ஜாதி என்பது பிறப்பொழுக்கம்! ஜாதியின் நன்மை என்ன? ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா? ஜாதி மாற முடியுமா?

1

#ஜாதி என்பது கடந்த காலத்தில் பிறப்பொழுக்கமாக கைக் கொள்ளப்பட்டது.

 

ஒரு ஊரில் எல்லாரும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து தற்சார்பாக நீடூழி வாழ வேண்டும் என்றால் ஜாதிமுறை தான் ஒரே வழி. ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு தொழிலோடு வாழ்ந்தன. அவை ஒவ்வொன்றும் அவ்வூரின் இயக்கத்துக்கு உறுப்புக்களாய் இயங்கின.

எப்படி அப்பன் சொத்து மகன் வழியில் உரிமையாக வந்ததோ அதே போல தான் தொழில்களும், சிறப்புகளும், மரியாதைகளும் கூட உரிமையாக தலைமுறை தலைமுறையாய் வந்தது. யாரும் அடுத்த ஜாதியிடம் போட்டி போட முனையவில்லை.

காரணம் ஒரு பிறவியில் ஒரு ஜாதியில் பிறப்பது அவரது பூர்வ கர்மவினையால் நிகழ்வது. அது அப்பிறவியில் அந்த ஜாதியில் பிறந்தவர் அந்த ஜாதிக்குரிய கடமைகளை நிறைவேற்றி வரவேண்டும், அப்போது தான் அவ்வூர் அமைதியாக பல்லாண்டு காலம் இயங்கும் என்கிற புரிதல் பெரியோர்க்கு இருந்தது. ஊரை விட்டு யாரும் வெளியே போகவில்லை. வெளியூரில் இருந்து யாரும் உள்ளே வரவில்லை. உரிமைகள் பேணப்பட்டது. அவர்கள் வாழ்ந்த மண்ணின் மீது பற்றும் இருந்தது.

 

மேன்மை கீழ்மைகள், வேற்றுமைகள் இருந்தாலும் அதனை விதிப்பயனாக, விதிக்கப்பட்ட கடமையாக கருதினர். பிறிதொரு ஜாதியுடன் போட்டி போடவோ, பொறாமை கொள்ளவோ துளியும் அவர்கள் எண்ணியதில்லை.

பெரும்பாலானவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செய்தனர். அதனினும் மேலாக அவ்வுலக வீடு பேற்றிற்கான நோக்கம் அவர்களிடம் இருந்தது.

இதைத் தான் கர்மயோகம் என்றனர். கிருஷ்ணன் சுதர்மத்தைக் கைவிடாதே என நீளமாக அர்ஜுனனுக்கு ஆற்றிய கீதையின் சாரம்சமும் அதே. ‘கடமையை செய் பலனை எதிர்பாராதே!’ என்பதின் அர்த்தம்!

ஜாதிப் பெருமை என்பது ஒருவர் தன் ஜாதியின் கடமைகளாக முன்னோர் விதித்த கடமையை பெருமிதத்துடன் செய்வதற்கே அன்றி அடுத்தவரை மட்டம் தட்டவும் இழிக்கவும், வீணில் பொழுதுபோக்கவும் கற்பிக்கப்படவில்லை.

 

இன்றைய ஜாதி முறை முக்கால்வாசி திரிந்து பல அணிகளுக்கு இடையே நடைபெறும் கும்பல் சண்டை போல் உருமாறியிருக்கிறது. இது நமது இந்து சமயங்கள் சொல்லும் ஜாதி முறைக்கு முற்றிலும் மாறுபட்டு அதன் உன்னத பலனை அழிப்பதாகவே செயல்பட்டு வருகிறது.

நகரமயம், உலகமயம், தாராளமயம் எனும் சுழல்களில் சிக்கி, சமத்துவம், சமவாய்ப்பு என்று கூறி, ஜாதிகளுக்குள் பகையை வளர்த்து, ஜாதிகளை அணிகளாக்கி, அதற்கு வித்தாக பொதுக் கல்வியைக் கொடுத்து, மரபாக வந்த பொறுப்புகளை கடமைகளை மறக்கச் செய்து, காசு பணம் சொத்து சுகங்களின் பின் அலைய விட்டு, இட ஒதுக்கீட்டில் போட்டி போட வைத்து, பாரம்பர்யமாய் செய்து வந்த தொழில்களை விட்டுத் துறத்தி, வாழ்ந்து வந்த கிராமங்களை விட்டு வெளியேற்றி, கோவில் மற்றும் உழவை மையமாக வைத்து நடந்த நாகரிகங்களை எல்லாம் அடியோடு ஒழித்து, நாடோடிகளாய் பெற்றோரை விட்டு பெற்ற மனைவி பிள்ளைகளை விட்டு சொந்த பந்தங்களை விட்டுவிட்டு ஊர் ஊராக நாடு நாடாக ஆளுக்கொரு திசையில் ஆளுக்கொரு தொழிலில் இன்று நரகத்தை நோக்கி நகர்ந்து வருகிறோம்! நகர்த்தியிருக்கிறார்கள்.

 

ஓடிக்கொண்டிருப்பவர்கள் நீ முதலா நான் முதலா என நீரூபிக்க போட்டிப் போட்டுக் கொண்டே ஓடிக்கொண்டிருப்பார்கள். ஓட விட்டவர்கள் அவர்கள் விட்டுச் சென்ற பரிசுகளை அள்ளிக் கொண்டே வருவார்கள். நடக்கிறது!

 

தொடர்புக்கு :

ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *