சைவம், அசைவம் உண்பது பற்றிய கட்டுரை : கர்மவினை பற்றியதும் : திருக்குறள் பற்றியும் :

அசைவம் உண்பது பற்றி.

“தாவரங்கள் கூட உயிரினம் தான்…
தண்ணீரில் கூட நுண்ணுயிர்கள் உள்ளது…
நீ ஏன் அதெல்லாம் மட்டும் சாப்பிடற?”

வைதிக சமயங்கள் கர்ம கோட்பாட்டை முன்னிறுத்துபவை. ஒருவன் தான் முன் செய்த கர்மத்தால் தற்போது எடுத்திருக்கும் பிறவியில் தன் யோனி வகை, குலம், குடி சார்ந்த ஒழுக்கங்களின் மூலம் மேலும் அவனை ஒரு படி மேலே கொண்டு சென்று அடுத்த பிறவிக்கு தயார் படுத்துவது என்பது தான் வைதிக சமயங்களின் நோக்கம்.

புலால் உண்ணாமையில் ஐயன் திருவள்ளுவர் வலியுறுத்தி இருப்பதும் அது தான். உயிர்களிடையே பல்லடுக்கு உறவு வட்டங்களை நமது பண்பாடு நிறுவுகின்றது. தான் – தன் குடும்பம் – தன் சுற்றம் – தன் ஊரார் – தன் தாயாதிகள் – தன் உறவுகள் – தன் சாதி – தன் சமயத்தார் – தன் நாட்டார் – தன் மொழியார் – மனித இனம் – விலங்குகள் – பறவை – ஊர்வன – நீர் வாழினங்கள் – மரங்கள் – செடிகொடி பயிர்கள் என உள்ளிருந்து வெளியாக மனித இனத்துக்கு நெருக்கமானவற்றிலிருந்து விரிவு படும் உறவு முறை இனவரையறைப்படுத்தல் பற்றியது. தன்னைப் போன்றே மாமிச உடற்கூறை உடைய உயிரினங்கள் ஒரு வகையாகி ஒரே வட்டத்துக்குள் வருகின்றன . தனது உடலைப் போன்றே இரத்தமும் சதையுமாக உள்ள ஒரு உயிர்வகையைக் கொன்று உண்ணுதல் என்பது அதன் வலி உணராது தன்னைத் தான் உண்ணுவதற்குச் சமம் என்று கூறுகிறார். ஒரே இனமாக இருந்தும் அதன் துன்பத்தை உணர்கின்ற ஒரே உடற்கூற்றை பெற்றிருந்தும் அதனை உணராமல் மாமிசம் புசிப்பது அருள் இன்மை என்று குறிக்கிறார் ஐயன்.

பதின்ம வயதில் பள்ளியில் ஒரு நிகழ்ச்சியில் ஆன்மிக வழிகாட்டியாக வந்திருந்த சிறப்பு விருந்தினர் ஒருவர் சொன்னது… தான் கொல்லப்படுவோம் என்கிற போது தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் உயிரைக் கொல்லக் கூடாது (ஜங்கமம் எனும் நகரும் உயிரனங்கள்). அவ்வகை உணவுகள் அசைவம். இயற்கையாகவே அப்படியான காலத்தில் ஓடாத உயிரினங்கள் (தாவரம் எனும் நகராத உயிரினங்கள்) உண்ணத்தக்கவை. அவை சைவ உணவு.

இல்லை தாவரங்களும் உயிர்தான்; அவைகளையும் கொள்வது இம்சை. வாடிய பயிரைக் கண்டபோது வாடினார் இராமலிங்க அடிகள் என்பார்கள். சாஸ்திரங்களும் அவற்றை விவரிக்கின்றன. குறிப்பாக உழவு முதலிய தொழிலில் பயிர்கள் வெட்டப்படுகின்றன, பதர்கள் அழிக்கப்படுகின்றன, புழுக்கள் வெட்டுப்படுகின்றன, பூச்சிகள் விரட்டப்படுகின்றன. அவற்றின் பாவங்கள் எப்படிப் போக்கப்படுகிறது என்பது பற்றியெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளது.

உழவை மேன் மூன்று குலங்களாகிய அந்தணர், அரசர், வணிக பாலார் மேற்கொள்ளக் கூடாது என்பதற்கான காரணங்களில் அதில் உள்ள உயிர்க்கொலை சார்ந்ததுமாகும்.

உழுதுண்ணும் குடிகள் அப்பாவத்தை தாம் ஏற்றுக் கொண்டு உலகோர்க்கு படியளப்பதாகச் சொல்வார்கள். அதனால் தான் உழுவோர் உலகத்திற்கு அச்சாணி என்பார்கள். அதிலும் ஒரு வகை அறம் பேணப்படுகிறது. பயிர் முற்றி முதிர்ந்த தளர்ந்த பின்பே அறுவடை செய்வது. கன்று உண்டுவிட்டு மிஞ்சிய பாலையே தாம் கரப்பது. அழித்த பயிர்களுக்கு ஈடாக அடுத்த விதைப்பின் மூலம் அவ்வினத்தை மீண்டும் விருத்தி செய்வது. வயலின் விளைவுகளை இறைவனுக்குப் படையல் இடுவதின் மூலம் பயிர்களுக்கு நற்கதியும், பற்றுதலின்றி உலகோர் மாட்டு செய்வதால் கர்ம யோகமாகவும் அமைத்துக் கொள்வது. வயல்வெளிகளைத் சுற்றி பொலிகள், வேலிகள், அதைத் தாண்டி இன்ன பிற பொது இடங்களை விட்டு வைப்பதால் பிற உயிர்களை வாழ விடுதல் என.

நல்ல உழவன் வயலிலே விளையும் பயிர்களாகிய உயிர்கள் அவன் மூலம் மேன்மையான சூழலையும் பெற்று உயிர்களின் பசிப் பிணியும் தீர்த்து இறைவன் பெயரால் படைக்கப்படுவதால் நற்கதியும் பெறுகின்றன.

சரிப்பா அப்படினா ஆடு கோழி காடை கௌதாரிக்கும் இது பொறுந்தும்ல?

வைதிக சமயங்கள் வெறும் தத்துவ ரீதியாக இயங்குவதில்லை. ஆயுள் வேதம், யோகம், ஜோதிடம் என பல கூறுகளை உள்ளடக்கியது.

ஆயுள்வேதப்படி மாமிச உணவுகள் தாமஸ குணத்தை வளர்க்கக் கூடியவை. வாத பித்த கப சமநிலையை பாதிக்கக் கூடியவை என அனுபவத்தில் குறித்து வைத்துள்ளனர். அவை அரியதாக சில நோய்களுக்கு மருத்துவம் செய்ய விதிவிலக்குடன் பரிந்துரைக்கப்படுகின்றன. நோய் தீர்ந்த பின் மனதாற சில பிராயசித்தங்கள் மட்டும் உண்டு.

மாமிச உணவுகளில் உள்ள மிகுதியான சத்துக்கள் புலன் உணர்வுகளைத் தூண்டுபவை. ஆன்ம லாபம் வேண்டுவோர் அப்படி புலன் உணர்வுகளுக்கு ஆட்படாமல் இருக்க மாமிசம் தவிர்க்கப்பட வேண்டும் என்கின்றன.

ஜோதிடம், தந்திர முறைகள் ஒவ்வொரு விலங்கையும் – மாமிசத்தையும் ஒவ்வொரு வகை தேவதைகளுடன் சம்பந்தப்படுத்திக் கூறியுள்ளன. அவற்றால் அந்தந்த தேவதைகளின் நட்பு – பகை உண்டாகும் என்பது நியதி.

சில கருப்பு தேவதைகள், காவல் தெய்வங்களுக்கு பலி படையல் இடுவது உண்டு. அப்போதும் நமது புலன் இன்பம் சாராது அந்த தேவதை கணங்களின் திருப்தி தான் முதல் நோக்கமாக இருக்க வேண்டும். அதில் பலியிடும் முறைகளில் சிறு அறங்கள் உண்டு. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்பார்களே. பலி கொடுக்கப்படுவதை அறிவுறுத்தாது கூட்டி வந்து, ஒரே வெட்டாக கழுத்தில் போட்டு, வலி அறியாதவாறு, உயிர் பிரிவதை அறியாத வண்ணம் சாய்ப்பார்கள். அப்படி பலியிட்ட உணவுகளையும் கூட அசைவம் உண்ணாதவர்கள் அதற்குரிய ஒழுக்கநிலையில் உள்ள தமது கீழ்க் குடிகளிடமும் குடி படைகளிடமும் ஒப்படைத்துவிடுவார்கள்.

இதே தர்க்கம் தான் போர்க்களத்திலும். உயிர் போகும் என்று தெரிந்தும் தைர்யத்துடன் வரும் ஒருவனை தான் போரில் வெட்ட வேண்டும். அதனால் பாவம் வருவதில்லை. அங்கே வெட்டப்படுபவன் கோழையாகி புறமுதுகிட்டு ஓடும்போது அவனை வருத்தினால் அவன் பெறும் வருத்தம் நமக்கு பாவத்தை விளைவிக்கிறது. வீரன் பொறுத்துக் கொள்வதால் வெட்டுபவனுக்கு பாவமில்லை. மாறாக வீர மரணம் வீர சொர்க்கம் என்னும் மேலான நிலையை அளிக்கிறது.

மது – மச்ச – மாமிச – மைதுனம் என்னும் வாமாச்சாரங்கள் குறுக்குவழி போன்றவை. பலனை சீக்கிரம் அடைய பயன்படும் வழிமுறைகள். உரிய முறையில் கடைபிடிப்போர்க்கு சில சித்திகள் உண்டாகலாம். எளியோர்க்கு மிகக் கடுமையானவை. அதனை தவறாகப் புரிந்துகொண்டு இன்பத்திற்காக உள்ளே சென்று தவறினால் அதலபாதாளத்தில் கொண்டு இட்டுவிடும் என்பது நம்பிக்கை.

உயிர்களின் படிநிலையில் தாவரங்கள் கீழே இருப்பதால் அதன் மூலம் வரும் தாக்கம் குறைவு என்பதும் பரிந்துரை. அதனால் மேலான ஆன்ம லாபம் விரும்புவோர் எளிய முறையில் உயர்ந்த எண்ணங்களோடு சைவ உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வீர்யத்தை வீண் விரயம் செய்யாத ஒழுக்கமாக வாழ்வதே உத்தமமாகக் கூறப்படுகிறது.

சரி அதென்னா மாடு மட்டும் மகா புனிதம் … ஆடு கோழி மீன் என்றால் மட்டும் போங்கா இருக்கே?

தர்ம சாஸ்திரம் – ஆயுள்வேதம் – யோகம் – தந்திரம் – ஜோதிடம் எல்லாவற்றின் படியும் பசு என்னும் மாடு அனைத்து உயிர்களிலும் மிகவும் புனிதமானதாகக் கருதபடுகிறது. சர்வ தேவாதி தேவர்களையும் தன்னகத்தில் கொண்டிருக்கும் காமதேனுவாகவும் நந்தி தேவராகவும் பசுக்கள் போற்றப்படுகிறது. அதனை வெட்டுவது துன்புறுத்துவது மாபெரும் பாவத்தை அளிக்கக் கூடியதாகும்.

வைதிக சமயம் சமன்பாட்டை உடையது அல்ல. நுண்மையான வேறுபாடுகளையும் பல படிநிலைகளையும் தன்னுள் வரித்துக் கொண்ட சமயம். பகுத்தறிந்து வகைப்படுத்துவது தான் அதன் வழிமுறை. மனிதர்கள் ஆனாலும், உணவு ஆனாலும், வழிபாட்டு முறை ஆனாலும் சரி பல வேறுபாடுகளையும், படிநிலைகளையும், உண்மைகளையும் உள்ளது உள்ளவாறு ஏற்பதாகும். எதனையும் ஒரு படிநிலையில் வைத்து மட்டும் பார்த்து சமத்துவம் பேசாது.

உத்தமம் – மத்திமம் – அதமம் என்று படிநிலைகள் உண்டு. ஒரு நேரம் சாப்பிடுபவது, பால் பழங்கள் மட்டும் சாப்பிடுவது, நீர் மட்டும் அருந்துவது, எச்சில் கூட முழுங்காமல் இருப்பது என்று விரத முறைகளில் எப்படி படிநிலைகள் உள்ளதோ அதே போன்றது தான் உணவிலும். மாட்டுக் கறி தவிர்த்தல், ஆடு-கோழி-மீன் தவிர பிறவற்றை தவிர்த்தல், அதிலும் மீன் தவிர்த்தல், அதிலும் ஆடு கோழி தவிர்த்து தாவர உணவு மட்டும் உண்ணல், அதிலும் காளான் தவிர்த்தல், அதிலும் கருணை கிழங்கு தவிர பிற கிழங்குகளை தவிர்த்தல், வெங்காயம் – பூண்டு ஆகியவற்றை தவிர்த்தல், உவர்ப்பு-புளிப்பு-காரம் தவிர்த்தல், சத்துவ உணவான பழங்களை மட்டும் உண்ணுதல் என்ற படிநிலைகள். இது தான் ஒவ்வொரு படியாக சமய சாதகர்களை மேல் நிலைக்கு ஏற்றும் நமது சமயங்களின் வழிமுறை ஆகும்.

ஆண் பெண் வேறுபாடு எதற்கு… எல்லாரும் மனிதர் தானே என்னாது. எல்லாரும் மனிதர் தான். ஆனால் ஆண் பெண் வேறுபாடுகளும் அதைத் தாண்டி உள்ளது. எல்லாம் உயிர் தான் ஆனால் யோனி பேதங்கள் – அறிவு எண்ணிக்கை பேதங்கள் உள்ளது. எல்லாம் உணவு தான் அதை தாண்டி சைவ – அசைவம் உள்ளது. இப்படி ஒன்றனை ஒன்றோடு சேர்த்தும் வேறுபடுத்தியும் அடுக்கியும் வகைப்படுத்துவது தான் உண்மையான பகுத்து (வேறுபடுத்தி) அறிவு, அது தான் வைதிகம் (உயர் ஞானத்தின் பாதை).

கட்டுரையாளர் : 

கொங்கு வேளாளர் சாதியில் அந்துவன் கூட்டத்தை சார்ந்த திரு.தனேஷ் கவுண்டர் ஆவார்.

மேலும் தொடர்புக்கு : 

ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *