சைவ சித்தாந்த பண்டித பூஷ்ணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பிரச்சாரம் செய்தது எதனை?

ஆகமங்கள் இன்றேல் ஆலயங்கள் இல்லை!

சைவ சமய வளர்ச்சிக்காகவும், சைவ சமயிகள் தம் அடையாளத்தை பறிகொடுத்து விடாமல் தக்க வைத்துக் கொள்ளவும் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பி்ளளை அவர்கள், தம் வாணாள் முழுவதும் சில விஷயங்களை வலியுறுத்தி வந்தார். அவை:

1. சைவ விதி, சைவ சமயம், சைவ சமூக நிலயங்கள் ஆகியவை தம்முள் தொடர்புடையன. அத்தொடர்பு மிகவும் முக்கியம். அஃதறுந்தால் அவை சிதறும். பிறகு அவை தனித்தனி பகைவர்க்கு இரைதான். சைவ சமூகம் அதை உணர்க; அம்முதல் நுால்களில் விதித்தவாறே வாழ்க. அதுவே சைவ வாழ்வு. அதன் பொருட்டு ஆற்றப்படுவதே சைவ சேவை.

2. மறைகள் நிந்தனை, சைவ நிந்தனை பொறா மனம், தீமையாம் புறச்சமயங்கள் ஒழித்திடு திறன், நினைவில் வேறொரு கடவுளை வழிபடா நிலை, இம்மூன்றுமே சைவ சமய மானம்.

3. சைவம் எத்தனை மொழிகளில் இருக்கட்டும். அது ஒரே சமயந்தான். மொழி பற்றி அதை நோக்குவதும், பிளப்பதும், அழைப்பதும் சமயாபிமானமே ஆகா; தமிழகத்துச் சைவருக்குத் தமிழும், சம்ஸ்கிருதமும், இரண்டு கண்கள். தெய்வீக சைவ நூல்கள் அவ்விரண்டிலுமுள. ஆகலின் சைவம் அக்கண்ணொளி. ‘ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன்’ என்றது திருமுறை. அப்பயனாவது சைவ சமயமே.

4. சைவாலயங்கள் சிவாகம விதிகளின் படியே நிர்வகிக்கப்பட வேண்டும்; பாதுகாக்கப்பட வேண்டும்.

5. சைவாலயங்களில் சிவாகம விதிப்படியே விழாக்கள் தொடங்கி சொற்பொழிவுகள், சமயப் பிரசாரங்கள் நடைபெற வேண்டும். அதற்கு சைவ சமயிகள் அவற்றின் நிர்வாகத்தில் பங்கேற்க வேண்டும்.

6. சைவாலயங்கள் மொழி நிலயங்கள் அல்ல; அவை சமய நிலயங்களே. அவற்றில் மொழிச் சண்டை, இனச் சண்டை, அரசியல் சண்டைகளுக்கு இடமில்லை. அவை ஆகமங்களின் வழியில் அமைந்தவை. அதனால் ஆகமங்களைப் போற்றிக் கொள்ள வேண்டும். ஆகமங்கள் இன்றேல் ஆலயங்கள் இல்லை.

7. ஆலய நிர்வாகங்களில் சைவ சமயிகள் பங்கெடுப்பதற்கு ஏதுவாக, தமிழ், வடமொழி இரண்டிலுமுள்ள சைவ சமய அடிப்படை நுால்களையாவது கற்றுக்கொள்ள வேண்டும்.

8. வடமொழி, சைவ சமயிக்கு அந்நியமல்ல; அவனது சமயம் சார்ந்த அத்தனை பொக்கிஷங்களும் அதில்தான் உள்ளன. எனவே எப்பாடுபட்டாவது அதை அவன் கற்றுக் கொள்ள வேண்டும்.

9. பார்ப்பனரும் தமிழ்ச் சைவரும் வடமொழிப் பயிற்சியை தடுக்கவும் ஒழிக்கவும் முனைவர். அதனால் சைவன் அவர்களை ஒரு பொருட்டாகக் கருதவே கூடாது.

10. வடமொழி, பாரத தேசம் முழுமைக்கும் எல்லார்க்கும் சொந்தமானது. ஒரு சாராருக்கே சொந்தமானது என்பது பொய். சம்ஸ்கிருதம் பயில அனைவருக்கும் உரிமை உண்டு.

11. கிரந்த லிபி மீண்டும் இத்தேசமெங்கும் பரவ வேண்டும். அதனைப் பரப்புதற்கு உரியார் தமிழரே.

12. சைவாலயங்களில் சைவ சமயப் பிரசாரத்திற்கென மாநிலம் தழுவிய அளவில் ஒரு குழு அமைத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குழுவின் சான்று பெற்ற சைவ சமயிகளையே பிரசாரகராக சைவாலயங்களில் அனுமதிக்க வேண்டும். இலக்கியம் பேசுவோர், மற்ற மதங்களைத் துாக்கிப் பிடிப்போர், சைவம் என்ற போர்வையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்போருக்கு அனுமதி அளிக்கக் கூடாது. இவர்களால் சைவம் வளராது; மொழிவெறி மட்டுமே வளரும்.

13. தமிழகத்தில் சைவாலயங்கள் பாதுகாக்கப்படுவதற்கு, அகில இந்திய அளவிலான வைதிக சைவ சம்மேளனம் என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த அமைப்பு மூலம் பாரத அளவில் உள்ள சைவ அமைப்புகளின் ஆதரவைப் பெற வேண்டும். பாரத அளவில் நாம் சைவர் என்ற ஓர்மை உருவாகப் பாடுபட வேண்டும்.

14. மொழி, இனம், பிரதேசம் அடிப்படையிலான குறுகிய உணர்வுகளுக்கு சைவ சமயிகள் இடம் கொடுத்துவிடக் கூடாது. அந்த உணர்வுகள் சைவ சமயத்தை ஒடுக்கி விடும். சமயத்துக்கு எல்லை கிடையாது.

15. சைவாதீனகர்த்தர்கள், பாரத அளவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, சைவ சமயத்திற்கான ஒருங்கிணைப்பைப் பலப்படுத்த வேண்டும்.

16. சாதியை விட சமயம் மேல். அதனால் சைவ சமயியாக இருப்பதே உயர்வானது.

17. சைவ சமூகத்துக்குப் பிற சமயங்களின் கலவை சிறிதுமில்லாத சைவத்தையே போதிக்க வேண்டும். அப்பண்பையே புகட்ட வேண்டும். அவ்வார்வத்தையே வளர்க்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலமே அச்சமூகம் பெருங் கூட்டத்தில் கரைந்து உரு மறைந்து போகாமல் காக்கப்படும்.

18. சாதியைப் பழிக்கும் பிரசாரமாவது, சைவாலயங்களில் ஆதிசைவரே அர்ச்சனையாதிகள் செய்ய வேண்டுமென்ற சிவாகம விதியை அதிக்கிரமிப்பதற்குச் செய்யப்படுகிற முன்னேற்பாடேயாகும்.
– சைவ சமயத்தில் மொழிப்போர் நுாலின் பதிப்புரையில் இருந்து…

#ஆகமங்கள்
#சிவாகமங்கள்
#சிவாலயங்கள்
#சைவாதீனங்கள்
#தமிழ்வழிபாடு
#வடமொழி

கட்டுரையாளர் : நெல்லை சொக்கர் 

மேலும் தொடர்புக்கு : 

ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *