வேளிர்கள் யார்? வைசியர் யார்? வேளாளர்கள் அரசர்களா? வேளாளர்கள் சூத்திரர்கள் மட்டும் தானா? வீழ்குடியினர் யார்?

வேந்தர் கால ஆதாரங்களுடன் மூவகை வீழ்குடி உழவர் / மூவகை வேளாண் காணியாளர்கள்:

Image : தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகம் 

விதண்டாவாதிகள் சிலர் என்னிடம் காணி என்றால் 1.32 ஏக்கர் நிலம் தானே! அதை வைத்திருப்பவர்கள் எப்படி அதை வைத்து எப்படி அரசோச்சியிருக்க முடியும் என வினவினார்கள்… நியாயமான கேள்வியாக இருந்ததால் மூவகை காணிகளையும் முந்தைய பதிவில் ஒரு பகுதியில் 1) நாடாளும் & ஊராளும் உரிமையை குறித்த காணி ஒரு வகை, 2) ஊரில் உள்ள பெருவாரியான நிலத்தின் மீதான உரிமையை குறிக்கும் காணி ஒரு வகை & 3) 1.32 ஏக்கரை மட்டுமே குறிக்கும் காணி ஒரு வகை என விளக்கியிருந்தேன் 👇🏻…

ஆனால் இதற்கு சமூக ஆவணங்களில் அல்லாமல் வேறு ஆதாரம் வேண்டும் என்று கேட்டார்கள்… அதுவும் சிலப்பதிகாரம், புறநானூறு, வேந்தர் கால நிகண்டுகள் ஆகியவற்றிலேயே உள்ளதையும் இணைத்து விளக்கம் கொடுக்கப்படுகிறது…

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

அடியார்க்கு நல்லார் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்… இவர் பிறந்த ஊர் கொங்கு நாட்டு நிரம்பை என்பதாலும், சோழர்களுக்கு சம காலத்தில் வாழ்ந்தவர் என்பதாலும், அன்றைய காலகட்டத்தில் கொங்கு நாட்டில் சமுதாய அமைப்பு எப்படி இருந்தது என்பதை நன்கு அறிந்தவர் என்பதற்கு இவரின் சிலப்பதிகார உரையே சிறந்த உதாரணமாக விளங்குகிறது…

சிலப்பதிகாரத்தில், புகார்க் காண்டத்தில், இந்திரவிழவூரெடுத்த காதையில், புகார் எனும் பூம்புகார் நகரத்தில் இருந்த குடிகளை பற்றி வரிசையில் வருகிறது… அதிலே “வீழ்குடி உழவர்” என்போரை பற்றி “வீழ்குடி உழவரோடு விளங்கிய கொள்கை” என்ற வாசகம் வருகிறது… இதற்கு 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அடியார்க்கு நல்லார் கொங்கு நாட்டார் என்பதால் மிக தெளிவாக மூவகை வீழ்குடி உழவர்கள் / காணியாளர்கள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார் எடுத்துக்காட்டுகளுடன்…

அவை,

1) வீழ்குடி உழவர் = உழவின் மேல் விரும்பும் குடிகளோடும் உழவரோடும்…

2) வீழ்குடி = காணியாளர்…

3) வீழ்குடி = பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக் குடிப்புறந்தருகுவையாயின், (புறநானூறு 35)

4) வீழ்குடி = யாவரும் விரும்பும் குடி

5) வீழ்குடி = உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர், (திருக்குறள் 1033)

6) வீழ்குடி = குடியோடும் உழவரோடும் என்க… அன்றி உழவில் விரும்பும் குடி எனவுமாம்…

7) வீழ்குடி = உழவின் கண் காமுற்று வாழ்தல்…

8) வீழ்குடி = வேளாண் சாமந்தர் என்பாரும் உள்ளார்கள்…

இப்படியாக வீழ்குடிக்கு 8 விதமான (அதில் சில) ஒன்றுக்கொன்று முரண்பட்ட விளக்கங்களை தருகிறார் நம் அடியார்க்கு நல்லார்…

வீழ்குடி என்றால் வீழ்வதற்கு முன்னே அது வீழாத குடியாகத்தானே இருக்க முடியும்… இந்த வகையில் பார்த்தாலும் மூன்று வகையான வீழ்குடிகள் தான் நாற்பால் மரபில் பிரித்தெடுக்க முடியும்…

அவை,

1) அரசராகவோ / சிற்றரசராகவோ இருந்து பின்னாளில் வீழ்த்தப்பட்டு, வீழ்த்திய வேந்தனுக்கு அடிபணிந்த அரசனாக இருத்தல்‌… இங்கே வர்ணம் மாறுவதில்லை, ஆனால் அரசோச்சும் நிலை மாறியிருக்கிறது… வீழ்குடியே (வேளாண்) சாமந்தர் / சிற்றரசர் என்றால், வீழ்வதற்கு முன்னர்? யோசித்துப் பார்க்கவும்… இந்த வேளாண் சாமந்தர்கள் / நாட்டை – ஊரை அரசோச்சும் காணியாளர்கள் / வேளிர்கள் பற்றி விரிவாக முந்தைய பதிவுகளில் பார்த்தோம்… காணிப்பாடல்களில் தெளிவாக அவர்கள் அரசோச்சுகிற வேளிர் என்றே வருகிறது, நடைமுறை வரலாற்று ஆவணங்களும் அவ்விதமே உள்ளன… நிகண்டுகளில் இவர்களை வேளிர் என குறிப்பிடப்பட்டுள்ளது… இவர்கள் உழுவித்துண்ணும் குடியினர்… நச்சினார்க்கினியர் இவர்களை வேளிர் என்றும் ஒளியர் என்றும் கூறிய உரைகளையும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம்… “சாமந்தர் காணி” பற்றி தமிழக அரசு தொல்லியல் துறை வெளியிட்ட கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டு தொகுதி 1 இல் அந்த 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு வெளியிடப்பட்டுள்ளது… அதே நூலில் நாட்டு சாமந்தர்கள் தான் கொங்கு தேசத்தில் உள்ள நாடுகளை அரசர்களுக்கு கீழாக இருந்து ஆண்டது என்றும், பிறகு அது (வெள்ளாளர் & வேட்டுவர்) நாட்டார் ஆட்சி முறையாக மாறியது என்றும் தமிழக அரசு தொல்லியல் துறை வெளியிட்ட நூல் தெரிவிக்கிறது… இதே கருத்தை ஈரோடு மாவட்ட கல்வெட்டு தொகுதி 3 லும் தமிழக அரசு தொல்லியல் துறை கூறியுள்ளது…

2) அரச நிலையில் இருந்து வீழ்ந்து பூவைசியர் ஆனவர்கள்… பத்தாம் நூற்றாண்டினை சேர்ந்த பிங்கல நிகண்டு (அந்தக்கால தமிழ் அகராதி) மிகத்தெளிவாக வைசியர் பொதுப்பெயர் வேளாளர் என்றும், மூவகை வைசியர்களில் பூவைசியரை மட்டுமே இளங்கோக்கள் என்றும் காராளர் என்றும் பூபாலர் என்றும் மேழியர் என்றும் உழவர் என்றும் கூறுகிறது… கோ , பூபாலன் ஆகியன அரசர் பெயர்கள் என அதே நிகண்டு சொல்லும்… ஆனால் அடுத்ததாகவே பூவைசியரை மட்டும் இளங்கோக்கள் என்றும் பூபாலர் என்றும் குறித்ததால் இவர்கள் அரச நிலையில் இருந்து வீழ்ந்து / உழவின் மேல் கொண்ட காதல் காரணமாக தானாகவே வர்ணம் இறங்கி பூவைசியர்கள் ஆனவர்கள் என்பது கண்கூடு… இவர்களும் உழுவித்து உண்ணும் குடியே… இவர்களுக்கு காணி என்பது ஊரின் ஒரு குறிப்பிடத்தகுந்த பகுதி… கொங்குப் பகுதிகளில் இவர்களும் ஆங்காங்கே உள்ள ஊர்களில் 3 ஆம் காணியாளர்களாக, 4 ஆம் காணியாளர்களாக சிலர் இருப்பதை பார்க்கிறோம்… இவர்கள் பூவைசியர்கள் ஆவார்கள்… ஊராளும் காணியாளர்கள் இவர்களிடம் பெண் எடுத்தாலும் முதற் காணியாளர் மட்டும் தான் அரசோச்ச முடியும்… இவர்கள் பெருந்தனக்காரர் என்ற பதவியுடன் ஊரில் பூவைசியர்களாக மட்டுமே வாழ முடியும்…

3) பூவைசிய நிலையில் இருந்தும் உழவின் மேல் கொண்ட காதலால் விரும்பி இறங்கி / விருப்பமின்றி வீழ்ந்து சூத்திரர் ஆனவர்கள்… இவர்களை நிகண்டுகள் சூத்திரர் பெயரில் முத்தொழிலோர் என அடையாளம் காட்டுகிறது… முத்தொழில் என்ற உழவு, வாணிகம், நிரைகாத்தல் ஆகியன மூவகை வைசியர்க்கு மட்டுமே உரியது என மனு தர்மம் கூட சொல்லும்… ஆனால் இது சூத்திரர்களுக்கு ஆகி வந்தது என்பது வைசியராக இருந்து வீழ்ந்து வீழ்குடி ஆன சூத்திரர்களை குறித்ததே… இவர்களைத்தான் நிகண்டுகள் வாணர், காராளர், வேளாளர், மேழியர், பெருக்காளர், மண்மகள் புதல்வர், வளமையர், முத்தொழிலோர் என்கிறது… நச்சினார்க்கினியர் வேளாளர் அறுதொழிலில் வாணிகம், உழவு, நிரையோம்பல் ஆகியவற்றை சொன்னதும் இந்த முத்தொழிலோர் பற்றியே… இவர்கள் பூவைசியராக இருந்து உழவின்கண் ஏற்பட்ட காதலால் விருப்பத்தோடு வீழ்ந்தவர்கள்… அடியார்க்கு நல்லார் தெளிவாக சுட்டுகிறார், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்ற 1033 ஆவது திருக்குறளையும், யாவரும் விரும்பும் குடி என்று போற்றியும்… புறநானூறு 35 ஐ யும் மேற்கோள் காட்டுகிறார்… இந்த வகை காணியாளர்களும் வரலாற்றில் வருகிறார்கள்… இவர்களுக்கு காணி என்பது 1.32 ஏக்கர் நிலமாகும்…

அரசனாக இருந்து பூவைசியனாகி, பிறகு சூத்திரர் ஆனவர்களும் உண்டு… இதனை பாரதி தீப நிகண்டு, காராளர் பெயரில் “வேளிர்” என குறிப்பிடுகிறது… அரசர் பெயரிலும் வேளிர் என்றும் தனியாக குறிப்பிடுகிறது… பாரதி தீபம் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (~1400) வாழ்ந்த பிராமணரான திருவேங்கட பாரதி அவர்கள் இயற்றியது… ஆக அரச நிலையிலும் வேளாளர் இருந்தார்கள் என்பது இங்கே அடியார்க்கு நல்லாரே வேளாண் சாமந்தர் என்று உரைத்துள்ளார்… சூத்திரர் (சதுர்த்தர்) நிலையிலும் வேளிர்கள் இறங்கியதும் பாரதி தீப நிகண்டில் வெளிப்படையாகவே வருகிறது…

அடியார்க்கு நல்லார் காட்டாத ஒன்றையும் காட்டுகிறேன்… புறநானூறு 230 ல் வீழ்குடி உழவன் பற்றி ஒரு குறிப்பு வருகிறது… விதைத்து, விளைவித்து, உண்டு வாழும் வளத்தை அறியாத வீழ்குடி உழவன், விதைக்க பயன்படுத்தும் விதையை தானே உண்டு பசியாருவது பற்றி வருகிறது… இங்கே வீழ்குடி உழவன் என்பது சாமான்ய உழுகுடி வேளாளன்…

 

கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் 

கொங்கு வேளாளர் 

ஜெய்வந்த் செல்வக்குமார் கவுண்டர் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து எடுத்தாளப்பட்டது 

மேலும் தொடர்புக்கு :

ஒட்டப்பிடாரம்

சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 

9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *