவர், மஹாசைவர்) ஓர் அறிவுசார் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டதில் வியப்பில்லை.அவர்களுக்கு அறிவுத் துறை தான் தொழிலாகவே சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கிறது. வேளாளர்கள் தொழிலோ உழவு மற்றும் நில பிரபுத்வம். அவர்களுக்கு அறிவுசார் துறை என்பது optional தான். இருப்பினும் அறிவுசார் துறையை தொழிலாகவே கொண்ட அந்தணருக்கு இணையான ஒரு கல்வி கட்டமைப்பை தங்கள் சமூகத்துக்கு வேளாளர்களால் நிறுவ முடிந்தது எனில் ; அவர்களிடம் அந்த ஞான வேட்கை இருந்துள்ளது என்றே அர்த்தம். தமிழ் நாட்டில் மட்டும் அன்றி ; ஒட்டுமொத்த பாரதத்திலுமே அந்தணருக்கு இணையாகவும் அவர்களுடன் சமய விவாதம் செய்யும் அளவுக்கும் தங்களுக்கென ஒரு கல்வி பாரம்பர்யத்தை உருவாக்கிய அந்தணரல்லாத சமுதாயம் வேளாள சமுதாயம் மட்டுமே என்று கூறுவது மிகை ஆகாது.வேளாளர் போன்று பிராமணர் அல்லாத வேறு எந்த குலமும் ஒரு சீரிய கல்வி பாரம்பர்யத்தை உருவாக்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.
அதனாலன்றோ அக்காலத்தில் இருந்த பல பெரும் பண்டிதர்களான அந்தணர்களும் வேளாள குல பூர்வாச்சிரமிகளான ஆதீனத்து குருமஹாசந்நிதானங்களிடம் தீக்ஷையும் உபதேசமும் பெற்றதும் !? உதாரணத்திற்கு,தருமை ஆதீனத்து 16ம் குருமஹாசந்நிதானம் அவர்கள் ஞானபீடாதிபதியாக அருளாட்சி புரிந்த போது ,அவ்வாதீனத்து ஶ்ரீமத் ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகளுக்கும் வெள்ளப்பள்ளத்து சாஸ்திரிகளுக்கும் “பிரம்ம சூத்திரம்” பற்றிய விவாததத்துக்கு சபை கூட்டப்பட்டது ; அவ்விவாதத்துக்கு நீதிபதியாக இருந்தவர் சாக்ஷாத் தருமை 16ம் குருமஹாசந்நிதானமான ஶ்ரீலஶ்ரீ சச்சிதாநந்த தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளே ! சாஸ்திரிக்கு பிரம்ம சூத்திரம் பற்றியும் விளக்கி ; அவருக்கு தீக்ஷையும் அளித்து,மஹாசைவராக்கி ஆட்கொண்டார் குருமஹாசந்நிதானம் என்பது வரலாறு.
படத்தில் வேளாக்குறிச்சி ஆதீனம்
பிரம்ம சூத்திரம் என்பது பூர்வபக்ஷ நூல் எனினும், சந்தானாகமம் முதலானவற்றில் பூர்வபக்ஷ நூல்களிலும் சைவ சித்தாந்த ஆசாரியன் பாண்டித்யம் உடையவனாக இருத்தல் வேண்டும் எனும் கருத்துக்கு இணங்க தருமை 16ம் குருமஹாசந்நிதானமும் பூர்வபக்ஷியான சாஸ்திரிக்கு அவர்தம் நூல் கருத்தையும் உணர்த்தி ஆட்கொண்டார் ! இதே போல்,திருவாவடுதுறை ஆதீனத்து மூன்றாம் குருமஹாசந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகளும், ஒரு வைஷ்ணவ அந்தணருக்கு தீக்ஷையும் உபதேசமும் வழங்கி மஹாசைவராக்கி ஆட்கொண்டார்.அந்த அந்தணரே “உலகுடைய நாயனார்” என அழைக்கப்பெற்றவர்.இவ்வாறு இக்காலத்தும் பல மஹாசைவர்கள் ஆதீனங்களில் தீக்ஷையும் உபதேசமும் பெற்று சிஷ்யர்களாக இருப்பது கண்கூடு.
படத்தில் தருமப்புர ஆதீனத்திற்கு பூரணகும்ப மரியாதை அளிக்கும் நிகழ்வு
ஆகையால், ஒரு குறிப்பிட்ட சம்பிரதாயத்தில் ஒரு குலத்து ஆதிக்கம் மட்டுமே என்றே இருந்தாலும் அதில் என்ன குறை ? காலங்காலமாய் அச்சம்பிரதாயத்தை அவர்கள் தானே உயிரைக் கொடுத்து காத்தனர் ? அவர்கள் ஒரு சீரான கட்டமைப்போடு ஒழுங்காக அச்சம்பிரதாயத்தைப் பராமரிக்கிறார்கள் எனில் அதில் என்ன குற்றம் ? சரி இப்பொழுதுள்ள ஆதிசைவர்,மஹாசைவர்,அவாந்திர சைவர் எல்லாம் ஒழுங்காக சைவ சித்தாந்தத்தைப் பராமரிக்கிறார்களா என்று நம்மை மடக்குவதாய் நினைத்துக்கொண்டு கேள்வி எழுப்புகிறார்கள்.பல நூற்றாண்டுகளாய் சைவ சித்தாந்த பின்புலத்திலேயே ஊறிய இந்த குலங்களே இன்று ஈன நிலையில் உள்ளனர் என்றால் ; ஏனையோர் பற்றி சொல்லவும் வேண்டுமோ !? சைவ சித்தாந்த பின்புலமே இல்லாத குலங்களிடம் ஆதீனங்கள்,சிவாலயங்களை எல்லாம் ஒப்படைத்து விட்டு வேளாளர்கள்,ஆதிசைவர் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள வேண்டுமாம் . இவர்கள் கைக்குப் போனால் ஆதீனங்களில் ஆகமம்,திருமுறை எல்லாம் அழிந்தே போய் விடும். கட்குடமும் ஆட்டிறைச்சியும் தான் ஆதீனங்களின் அடையாளமாய் போய் விடும். “ஆதீனத்தில் நடராஜருக்கு ஆடு வெட்டி கிடா விருந்து வைத்திருக்கிறோம்” என்று பூசகர் கூற , அதை அங்கீகரித்து ஆதீனக் கர்த்தர் பத்திரிக்கை பார்த்தால் நன்றாகவா இருக்கும் 😜 யாருக்குத் தெரியும்,நடராஜருக்கு பதிலாக சுடலைமாடன் ஆதீன ஆத்மார்த்த மூர்த்தியானாலும் ஆச்சரியம் இல்லை.அதனால் ஆதீனங்கள் வேளாளர்கள் கையில் இருப்பதே நல்லது.
படத்தில் பாண்டியனுக்கு முடிசூட்டும் உரிமையுள்ள பெருங்குளம் செங்கோல் ஆதீனம்
அவரவர் ஆத்மார்த்தமா வழி வழியாக சம்ப்ரதாயத்துக்கு தங்கள் குலம்,கோத்திரம் எல்லாவற்றையும் அர்பணித்து ,உயிரைக் கொடுத்து ரக்ஷித்து வருவார்களாம் ; இவர்கள் எந்த பங்களிப்புமே செய்யாமல் நேரடியாக ஆதீன குருமஹாசந்நிதானமாக வந்து உட்கர வேண்டுமாம் . அந்தப் பதவியை நாமே இவர்களுக்கு விட்டு கொடுக்க வேண்டுமாம்.
ஆதிசைவர்,வேளாளர் முதலான இன்றைய சைவ குலங்களில் ஏராளமான பிரச்சனைகள் உண்டு ; இந்த குலங்கள் தங்களை சுயபரிசோதனை செய்துக்கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.இதற்காக எல்லாம் வேளாளர்,ஆதிசைவரின் ஆதீன பீடாதிபத்யத்தையோ ; பரார்த்தபூஜா உரிமையையோ தூக்கி எல்லாம் பிறருக்குக் கொடுக்க இயலாது.இதில் சமூக நீதி எல்லாம் ஏதும் இல்லை என்று அறிவுடைய அனைவரும் அறிந்த ஒன்றே. பீடாதிபத்யமும் பரார்த்த பூஜா உரிமையும் கிடைக்கும் வரை சமூக நீதி, ஒரு குல ஆதிக்கம் ஒழிக என்பார்கள்.தங்கள் சமூகத்துக்குக் கிடைத்ததும் ; அதோடு ஏனையோர் சமூக நீதியை எல்லாம் மறந்து விட வேண்டியது தான். அதிகாரம் கைக்கு கிட்டும் வரை victim card பயன்படுத்துவோம் என்பதே இவர்கள் நிலை.இவர்கள் நோக்கம் நமக்குத் தெரியாமல் இல்லை. தற்பொழுது மாயாவாத ஸ்மார்த்த கூட்டத்துக்கு இவர்கள் கூஜா தூக்க முற்படுவதையும் காண முடிகிறது.யாருக்காவது எடுபிடி வேலை செய்தே அதிகாரத்தை கைப்பற்றி விட வேண்டும் என எண்ணம் போலும்.
படத்தில் மதுரை ஆதீனம்
இவ்வளவு பேசும் இந்தக் கூட்டம் முதலில் தங்களின் குல ஆக்கிரமிப்பில் உள்ள சிறுதெய்வ கோயில் பூஜா உரிமையை வேறு குலங்களுக்கு விட்டுக் கொடுத்து சமூக நீதியை காப்பாற்றலாமே ? குலத்துக்கு குடும்பத்துக்கு என்று ஒரு கோயில் வைத்துக்கொண்டு அதில் எங்கள் குலம்,குடும்பம் மட்டுமே பூஜை செய்ய முடியும் என்று கூறிக்கொண்டு , ஆதீன பீடாதிபத்யமும் சிவாலய பரார்த்த பூஜா உரிமையும் இவர்களுக்கு வேண்டுமாம் ! சமூக நீதி எல்லாம் நிறுவன சமயங்களுக்கு எதிராக மட்டும் தான் வேலை செய்யும் போலும் .
ஆகையால் நான் கூற வருவது, அந்தந்த சம்பிரதாயத்தில் அந்தந்த குறிப்பிட்ட குலங்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால் ; இருந்து விட்டுப் போகட்டுமே என்பதே. அவர்கள் காலங் காலமாய் அச்சம்பிரதாயத்துக்குப் பெரும்பங்காற்றி உள்ளனர் என்பதைத் தானே இது காட்டுகிறது !? இவ்வளவு நூற்றாண்டுகள் அந்தந்த சம்பிரதாயங்களுக்கு எந்த ஒரு பங்களிப்புமே செய்யாதவர்கள் இன்று அச்சம்பிரதாயங்களில் ஒரு குல ஆக்கிரமிப்பு என்று கூச்சல் இட எதாவது தார்மீக உரிமை உண்டா ? வெயிலில் கஷ்டப்பட்டு பயிரிடுவது ஒருத்தனாம் ; அறுவடையை நோகாமல் அனுபவிக்க துடிப்பது இன்னொருத்தனா !?
வேளாளர்கள் மேல் இவ்வளவு பொறாமை இருக்கும் எனில் அவர்கள் முன்னர் இருந்தது போல் தற்சமயம் இவர்கள் தங்கள் சமூகத்தை ஒரு மாபெரும் அறிவுசார் சமூகமாய் மாற்றலாமே !? தகுதியே இல்லாமல் பதவி மட்டும் வேண்டும் என்றால் எப்படி 😅
ஆக்கியோன் : ஞானப்ரகாச சரண கமலைக சரண்யன்
ஶ்ரீஜ்ஞாநப்ரகாச பரமாசார்யேப்யோ நம:
மேலும் தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758
மிகவும் அருமையான விலக்கம். சொல்லிய விதமும், சொல்லாழமும், எடுத்தாண்ட கருத்துக்களும் ஆழங்கால் பட்டவை! நிறைய சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றேன். நன்றி.
பிழை திருத்தம்: (என் கருத்தில்) விளக்கம் என்று திருத்தி வாசிக்கவும்