#உடன்குடி_வரலாறு_3
#சைவப்பிரகாச_வித்தியாசாலை_பகுதி_1
உடன்குடியில் அக்காலத்தில் கல்விக்கு வித்திட்டவர்கள் பலர். பல தியாகங்கள் இன்றுவரை வெளிவராமலே மறைத்து கிடக்கின்றன. நான் உடன்குடி பகுதிக்கு வந்து சுமார் ஏழு வருடங்கள் ஆகிறது. இதுவரை எந்த ஒரு பாரபட்சமுமின்றி நான் நடத்தப்படுவதும், எல்லோராலும் நேசிக்கப்படுவதும் “உடன்குடி”மண்ணின் மகிமை என்றே கூறவேண்டும். உடன்குடி என்ற பெயருக்கேற்ப வாழுகிறவர்கள் இவ்வூர் மக்கள்.
உடன்குடி மெயின் பஜார் வழியாக நான் சென்ற முதல் நாளே என்னுடைய கண்களுக்கு ஒரு கட்டிடம் விருந்தாய் அமைந்தது. ஏதோ ஒரு செல்வந்தரின் வீடாக இருக்கவேண்டுமென்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அதனுடைய அமைப்பும், அதன் அழகும் நிச்சயமாக அக்காலத்தில் தங்க கரண்டியில் புழங்கிய ஒரு குடும்பத்தார் தான் இத்தனை அழகிய இல்லத்தை கட்டியிருக்க முடியும் என்ற எண்ணம் மேலோங்கியது. கடந்து போதும் போதெல்லாம் அதன் அழகு என்னைக் கவர்ந்ததுண்டு. பல நேரங்களில் வாசல்கள் பூட்டிய நிலையிலேயே நான் பார்த்திருக்கின்றேன். சில நாட்கள் கழித்துதான் விசாரித்தேன் இது யாருடைய வீடு என்று? அப்பொழுதுதான் என்னிடம் கூறினார்கள் “இது வீடு அல்ல இது ஒரு பழைய பள்ளிக்கூடமென்று.” அதோடு கூட நிறுத்திவிடாமல் இப்பொழுது இக்கட்டிடத்தில் பள்ளிக்கல்வித்துறையின் ஓர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது என்று. அதன் பிறகு தான் அதின் வாசலில் தொங்கவிடப்பட்டிருந்த பெயர் பலகையை நான் கவனித்தேன்.
ஒரு நாள் ஆர்வம் தலைக்கேறி இதைக்குறித்ததான ஒரு சில காரியங்களை நான் ஆராயத்துவங்கினேன். நூற்றாண்டுகளைக் கடந்து உடன்குடியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு கூட்டம் வழிகாட்டி வாழ்ந்தது என்பதற்கு இக்கட்டிடங்களே அத்தாட்சியாகும்.
“சைவப்பிரகாச வித்தியாசாலா” என்பது தான் இப்பாரம்பரியமான பள்ளியின் பெயர். பெயருக்கேற்ப இப்பள்ளியானது சைவப்பிள்ளைமார் (சைவ வேளாளர்கள்) வகுப்பினைச் சார்ந்தவர்கள் தான் இதனை ஆரம்பித்திருக்கின்றார்கள். உடன்குடி நகரத்தில் சைவப்பிள்ளைமார் (சைவ வேளாளர்கள்) குடியேறியதற்கு ஒரு சுவாரசியமான வரலாற்றுக்குறிப்பு ஒன்றினை வரலாற்று ஆசிரியர் திரு. பெருமாள் அவர்கள் எழுதிய “இந்திய வரலாற்றில் உடன்குடியின் பங்கு” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கின்றார். “பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட பின்னர் தானாதிபதி பிள்ளையின் குடும்பமும் அழிந்தது. இதற்கு மேல் அங்கிருந்தால் நமக்கு ஆபத்து என எண்ணிய சில சைவ பிள்ளைமார் (சைவ வேளாளர்கள்) மற்றும் தேவர் குடும்பங்கள் தலைமறைவாக திருச்செந்தூர் தாலுகாவை சேர்ந்த ஆத்தூருக்கு வந்துள்ளனர். ஆத்தூர் பகுதியில் அவர்களை தங்க அனுமதிக்கவில்லையாம்.
அதனைத்தொடர்ந்து குலசேகரப்பட்டினம், மாநாடு போன்ற இடங்களுக்கு சென்றுள்ளனர். அங்கேயும் எதிர்ப்பு கிளம்பவே உடைமரங்கள் அடர்ந்து காணப்பட்ட உடன்குடியில் வந்து குடியேறியிருக்கிறார்கள்.” உடைமரங்கள் நிறைந்த ஊரில் குடியேற்றம் நடைபெறவே அது உடன்குடி என்று பெயராயிற்று என்று சிலர் கூறுவதுண்டு.
அக்காலங்களில் கொழும்பு ஒரு சொர்கமாகவே கருதப்பட்டது. பெரும் பணக்காரர்களாக வேன்றுமென்றால் கொழும்பு சென்று வியாபாரம் செய்வார்கள். கொழும்பு சென்றவர்களெல்லாம் ஓரளவிற்கு நல்ல நிலைகளில் அக்காலங்களில் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு இன்றளவும் உடன்குடி பட்டணத்தில் கட்டப்பட்டிருக்கும் பெரிய வீடுகளும், செல்வந்தர்களுமே அடையாளம். இவ்வாறாக கொழும்பில் குடியேறியவர் தான் சங்கரசுப்பு பிள்ளை ஆவார். பெரிய தொழில் அதிபர், நல்ல செல்வச்செழிப்பு என்று மிக வசதியாக வாழ்ந்து வந்திருக்கின்றார். சங்கரசுப்பு அவர்களுக்கு வாரிசு இல்லை.
தன்னுடைய சம்பாத்தியங்கள் ஊர் மக்களின் நன்மைக்கென பயன்படுத்தப்படவேன்றுமென்று எழுந்த ஆசையின் விளைவே ஒரு கல்விக்கூடத்தை உடன்குடியில் உண்டாக வேண்டுமென்பதே ஆகும். அவருடைய விருப்பத்தை வெறும் கனவில் மாத்திரமல்ல அதனை நினைவாக்க வேன்றுமென்று தன் சகோதரர்களோடு கூட இணைந்து சைவப்பிரகாச வித்தியாசாலா என்ற பள்ளிக்கூடத்தை 1916ம் வருடம் ஆகஸ்டு மாதம் 30ம் தேதியன்று திறந்தார்.
சைவப்பிரகாச வித்தியாசாலை நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் இப்பள்ளியை ஆரம்பித்த நான்கு பேரின் மனதில் இருந்தது. எனவே இப்பள்ளியை நிர்வகிக்க தலைசிறந்த ஒரு தலைமையாசிரியர் தேவை என உணர்ந்த இவர்கள் திரு. நமச்சிவாய முதலியார் என்பவரை இப்பள்ளிக்கு கொண்டுவந்தனர். திருவாளர் நமச்சிவாய முதலியார் குறித்து ஒருசில வார்த்தைகள் நிச்சயமாக சொல்லப்பட வேண்டும். இவரது காலம் இப்பள்ளிக்கு பொற்காலம் எனலாம். எனினும் இவர் பணிநிறைவு பெற்று நிர்வாகியாக பொறுப்பில் இருந்தபொழுதுதான் இப்பள்ளி அரசாங்கத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனவே இப்பள்ளியின் நிறுவனர்களுக்கு வெறுப்புணர்வையே இவர் மீது கொண்டுவந்தது.
திருவாளர் நமச்சிவாய முதலியார் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்தவர். துலுக்கப்பட்டி என்ற கிராமத்திற்கு அருகேயுள்ள வத்தக்காரப்பட்டி என்ற ஊரைச் சார்ந்தவர். பெரும் பணக்காரர் என்று கூறப்படுகிறது. இவருக்குச் சொந்தமாக பல பண்ணைத்தோட்டங்களும், பெருமளவில் நிலங்களும் இருந்துள்ளன. தன்னுடைய சொந்த ஊரில் முதியவர்களுக்கு உதவும்படியாக சொந்தமாக கஞ்சித்தொட்டியினை வைத்திருக்கின்றார்.
அங்கு வசிக்கும் முதியவர்கள் உணவிற்கு கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தோடு கூட இத்தனை பெரிய காரியத்தினை செய்திருக்கின்றார். திரு. நச்சிவாய முதலியார் அவர்கள் உடன்குடி சைவப்பிரகாச வித்தியாசாலைக்குத் தலைமை ஆசிரியராக வருவதற்கு முன்னர், வரலாற்று சிறப்புமிக்க குலசை P.S.M. (பி.எஸ்.எம்) பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் அங்கு பணியாற்றியபடியினால் அங்கிருந்த பிரிட்டிஷ்காரர்களுடன் நெருக்கமான உறவினை வைத்திருந்தார். நல்ல ஆங்கில புலமைப் பெற்றவராக இருந்தபடியினால் அவர்களும் இவருடன் மிகவும் இணக்கமாக இருந்துள்ளார்கள்.
உடன்குடி பள்ளிக்கு அழைப்பு வந்ததுமே அங்கிருந்த தன் பணியை இராஜினாமா செய்துவிட்டு சைவப்பிரகாச வித்யாசாலையின் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்தார்.
அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த டிராம் வண்டியில் அடிக்கடி பிரயாணம் செய்து குலசையில் தனக்கிருந்த வெளிநாட்டு நண்பர்களை சந்தித்து வந்திருக்கின்றார். சைவப்பிரகாச வித்யாசாலைக்கு நல்ல இடங்கள் இருந்தபடியினால் பள்ளிக்கு பின்புறம் இருந்த இடத்தில் இரு மெய்கண்டான் நிலையம் என்ற நாடகமேடை ஒன்றினை 1926ம் வருடம் அமைத்திருக்கின்றார். அந்த மேடையின் எதிர்புறம் டென்னிஸ் மைதானம் ஒன்றினையும் ஏற்படுத்தியிருக்கின்றார். டென்னிஸ் மைதானம் இங்கிருந்தபடியினால் அவ்வப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளரும் கூட இங்கு வந்து இவருடன் டென்னிஸ் விளையாடுவது வழக்கமாம்.
#தொடரும்…..
#உடன்குடி_வரலாறு_3
#சைவப்பிரகாச_வித்தியாசாலை_பகுதி_2
பள்ளியானது மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தபடியினால், இப்பள்ளிக்கான அரசு அங்கீகாரம் 1925ம் வருடம் வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்த சூழ்நிலையில் இப்பள்ளியின் நிறுவனருக்கு ஒரு சிக்கல் ஆரம்பித்தது. இலங்கையில் சங்கரசுப்பு பிள்ளை அவர்களின் வியாபாரம் சிறிது காலத்தில் முடங்க ஆரம்பித்தது. எதிர்பாராதவிதமாக பெரிய சரிவினை வாழ்வில் சந்தித்தார். கொழும்பில் இருந்த ஆஸ்தி அந்தஸ்துக்களை இழக்க ஆரம்பித்தார். வங்கியில் கடன் வாங்கி அவற்றை செலுத்த முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டார். வங்கிகள் அவருடைய கடன்களுக்கு பதிலாக அவருடைய சொத்துக்களை ஜப்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது. அச்சமயத்தில் வங்கிகளின் கடுமையான நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, தன்னை திவால் என்று அறிவித்தார். கொழும்பில் திவால் என்று அறிவித்தாலும் கூட இந்தியாவில் பல சொத்துக்களுக்கு அதிபதியாகவே அவர் இருந்தார். எனினும் கொழும்பு அரசாங்கம் இந்தியாவில் அவருக்கு இருக்கும் சொத்துக்களையும் தன்வசம் எடுத்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் ஆரம்பித்த சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பள்ளியை ஒரு அறக்கட்டளையாக மாற்ற விரும்பி “சைவப்பிரகாச பரிபாலன சங்கம்” என்ற அறக்கட்டளையை நிறுவி, தனக்கிருந்த அனைத்து சொத்துக்களையும் அந்த அறக்கட்டளையின் பெயரிலே எழுதி வைத்திருக்கின்றார்.
அறக்கட்டளைக்கென்று தனிச்சட்டத்தையும் இயற்றியிருக்கின்றனர். சட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், அறக்கட்டளையின் உறுப்பினராக சைவ வேளாளர்கள் இருக்கவேண்டும். மற்றவர்களுக்கு அந்த அறக்கட்டளையில் அனுமதி இல்லை என்பது செய்தி.
இப்பள்ளியின் நிர்வாகம் அறக்கட்டளையின் ஆளுகைக்குள்ளாக சென்ற நாட்களிலிருந்து நிர்வாகம் பெரும் மாற்றம் கண்டது. எனினும் திரு. நமச்சிவாய முதலியார் அவர்கள்தான் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். ஜாதி, மதம் என்ற வேற்றுமையில்லாமல் எல்லா மக்களும் மிகச்சிறப்பாகக் கல்வியினைப் பெற்றிருக்கின்றார்கள். ஒவ்வொருவரின் திறமையினையும் கொண்டுவருவதில் முதலியார் அவர்களின் பங்கு மிக உன்னதமானதாக இருந்துள்ளது. மெய்கண்டான் நிலையத்தில் அவ்வப்போது கலைநிகழ்ச்சிகள் நடைபெறுமாம். அந்த கலைநிகழ்ச்சிகளில் பிள்ளைகளின் நடனம் நடைபெறும். அவ்வாறு நடனங்கள் ஆடும்போது அவர்கள் பாடல்பெட்டிகளிலிருந்து வரும் இசைக்கு நடனம் ஆட அனுமதியில்லை. மாறாக, மாணவர்களே பாடல்களை பாடி நடனம் ஆட வேண்டும். அவர்களின் பாடலுக்கேற்ற இசையினை ஆசிரியர்கள் வாசிப்பார்களாம். ஒரு ஆசிரியர் ஆர்மோனியம் வாசிப்பார், மற்றவர் மிருதங்கம், மற்றவர் கடம் என்று ஒவ்வொருவரும் தங்களின் திறமைக்கேற்ப இசைக்கருவிகள் வாசிக்க, மாணாக்கர் பாடல்களை பாடி, நடனம் ஆடுவார்கள்.
இப்பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் யாவரும் நல்ல ஒழுக்கத்துடன் வருவார்கள். சிறந்த முறையில் நல்ல கல்வி கற்பிக்கப்பட்டிருக்கின்றது. சுமார் 800 மாணவ மாணவிகளும் 22 ஆசிரியர்களும் இப்பள்ளியில் இருந்தனர். உடன்குடி மக்களில் பலர் இப்பள்ளி மாணவர்களே. இப்படி மிகச்சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்த பள்ளி சரிவை சந்திக்க ஆரம்பித்தது. திரு. நமச்சிவாய முதலியார் அவர்கள் 1958ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவரது நற்பணியைக் கண்ட நிர்வாகிகள் அவரையே பள்ளியின் நிர்வாகியாக மாற்றி பள்ளியின் முழுப்பொறுப்பினையும் அவரது கரங்களில் கொடுத்தார்கள்.
பள்ளிக்கு மிக அதிகமான சொத்துக்கள் உண்டு. திரு. சங்கரசுப்பு பிள்ளை அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் அறக்கட்டளைக்குக் கொடுக்கப்பட்டது. மக்கள் சொன்ன வார்த்தைகளின்படி, இப்பள்ளி அமைந்திருக்கும் தெருவில் இரண்டு அல்லது மூன்று வீடுகள், கடைகள், குலசேகரப்பட்டினத்தில் தென்னந்தோப்புகள், திருச்செந்தூரின் இடங்கள், ஆச்சிச்சநல்லூரில் வயல்கள் என்று பல இடங்களில் இருந்திருக்கின்றது. பள்ளியின் எதிர்புறம் அமைந்திருக்கும் பெரிய மைதானமே அக்காலத்தில் இப்பள்ளியில் விளையாட்டு மைதானமாக இருந்திருக்கிறது.
பள்ளியின் நிறுவனர் சங்கரசுப்பு பிள்ளை அவர்கள் மரணத்திற்கு பின்னர் அவரது உறவினர்களின் நிர்வாகத்திற்குள்ளாக சென்றிருக்கிறது. நிர்வாகத்தினருக்கு, திரு. நமச்சிவாய முதலியாருக்கு ஏற்பட்ட சிறு சிறு உரசல்கள் பெரிதாக மாறினது. எனவே நமச்சிவாய முதலியார் அப்பொழுது இருந்த அறக்கட்டளை நிர்வாகிகளுடன் பேசி அனுமதி பெற்று பள்ளியினை நேரடியாக அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார். 1962ம் வருடம் முதலே அதற்கான வேலையில் ஈடுபட்டு , இறுதியாக அரசாங்கம் 1968ம் வருடம் ஜனவரி மாதம் 6ம் தேதி தன்வசமாக்கிக்கொண்டது. பள்ளியினை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்போது திரு. நச்சிவாய முதலியார் அவர்கள், ஒரு சில நிபந்தனைகளை அரசாங்கத்திற்கு வைத்திருக்கின்றார். அவையாவன, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை எக்காரணத்தைக்கொண்டும் பணியிலிருந்து நீக்கவோ அல்லது வேறு இடங்களுக்கு மாற்றவோ கூடாது, பள்ளியின் பெயரினை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றக்கூடாது என்று பலவற்றை முன்வைத்தார். ஒருசில காரியங்களுக்கு செவிசாய்த்த அரசு, பள்ளியின் பெயரினை அடியோடு கூட மாற்றியது.
திரு. நமச்சிவாய முதலியாரின் காலத்திற்கு பின்னர் இரண்டு தலைமையாசிரியர்களுக்குப் பிறகு உடன்குடி சத்திய நகரத்தைச் சேர்ந்த திரு. விண்ணப்பம்சாமுவேல் அவர்கள் தலைமையாசிரியராக பணியாற்றினார்கள், அவர்களின் பணி ஓய்விற்குப் பின்னர் பண்டாரஞ்செட்டிவிளையைச் சேர்ந்த திரு. தவமணி அவர்கள் தலைமையாசிரியராக பணியாற்றினார்கள். அதன் பின்னர் தற்சமயம் திரு. பிரின்ஸ் அவர்கள் அரசினர் நடுநிலைப்பள்ளி என்ற பெயரோடு அமைந்திருக்கும் பள்ளியினை சீரும் சிறப்புமாக வழிநடத்தி செல்லுகின்றார். அழியும் நிலையிலிருந்த இப்பள்ளியை இன்று உயர்த்தி தூக்கியவர் தற்போதைய தலைமையாசிரியர் திரு. பிரின்ஸ் அவர்கள் தான். உடன்குடி நகரத்தின் கல்வி சேவையில் இப்பள்ளியின் பங்களிப்பு பலரது வாழ்வில் ஒளிவீசச்செய்திருக்கின்றது என்பது ஒருவராலும் மறுக்கமுடியாத உண்மை.
#குறிப்பு_இவற்றில்_பகிரப்பட்டுள்ள_வரலாறுகள்_அனைத்தும்_அங்கு_பணியாற்றிய_ஆசிரியர்கள__பயின்ற_மாணவ_மாணவிகள்_மற்றும்_தற்போதைய_தலைமை_ஆசிரியர்_அவர்களிடம்_கேட்டு_அறிந்த்த்து.
#ஜான்_சாமுவேல்_H
#பண்டாரஞ்செட்டிவிளை