வடபால் முனிவன் யார்? சிவபெருமானா? அகத்தியரா? வசிஸ்ட்டரா? வேளிர்களை தென்திசை அழைத்து வந்தது யார்? வடபான் முனிவன் சிவப்பெருமான் ஆவர்

இதுகாறும் கபிலர் கூறும் ‘வடபான் முனிவன்’ (புறநானூறு 201) யார் என்பதற்கான குறிப்புகள் பல கிடைத்தாலும் அனுமானங்களே நிறைந்திருந்தன.

வடக்கிருந்து வேளிரை அழைத்து வந்த அகத்தியரா? (மூவேந்தர் முதற்கொண்டு அழைத்து வந்து தென்னாட்டில் நாடமைத்து தமிழ் மொழி வளர்த்த வரலாறு)

வடமீன் என்னும் அருந்ததியை இல்லாளாகக் கொண்ட வசிஷ்டரா? (வடக்கில் நீர்த் தடாகத்தில் அக்கினி வம்சத்தை தோற்றுவித்தவர்)

ஹரீதீ முனிவரா? (தனது கமண்டல நீரில் வேள் புல வேந்தரான சளுக்கிய மன்னர்களை உருவாக்கியவர்)

வேளிர் மக்கள் கூறுவது போல் அவர் குருவான போதாயனரா? (கங்கையில் பிறந்த காங்கேயரின் குரு)

வன்னிய மக்கள் கூறுவது போல் அவர் குருவான சம்புவா? (யாகத்தில் அக்கினி வம்சத்தை தோற்றுவித்தவர்)

ஈரடியில் உலகளந்த வாமனனா? (வடக்கிருந்து வந்ததாக அனுமானித்து மாவலியிடம் நிலம் பெற்றதாகக் கொண்டு)

 

அறம்பிழைத்த அரசரை வீழ்த்திய பரசுராமனா?
(வீழ்த்திய அரசரைக் கொண்டு செய்த யாகத்தைக் காத்தவர்களை அக்கினி வம்ச அரசராக்கியதாகச் செப்பேடுகள் உண்டு)

கஷ்மீரத்து கஷ்யபரா? (இரா.இராகவய்யங்கார் அவர்களின் ‘தமிழகக் குறுநில வேந்தர்’ நூல் படிக்க)

என்று பலர் என் சிந்தைக்குள் வந்து சென்றதுண்டு!

“தடவினுட் டோன்றி” என்பதிலும் தடவு என்பதற்கு ஓம குண்டம் என்றும், தடாகம் என்றும் இரு வேறு பொருள்கள் கூறுகின்றனர்.

“வடபால் முனிவன்” என்று நேரடியாக வேறு குறிப்புகள் இன்றி மண்டையைப் பிய்த்துக்கொண்டது உண்டு.

இன்று கிடைத்திருக்கும் மற்றொரு குறிப்பு இதற்கு விடை கூறும் என்று எண்ணுவதால் பதிகிறேன்.

 

திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் அகத்தியம் என்னும் பகுதியில் 2 ஆம் பாடல் அது:

“அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதய வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே”

இதில் ‘வடபால் தவ முனிவன்’ என்று சிவபெருமான் குறிக்கப்பட்டுள்ளதை நோக்க. இது மிக முக்கியமான குறிப்பாகும்.

அகத்தியரை தென்பால் முனிவர் – அதாவது பொதிகையில் வீற்றிருக்கும் தமிழ் முனிவர் என்றும், ஈசனை வடபால் முனிவர் – அதாவது கைலையில் வீற்றிருக்கும் ஆதி யோகி என்றும் கூறும் குறிப்புகளால் உணர முடியும்.

வடம் என்பதற்கு ஆல மரம் என்றும் வடமொழியில் பொருள் உண்டு. வடபான் முனிவன் என்பதற்கு இவ்வழியில் பொருட்கூறினும் ‘ஆலமர் செல்வன்’ என்று தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி என்று பொருள்படும். (ஆயினும் புறநானூற்றுப் பாடல் சங்க காலம் என்று கொண்டு வட என்பது திசையைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகவே நான் கருதுகிறேன்).

அதனால் “வடபால் முனிவன் தடவு” என்றது சிவபெருமானின் உச்சிமுடியிலிருந்து வழிந்து ஓடும் கங்கை எனும் பொருள் தொக்கி வருகிறது.

சிவபெருமானின் உச்சியில் இருந்து ஓடும் கங்கையில் பிறந்தவர்கள் வேளாளர்கள் என்பதும்(காங்கேயர்/கங்கை குலம்), அந்த கங்கையை அகத்தியர் தம் கமண்டலத்தில் அடைத்து தென்னகம் வர பிள்ளைப் பெருமான் காக வேடந் தரித்து அதனை தட்டிவிட்டு காவிரியாய் ஓடச் செய்ததும், ‘காவிரிப் புதல்வர்’ எனும் பெயர் உடையவர் வேளாளர் என்பதும் சாலப் பொருந்துகிறது.

வடபான் முனிவன் – சிவபெருமான்
வடபான் முனிவன் தடவு – கங்கை
வடபான் முனிவன் தடவினுட் டோன்றியவர் – கங்கை மைந்தரான வேளாளர்(வேளிர் குல மக்கள்)

என்பது புதிய தெளிவு.

குறிப்பு: முடியுடை வேந்தர்கள் வேளிர்களிலிருந்து வந்தவர்களே என்று கூறும் மரபிற்கு ஒப்ப பண்டைத் தமிழரசர் மரபில் ஒவ்வொருவருக்கும் தசாங்கத்தில் ஒரு ஆற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டிருப்பார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள காசுகளிலும் ஆற்றின் சின்னம் இருக்கும்.

சேரன் – ஆண்பொருநை(அமராவதி)
சோழன் – பொன்னி (காவிரி)
பாண்டியன் – வைகை (கிருதமாலா)

 

என் கருத்தில் வேறுபடுபவர்கள் இதனை மறுக்கலாம். தமது கருத்துகளை வரவேற்கிறேன்.

நன்றி,
அந்துவன் தனேஷ்.

படம் 1: பொழிப்புரை, குறிப்புரையுடன் திருமந்திரப் பாடல்
http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10201&padhi=%20&startLimit=2&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

படம் 2: அகத்தியர் வேளிருடன் தென்னாடு வந்த கதை சொல்லும் நச்சினார்க்கினியர் உரை
https://nhampikkai-kurudu.blogspot.com/2013/11/blog-post_27.html

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *