கட்டுக் கதைகளால் களவாடப்படும் சிவன் கோவில்கள்
தமிழ்நாட்டில் 1965க்குப் பிறகு வந்த ஆண்டுகள் ரொம்பவும் கொடூரமானவை. அந்தக் காலகட்டத்தில் பொருளாதார கஷ்டமோ வேலையில்லாத் திண்டாட்டமோ அதிகம். இதில் அதிகம் பாதிப்படைந்தது கிராமக் கோவில்களில் இருந்த அர்ச்சகர்கள். அப்போது கிராமக் கோவில்களுக்கு இன்றுபோல் பெரிய அளவில் வெளியூர்களில் இருந்து வரமாட்டார்கள். விளைச்சலும் குறைந்திருந்ததால் கோவில் நிர்வாகங்களை நடத்துவதே மிகவும் சிரமமான விஷயமாக இருந்தது. கோவில்கள் பாழடைந்தது. வருஷக் கணக்கில் கும்பாபிஷேகம் செய்யப்படாததால் கோபுரங்கள் சிதிலமடைந்தது. பல கோவில்கள் வௌவால்களின் உறைவிடங்களாக மாறிவிட்டது. எதையாவது சொல்லி மக்கள் கூட்டத்தை வரவைத்தால்தான் கோவில்கள் பிழைக்கும் என்ற சூழல். அப்போது ஜோதிடர்கள் கொஞ்சம் கைகொடுக்கத் தொடங்கினார்கள். இந்தக் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்; அங்கு செல்லுங்கள் என அவர்கள் சொன்னதால் கொஞ்சம் கொஞ்சமாக கோவில்களுக்கு மக்கள் கூட்டங்கள் வந்தது.
ஜோதிடர்களில் அப்போது பெரும்பான்மையும் ஸ்மார்த்த பிராமணர்கள் அதிகம். அவர்கள் அதிகம் வசித்து வந்த ஏரியாவில் உள்ள கோவில்களைப் பற்றிய பொய்யான புராணக் கதைகளைப் பரப்பத் தொடங்கினார்கள். அன்றைய நிலையில் செய்தித்தாள்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் மட்டுமே மீடியாக்களாக இருந்தன. அவற்றிலும் வார இதழ்கள் உள்ளிட்டவற்றில் பெரும்பாலானவை, ஸ்மார்த்த பிராமணர்கள் கைகளில் இருந்தது வசதியாகப் போய்விட்டது. கோவில்கள் பற்றிய பொய்யான புராணக் கதைகள் அந்த இதழ்களில் வந்தன. அவற்றை பக்தர்களும் நம்பி அந்தக் கோவில்களுக்குப் படையெடுக்க ஆரம்பித்தனர். அவர்கள் எழுதிய பொய்யான கதைகளில் கவனிக்க வேண்டியது என்ன என்றால், அந்தந்த கோவில்களில் உள்ள அம்பிகை சந்நிதியில் ஆதிசங்கரர் அல்லது யாராவது ஒரு மகான் வந்து ஸ்ரீசக்கரம் அல்லது மேரு வைத்ததால் அந்த அம்பிகை சக்தி வாய்ந்தவளாக மாறி வரங்களை அள்ளிக் கொடுக்கிறாள் என்ற கதை தான். 1980களுக்குப் பிறகு இந்தக் கதைகள் மேலும் தீவிரமாகப் பரப்பப்பட்டது.
அப்படி அவர்களால் பெயர் மாற்றப்பட்ட உண்மையான சிவாலயங்களின் அம்பிகைகள் வரிசையைக் கீழே படியுங்கள்:
1. திருமீயச்சூர் லலிதாம்பிகை – லலிதா சஹஸ்ரநாமம் உருவான தலம் என்ற கதை உருவாக்கப்பட்டுள்ளது – அகஸ்தியருக்கு ஹயக்ரீவர் லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசித்ததாக கதையைப் பரப்பி இருக்கின்றனர். அந்தக் கோயில் பற்றிய பழைய நுால்களில் லலிதா சஹஸ்ரநாமக் கதை இருக்காது. அந்த அம்பிகையின் பழைய பெயர் சாந்தநாயகி. ஆனால் அங்குள்ள க்ஷேத்ர புராணேஸ்வரர் என்ற கோஷ்டத்தில் உள்ள சுவாமி அம்பிகை சிலைகளில் அம்பிகைக்கு சாந்தநாயகி எனப் பெயர் வைத்து விட்டனர், இன்று யார் சொன்னாலும் நம்ப மறுக்கும் அளவுக்கு அந்தக் கதை பரவி விட்டது. கூடவே கொலுசு கதை வேறு. அமோக விற்பனை.
ஸ்ரீலலிதாம்பிகையை தரிசனம் செய்ய வந்த காஞ்சி மகாப்பெரியவர், அம்பிகையை விட்டு செல்ல மனம் வராமல் பிடிவாதம் பிடித்தது அம்பிகையின் பெருமைக்கு ஒரு சான்றாகக் கூறப்படுகிறது – இப்படி விக்கிப்பீடியாவிலேயே எழுதி வைத்திருக்கின்றனர் என்றால் போகிற போக்கைப் பார்த்துக் கொள்ளுங்கள்
அப்படியானால், காஞ்சிபுரத்தில், உபநிஷத் பிரம்மம் மடத்தில் தான் லலிதா சஹஸ்ரநாமம் உபதேசிக்கப்பட்டது என காஞ்சிப் பெரியவர் ஒரு கதை சொல்லியிருக்கிறாரே! அது பொய்யா?

2. காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் – ஆதிசங்கரர் வந்து இந்து அம்பிகையை தரிசித்ததாக கதை எழுதிப் பரப்பி வருகின்றனர். இவளது திருவடியில் ஸ்ரீசக்கரம் வைக்கப்பட்டுள்ளதாக சமீப காலங்களாக இன்னொரு கதை பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.
3. சமயபுரம் மாரியம்மன் – இவளை பிரத்யக்ஷ சண்டிகை என்று கதை விட்டு வருகின்றனர்.
4. திருக்கடையூர் அபிராமி அம்பிகை – இதுவரை இல்லாத மாதிரி, அபிராமி அம்பிகையிடமும் ஸ்ரீசக்கரம் இருப்பதாக கதை பரப்பப்பட்டு வருகிறது
5. வடகுரங்காடுதுறை – இந்தக் கோவில் அம்பிகை அழகு சடையுடை அம்மை – இவள் பாதத்தில் ஸ்ரீசக்ர யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாக கதை உலவி வருகிறது
6. நங்கவரம் – இந்தக் கோவிலில் உள்ள கோமளாம்பிகைக்கு காஞ்சிப் பெரியவரே யந்த்ரம் பிரதிஷ்டை செய்ததாக கூறி வருகின்றனர்
7. திருவிடை மருதுார் – இங்கே பெருநலமா முலையம்மை என்ற அம்பிகை சந்நிதி உள்ளது; அதுபோக இப்போது மூகாம்பிகை என்ற பெயருள்ள அம்பிகை சந்நிதி உள்ளது. இந்த அம்பிகையின் பழைய பெயர் பிடாரி பரமேஸ்வரியார். இவ்வாறு வடக்கு நோக்கி வீரசக்தியாக அமைப்பது ஆகமத்தில் சொல்லியுள்ளதுதான். ஆனால் பிற்காலத்தில் இவளது பெயரை மூகாம்பிகை என்று மாற்றி விட்டனர். பாஸ்கர ராயர் வழிபட்ட மேருவை திருவாவடுதுறை ஆதீனத்தார் இங்கே வைத்துள்ளனர். இரண்டையும் சேர்த்து அந்த அம்பிகை சாக்த மரபிலான சக்தி என்பது போன்ற கட்டுக் கதைகளைப் பரப்பி வருகின்றனர்.
8. திருக்கோடிகாவல் – இந்தத் தலத்தில் உள்ள அம்பிகை திரிபுரசுந்தரி – இவளை துர்க்கையாகவும், ஸ்ரீவித்யாவாகவும் பெயரிட்டு ஒரு தரப்பினர் கதைகளைப் பரப்பி வருகின்றனர். மேலும் இவளே பாஸ்கர ராயருக்கு திருப்பதி பெருமாள் வடிவில் தரிசனம் தந்ததாக ஒரு கதையைப் பரப்பி விட்டனர். இப்போது அந்த அம்பிகையை ஆண்டுக்கு ஒருமுறை நாமம் சாத்தி திருப்பதி பெருமாள் போல் சிவாசாரியார்களே கொஞ்சம் கூட கூச்சமின்றி அலங்காரம் செய்து வருகின்றனர்.
9. சென்னை அருகே திருவொற்றியூர் ஆதிபுரீசர் கோவில் – இங்கு திரிபுர சுந்தரி என்ற பெயரில் அம்பிகை சந்நிதி உள்ளது. இந்த அம்பிகையும் உக்கிரமாக இருந்ததாகவும் ஆதிசங்கரர் இங்கு வந்து ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்ததாகவும் பொய்க் கதைகளை எழுதிப் பரப்பியுள்ளனர்.

10. திருவாரூரில் பாரசைவர்கள் பிடாரி அம்மனை சிவாகமப்படி வழிபட்ட வரலாறுகள் பதிவாகியுள்ளன. ஆனால் அவற்றை அழித்து ஸ்ரீவித்யா என்ற பெயரில் ஸ்மார்த்த சாக்த கலப்பாக மாற்றியுள்ளமையும் நடந்திருக்கிறது. அதேபோல கமலாம்பிகையையும் சாக்த பர சக்தியாக மாற்றி வழிபடும்படி நயினார்களுக்கு நெருக்கடி கொடுத்து நடைமுறைப்படுத்தியுள்ளனர். அப்படி நடந்திருக்கலாம் என்பதற்கு முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகளே சாட்சி. இப்போது திருவாரூர் பழைய ஆகம வழிபாட்டிற்கு மீண்டுள்ளது.
11. இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஆவுடையார் கோவில் எனப்படும் திருப்பெருந்துறை யோகாம்பிகையை சாக்த பரமாக வர்ணித்து, ஒரு நபர் தனிப் பதிவே போட்டுள்ளார். அதில் மாணிக்கவாசகர் ஸ்ரீயோகாம்பாள் அஷ்டகம் பாடியதாகவும் பதிவு செய்திருக்கிறார். இப்படி ஒரு வரையறைக்குள் இல்லாமல் கட்டுக் கதைகள் உருவாக்கம் தொடர்ந்து நடக்கிறது.
இதுபோன்று எண்ணற்ற சிவாலயங்களில் ஸ்ரீசக்ரம், யந்த்ரம், மேரு பிரதிஷ்டை என்ற பெயரில் ஸ்மார்த்த சாக்தத்தைக் கலந்து கோவில் வழிபாடுகளின் அடிப்படை கட்டமைப்பை மாற்றுவதில் ஒரு தரப்பினர் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சாக்த மதத்தில் ஸ்மார்த்த பிராமணர்கள் ஊடுருவியதால் ஏற்பட்ட பல்வேறு ஆபத்துகளில் ஒன்றுதான் சிவாலயங்களில் உள்ள அம்பிகைகளை சாக்தபரமான சக்தியாக மாற்றும் வேலை. உன்னிப்பாக கவனித்தால் திரிபுர சுந்தரி என்ற பெயருள்ள அம்பிகை இடம் பெற்றுள்ள கோவில்களைக் குறிவைத்து அங்கு ஸ்ரீசக்ரம், யந்த்ரம், மேரு நிறுவி கையகப்படுத்தும் வேலை தான் இது.
ஆகமங்களின்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்பிகையை சாக்தபரமான அம்பிகையாக மாற்றுவது, அவளுக்கு ஸ்ரீசக்ரம், யந்த்ரம், மேரு வைப்பது, அல்லது வைத்ததாக கதை பரப்புவது, ஆ திசங்கரர் வந்து கும்பிட்டுப் போனதாக பொய்களை எழுதி வைப்பது, காஞ்சிப் பெரியவரை எப்படியாவது இந்தக் கோவில்களோடு தொடர்பு படுத்திக் கதைகளைப் பரப்புவது என ஒரு தரப்பினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களின் நோக்கம் சிவாலயங்களைக் கைப்பற்றுவதுதான். ஸ்ரீசக்ரம், மேரு, யந்த்ரம், ஆதிசங்கரர், காஞ்சிப் பெரியவர் – இவர்களோடு தொடர்பு ஏற்படுத்தி ஒரு கோவில் கதை வெளிவருகிறது என்றால் அது சர்வ நிச்சயமாக பெரும்பாலும் பொய்யாக இருக்கவே வாய்ப்புள்ளது. ஆதிசங்கரர் வந்து சென்றால், அந்தக் கதையை கல்வெட்டில் மன்னர்கள் செதுக்கி வைத்திருக்க மாட்டார்களா?
பாஸ்கரராயர் காலத்திற்குப் பிறகு தமிழக சைவ சமயத்தில், ஸ்மார்த்தர்களின் சாக்த தாக்கம் பெரிய அளவில் ஊடுருவி மிகப் பெரும் சீர்கேட்டை செய்திருக்கிறது. அது தனி சோகக் கதை.
மேலும் ஏதேனும் தகவலுக்கு :
ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758







